சிதம்பரம் 1969-1971 (பிறகும் விட்டு விட்டு) சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் அழகிய சிங்கர் அவர்களை சென்னை புத்தகக் கண்காட்சி ஒன்றில் பார்த்தேன் . நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு வருகிறேன். என் தம்பி சேகருடன் ஸ்டால் ஸ்டாலாகச் செல்கையில் பார்த்தேன். வங்கிப் பெயரைச்சொல்லி அழைத்தேன். என்னைத்தெரிகிறதா என்றேன். தியாகராஜன் தானே - ஏன் ஞாபகமில்லாமல் என்றார் ? எப்படி என்றேன். இந்தியன் வங்கியைச் சொல்லட்டுமா ? இல்லை தொழில் கவிதையைச் சொல்லட்டுமா என்றார். தூக்கிவாரிப் போட்டது. எனக்கு ஒரு கவிதை. ஆனால் தொகுப்பாசிரியரான அவருக்கு - அந்தத் தொகுப்பில் குறைந்தது ஐநூறு கவிதைகளாவது இருந்திருக்கும் என நினைக்கிறேன். என்னுடையதோ ஒன்றே ஒன்று. கணையாழியில் வெளியானது என்று நினைப்பு. சிறிது அரட்டை - வங்கி, டிரான்ஸ்பர் பாலிசி பற்றி, இரண்டாண்டு ரூரல் கட்டாயம் பற்றி, புத்தகங்கள், அவரது இதழ் பற்றி.. நானும் அழகியசிங்கரும் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் வெகு அரிதாகவே அதுவும் சில மணித்துளிகளே சந்தித்துப் பேசியிருப்போம்- அவ...