Skip to main content

மௌனியுடன்...


 
சிதம்பரம் 
1969-1971(பிறகும் விட்டு விட்டு)


சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் அழகிய சிங்கர் அவர்களை 
சென்னை புத்தகக் கண்காட்சி ஒன்றில் பார்த்தேன் . நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு வருகிறேன். என் தம்பி சேகருடன் ஸ்டால் ஸ்டாலாகச் செல்கையில் பார்த்தேன். வங்கிப் பெயரைச்சொல்லி அழைத்தேன். என்னைத்தெரிகிறதா என்றேன். 

தியாகராஜன் தானே - ஏன் ஞாபகமில்லாமல் என்றார் ? 
 
எப்படி என்றேன். 
 
இந்தியன் வங்கியைச் சொல்லட்டுமா ? இல்லை தொழில் கவிதையைச் சொல்லட்டுமா என்றார்.
 
தூக்கிவாரிப் போட்டது.
 
எனக்கு ஒரு கவிதை. 
 
ஆனால் தொகுப்பாசிரியரான அவருக்கு - அந்தத் தொகுப்பில் குறைந்தது ஐநூறு கவிதைகளாவது இருந்திருக்கும் என நினைக்கிறேன். என்னுடையதோ ஒன்றே ஒன்று. கணையாழியில் வெளியானது என்று நினைப்பு. 

சிறிது அரட்டை - வங்கி, டிரான்ஸ்பர் பாலிசி பற்றி, இரண்டாண்டு ரூரல் கட்டாயம் பற்றி, புத்தகங்கள், அவரது இதழ் பற்றி..

நானும் அழகியசிங்கரும் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் வெகு அரிதாகவே அதுவும் சில மணித்துளிகளே சந்தித்துப் பேசியிருப்போம்- அவரது வேலை அப்படி; என்னுடையது பர்சனல் அசிஸ்டன்ட் என்ற உத்தியோகம். அந்த சில மணித்துளிகளில் பேசிய வற்றை கிட்ட தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து... 

கொக்குக்கு ஒண்னே மதி ... 
 
ஆரியக் கூத்து ஆடினாலும், கண்ணே காரியத்திலே கண்ணாயிரு ..
 
அழகியசிங்கர் என்னுடைய மௌனி நாட்களைப் பற்றி மீண்டும் நினைவு படுத்தி அதைப் பற்றி எழுதினால்  என்ன என்று கேட்டார். 

இது நடந்தே பல வருஷங்கள் ஆகின்றன . நான் மௌனியுடன் கழித்த நாட்களோ 69-70 களில்.

அழகியசிங்கர் கேட்டபோது நான் சரி என்று சொல்லவில்லை; இருந்தாலும் அது உள்ளுக்குள்ளே நமநம என்று பற்றிக்கொண்டிருந்தது என்றே தோன்றுகிறது.

1969 என்பது நான் கடலூரில் டிக்ரீ முடித்து சிதம்பரத்திற்கு எம் ஏ படிக்க என்று வந்த வருஷம். ஆங்கில இலக்கியம். 

ஜெயகாந்தனின் தீவிர ரசிகன்- அப்போதெல்லாம் எல்லோரும் தான். தவிரவும் அப்படிச் சொல்லுவது அப்போது பாஷனில் இருந்தது. தற்போதைய ஷா ருக் கான் போல. ஜெயகாந்தன் ரசிகர்களோ ஷாருக்கின் ரசிகர்களோ கோபிக்க வேண்டாம். பாபுலாரிடிக்காகச் சொன்னேன். 

மௌனி சார் - அப்படித்தான் அவரை அப்போது அழைப்பது வழக்கம். ஏன் என்று தெரியாது. ஒருவேளை காலேஜில் அழைத்த பழக்க தோஷமோ என்னவோ. 

அப்படி சார் போடுவதில் மௌனிக்குப் பெரிய ஆட்சேபனை - சத்தமான ஆட்சேபனை- இருந்தது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் இருவது வயது சிறுவனின் (என்னுடைய) ரிபீடட் இன்னொசென்ட் சாரை அவரால் கடைசி வரை நிறுத்தவே முடியாமல் போயிற்று.

மௌனிசாரை நான் வெகுநாட்கள் அறியவே இல்லை. அவர் எதித்த வீட்டிலேயே இருந்தபோதிலும். யாரோ ஒரு பெரியவர் - பட்டை பட்டையாக வீபூதியுடன், மேலே ஒரு அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு அந்த வீட்டிற்குள் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன்- மௌனி என்று அறியாமல்.

முதல் அறிமுகம் ஒரு " get out " லே முடிந்தது. சுர்ரென்று முகம் சிவந்து ஆள் காட்டி விரல் நீட்டி, நல்ல வேளையாக வெளியே போடா கழுதை என்று தமிழில் சொல்லாமல் ( என்ன கொறைஞ்சா போயுடும் ? அப்போ என்னவோ அது பெரிய கன்செஷன் என்றே இருந்தது), ஆங்கிலத்தில் get out என்று கொஞ்சம் உரத்த குரலில் சொன்னார். பயந்து கொண்டு வெளியே ஓடி ரோடைக் க்ராஸ் செய்து என் விட்டிற்குள் நுழைந்து விட்டேன். .

ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது போல - பதுங்கிக்கொண்டேன். (I went to the rear most part of the house which used to touch the temple wall in that "car street" in that "temple city").

நிஜமாகச் சொல்லப்போனால் என்னுடைய கெட் அவுட்-க்கு ஜெயகாந்தனே காரணம். ஆனால் ஜெயகாந்தனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை - அப்போதும், எப்போதுமே. 

Comments

inமௌனியுடனான நல்லனுபவங்கள் தொடரட்டும்