Skip to main content

மராத்திய மொழியில் ஹைக்கூ கவிதைகள் - ஓர் அறிமுகம்*மராத்தியம் என்றவுடன் நினைவிற்கு வருவது சிவாஜியும் தஞ்சாவூர் பக்கம் (இப்போது எங்கும்) வாழும் மராத்தி பேசும் தமிழ் நண்பர்களுமே. பம்பாய் செல்லும் வரை எனக்கும் அப்படியே.

2008-இல் பெங்களூரில் ஒரு அகில உலக ஹைக்கூ திருவிழா (சம்மேளனம் போன்ற ஒன்று ) இருந்த போது அதற்காக மராத்திய மொழியில் ஹைக்கூ என்பது பற்றி பேச ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஏகமனதாக மராத்திய நண்பர்களால் எனக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஷிரிஷ் பை. மிகவும் வயதுமுதிர்ந்த அம்மையார் தன்னுடைய வயதின் காரணமாக வர முடியாதென்று பூஜாவை அறிமுகம் செய்தார்.

மராத்திய மொழி பேசும் மக்கள் ஒன்பது கோடிக்கும் மேல் என்பதும் 1300 வருஷங்களுக்கும் மேற்பட்ட பழமை உடையது என்பதும் சிலர் அறிந்ததே.
  
மராத்திய மொழியில் நான்கு வரி கவிதைகள் உண்டு- அவை சரொளி, கனிகா. வத்ரடிகா மற்றும் பல.  ஹைக்கூ என்பது இவற்றில் ஒன்றாக இல்லாமல் தனி வடிவமாகவே பேசப்படுகிறது.

சில முக்கியமான வித்தியாசங்களை மராத்திய ஹைக்கூ உலகில் வெகு சுலபமாக யாராலும் கண்டுவிட முடியும்.

5-7-5 என்ற சிலபள் முறை இங்கு காணப்படுவதில்லை. இந்தி ஹைக்கூ எழுத்தாளர்களிடையே இந்த வரிசை முறை பெரும்பாலும் காணப்படுகிறது. மற்ற எந்த இந்திய அல்லது ஆங்கில மற்றும் பிரென்ச் மொழியில் உள்ள ஹைக்கூ கவிதைகளில் 5-7-5 என்பது அவ்வளவு கறாராக கடைபிடிக்கப் படுவதில்லை. எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படும் முக்கிய காரணம் ; ஜப்பானிய மொழியின் எழுத்துக்களும் இலக்கண அமைப்பும் வேறெந்த மொழிகளிலும் காணப்படாததால், இந்த
5-7-5 அமைப்பின் கட்டாயம் மற்ற மொழிகளில் ஹைகூவின் அழகையும் கவித்வத்தையும் சொல்லாட்சி பாங்கையும் அழிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று பெரும்பான்மை அபிப்ராயம் பரவாலக உண்டு. மராத்தியமும் இதற்கு விலக்காக இல்லை.

மற்ற மொழி ஹைகூக்களைப் போல மராத்திய ஹைகூக்களும் கீழ்க்காணும் அம்சங்களைக் கொண்டே உள்ளன.

ஹைகூவின் நொடித்துளி ( மொமென்ட்)
ஹைக்கூ அனுபவம்
காட்டுதல் - ( சொல்லுதல் அல்ல; விளக்குதல் அல்ல)
தன் சிந்தனையை ஏற்றாமல் உள்ளது உள்ளபடி காட்டல்
மிகச் சொற்பமான சொற்கள் ( இதற்கும் மேலே சொற்களைக் குறைத்தால் ஹைகூவில் குறை ஏற்படும் என்ற அளவில்) -tight expression
திடீரென மின்னல் பளிச்சிடுவது போன்ற ஒரு வெளிச்சம் அல்லது அறிதல் - ஆங்கிலத்தில் ஆஹா மொமென்ட் என்பது போல.
ஆனால், பெரும்பாலும் எங்கும் காணப்படாது, மராத்தியத்தில் மட்டும் காணப்படுவது என்பது மோனை ( rhyme).  பெருமளவில் எல்லா மராத்திய ஹைக்கூ கவிகளும் மூன்றாம் வரியை இரண்டாம் வரியுடனோ அல்லது முதல் வரியுடனோ ரைம் செய்யும்படியே எழுதுகிறார்கள்.

ஹைகூக்களை இவர்கள் இரண்டு பகுதிகளாகக் காண்கிறார்கள்.  ஒரு பகுதி மற்றொன்றின் பொருளை மேம்படுத்தும். ஒரு பகுதி மற்றொன்றுக்கு ஒரு முறுக்கு அல்லது புரட்டு என்ற வகையில் அமையும் - அதாவது ஒரு ட்விஸ்ட் கொடுக்கும்.

