2.
என் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் நான் பதவி உயர்வு என்ற பெயரில் ஊரைவிட்டு, வீட்டைவிட்டுப் போவதை விரும்பவில்லை. நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன். அப்பாவிற்கு பெரிய வருத்தம். மனைவிக்கு கவலை. உண்மையில் நான் பதவி உயர்வு பெறுவதால் வருமானத்தில் பெரிய மாற்றம் இருக்காது. பெண் புலம்ப ஆரம்பித்தாள். ''ஏன்ப்பா என் திருமணம் நிச்சயம் ஆன நேரத்தில், நீ வீட்டில் இல்லாமல் இருக்கியே?'' என்று.
உண்மைதான். ஸ்ரீதேவி கல்யாணம் நிச்சயமான சமயத்தில்தான் எனக்குப் பதவி உயர்வு வாய்த்தது. கல்யாணம் மே மாதம் நடக்கப் போகிறது. எனக்கு பிப்ரவரி மாதம் இந்தப் பதவி உயர்வு கிடைத்து விட்டது. ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஜனவரிமாதம் நிச்சயமாகிவிட்டது. ஒருவிதத்தில் கல்யாணம் நிச்சயம் செய்தபிறகுதான் நான் கிளம்புகிறேன்.
அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அழகியசிங்கர் ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் அவருக்கு உதவி செய்ய நானும் அலுவலகம் போகாமல் மட்டம் போட்டிருந்தேன். அழகியசிங்கரின் புதிய கதைத் தொகுதி வெளியாகியிருந்தது. புத்தகம் பெயர் ராம் காலனி. அழகியசிங்கர் பரபரப்பாகக் காட்சி அளித்தார்.
நானும், அவரும் ஒரே வங்கியில் பணிபுரிபவர்கள். ஒரே வயதுக்காரர்கள். எங்கள் இருவரையும் யாராவது பார்த்தார்கள் என்றால் ஒரே மாதிரி இருக்கிறீர்கள் என்பார்கள். நாங்கள் இருவரும் பீச்ஸ்டேஷன் எதிரிலுள்ள தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர்களாக வேறு வேறு துறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். இன்னும் சில ஒற்றுமைகளும் எங்களுக்குள் உண்டு. நாங்கள் இருவரும் மேற்கு மாம்பல வாசிகள். இருவரும் ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டில் இருப்பவர்கள். இருவருடைய மனைவிகளும் வேற வேற வங்கிகளில் பணிபுரிபவர்கள். எங்கள் இருவருக்கும் சொல்லி வைத்ததுபோல இரண்டு குழந்தைகள். என் பெண்ணிற்கு நான் திருமணம் ஏற்பாடு செய்வது போல் அவர் பெண்ணிற்கும் அவர் திருமணம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.
என் பையனும் அவர் பையனும் கோயம்புத்தூரில் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல ஒற்றுமைகளும் பல வேடிக்கைகளும் எங்களுக்குள் உண்டு. அதைப் பற்றி இன்னும் சொல்கிறேன்.
(இன்னும் வரும்)
Comments