Skip to main content

சந்தை

 
 
வீட்டில் செய்த
பண்டங்களை
விற்க
கடைகடையாய் ஏறி இறங்கினேன்.
ஒரு கடைகாரனும்
என் பண்டத்தை கடையில் வைத்து விற்க
சம்மதிக்கவில்லை…
பண்டங்களை
நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாளும்
பண்டங்களை செய்தேன்..
விற்பனை செய்ய
தெருவெங்கும்
கூவிச்சென்றேன்.
யார் வீட்டு
கதவுகளும் திறக்கவில்லை
காசு கொடுத்து
வானொலியில் என் பண்டத்தின் பெயரை
ஒலிக்கச்செய்தேன்.
ஒன்று கூட விற்கவில்லை.
சுவரொட்டிகளும்
விளம்பரங்களும்
பத்திரிக்கைகளும்
எதனாலும்
கைகூடவில்லை விற்பனை.
நடுத்தெருவில்
வீசியெறிந்தேன்
என் பண்டத்தை.
வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை
என்னவென்று பார்த்து
பின்னர் சுவைத்தனர்
ஜனங்கள்.
அடுத்த நாள்
பண்டத்தை
சமைக்கத்துவங்கிய போது
வாசலெங்கும்
நுகர்வோர்களின் வரிசை.
                             

Comments