மற்றொரு முக்கிய அம்சம்- ஹைகூக்கள் அன்றாட நடைமுறை உரையாடல் அமையும் சொற்பிரயோகம் கொண்டே எழுதப் படுகின்றன.

மற்ற மொழிகளைப்போலவே இங்கும் இயற்கையை  அல்லது சூழலை 
கூர்ந்து - ஆழ் நிலை தியான பாங்கிலே- பார்க்கும் (intense awareness) தன்மை  ஹைகூ எழுதுவோரிடை காணலாம். இந்த பார்த்தலில் முன்னொன்றில்லாத திறந்த (ஓபன்) தன்மை அடிப்படையாய் காணப்படும். ஐம்புலன்களின் ஊடே - பார்வை, கேட்டல், சுவை, ஸ்பரிசம், வாசம்- அறியப்படும் விஷயங்கள் மட்டுமே இருக்கும். இதில் மனம் என்ற ஒன்று குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 

பருவ காலத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு சொல் , நேரடியாகவோ அல்லது அந்த பருவ காலம் சம்பந்தப் பட்ட ஏதாவது ஒரு குறியீட்டுச் சொல்லாலோ ஹைகூவில் காணப்படுகிறது. இம்மாதிரி சொற்கள் இல்லாத ஹைகூக்கள் இல்லவே இல்லையென்று சொல்ல முடியாது.

பருவம் சம்பந்தப் படாத மனித வாழ்வு - நடைமுறை, அன்றாட வேலைகள், மனித முரண்பாடுகள் காணும் செய்கைகள் - இவைபற்றிய ஹைகூக்களை மராத்திய மொழியில்- ஹைகூசாட்ருஷ் ரச்சனா -   “haikusadrush rachana” ( ஹைக்கூவைப் போன்ற கவிதை என்ற பொருளில்)  என்று சொல்கின்றனர்.


ஹைக்கூ கவிதை என்று சொல்லும் வழக்கம் இல்லை. ஹைக்கூ என்றாலே ஹைக்கூ கவிதை என்றே பொருள். ஹைக்கூ எழுதுபவர்களை ஹைஜீன் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இது பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்று. சிலர் ஹைகூஇஸ்ட் (haikuist) ( similar to novelist) என்றும் சொல்லுவது உண்டு.

1975 முதல் ஹைக்கூ எழுதிவரும் ஷிரிஷ் பை மராத்திய இலக்கிய உலகில் ஒரு பிரபல எழுத்தாளரும் ஹைஜீனும் ஆவார். மராத்திய ஹைக்கூ பற்றிய எந்த ஒரு நூலும் கட்டுரையும் ஷிரிஷ் பை பற்றிய குறிப்பு இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவர் ஒரு பிரபலமான பொது வாழ்வு புள்ளி மட்டுமன்று. மராத்திய ஹைக்கூ மூவ்மென்ட் என்று சொன்னால் அதன் முன்னோடி ஷிரிஷ் பை ஆகும். ஐந்துக்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்களும் , கட்டுரைகளும், ஜப்பானிய மொழியிலிருந்து மராத்தியமொழியில் மொழி பெயர்ப்புகளும் இவரது படைப்புகளாகும். இவரது படைப்புகளும், மற்ற ஹைஜீன்களின் மராத்திய நூல்களுக்கு இவர் எழுதிய முகவுரைகளும் பல ஹைஜீன்களுக்கு வழிகாட்டிகளாய் உள்ளதென்று மராத்திய ஆர்வலர்கள் சொல்கின்றனர். உலக அளவில் மராத்திய ஹைக்கூ பிரபலமானதிற்கு ஷிரிஷ் பை மட்டுமே காரணம் என்றும் பலர் கருதுகின்றனர்.

அடுத்தும் வரும் வரும் சில கட்டுரைகளில்

1 ஷிரிஷ் பை, மற்றும் பூஜா மலுஷ்டே, ஷாந்தா ஷேலகே, சுரேஷ் மாதுரே,  மனோகர் தொடாங்கர் மற்றும் சிலரது ஹைகூக்களைக் காண்போம்.
2 . ஷிரிஷ் பை பற்றும் பூஜா மலுஷ்டே இருவரையும் நான் கேட்ட சில கேள்விகளையும் அவர்கள் அளித்த பதில்களையும் காண்போம்.

** இந்த கட்டுரை எழுதுவதில் பெரிதும் உதவியது பூஜா மலுஷ்டே. மராத்தி தெரியாத நானும் தமிழ் தெரியாத பூஜாவும் செய்த அவியல் இது. ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 .

Comments

மராத்திய மொழியில ஹைக்கூ தெரியாத தகவல்கள்... சுவையாகவும் இருந்தன...

Popular posts from this blog