30.12.2020
துளி : 167
இன்று ரமண மகரிஷி அவதரித்த தினம். கடந்த சில நாட்களாகச் 'சரிதமும் உபதேசமும்' என்ற புத்தகத்தின் 3வது பாகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
கோயிலுக்குப் போய் கடவுளைக் கும்பிடுவதை விட ஆன்மிகமாகச் செல்வதை நான் விரும்புவேன்.
அதனால் ரமணர், (அரவிந்தர் எனக்குப் புரியாது) ஆனால் அன்னையைப் புரியும்) ஜே கிருஷ்ணமூர்த்தி, யூ ஜி கிருஷ்ணமூர்த்தி, சீருடி சாய்பாபா, நிசகர்தத்தா மஹாராஜ் , ஓஷோ என்றெல்லாம் ஆன்மிகவாதிகளை நம்புவேன்.
அவர்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது, அவர்கள் சொன்ன தத்துவங்களைக் கேட்பது என் வழக்கம்.
அவர்களைப் படிப்பதால் அரிய ஆன்மிகத் தகவல்கள் கிடைக்குமா என்று பார்ப்பேன். அதனால்தான் ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பதை விட இதைப் படிப்பதில் விருப்பப்படுவேன். என்னிடம் ஏராளமான ஆன்மிகப் புத்தகங்கள். மனம் சோர்வாக இருக்கும்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன்.
அவர்களைப் பற்றி எழுதப்படுகிற தகவல்களை நான் நம்புகிறேனோ இல்லையோ, நிறையச் சுவாரசியமாக இருக்கும் படிப்பதற்கு.
ஸ்ரீ ரமணரின் சரிதம் படித்தால், அவர் நம் முன்னால் அமர்ந்திருப்பதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. எப்போதோ நடந்த சில அனுபவங்கள் எல்லாம் இப்போதும் நடப்பதுபோல் இருக்கிறது.
உண்மையில் ரமணருடைய வாழ்க்கையில் நடந்த தினசரி நிகழ்ச்சிகளை ஒரு நாட்குறிப்பு குறிப்பு போலப் பல பக்தர்கள் பதிவு செய்துள்ளார்கள். மொத்தம் 8 தொகுப்புகள். ஒவ்வொரு தொகுப்பும் 544 பக்கங்கள். பல அரிய படங்கள். இரண்டு தொகுப்புகளைப் படித்து முடித்து விட்டேன். இப்போது மூன்றாவது தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒரு நாட்குறிப்பு தொகுப்பு போல் இருக்கிறது. இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்.
24.2.1936
ஒரு அமெரிக்கர் இவ்வாறு பகவானை வினவுகின்றார் .
அமெரிக்கர் : கீதையை எப்பொழுதாவது படிக்கலாமா?
மகரிஷி : எப்பொழுதும் (படிக்க வேண்டும்)
அமெரிக்கர் : பைபிளை நாங்கள் படிக்கலாமா?
மகரிஷி : பைபிளும், கீதையும் ஒன்றுதான் .
அமெரிக்கர் : மனிதன் பாவத்தில் பிறந்தான் என்று பைபிள் கூறுகின்றதே?
மகரிஷி : மனிதனே பாவரூபம்தான் . ஆழ்ந்த உறக்கத்தில் மனிதன் என்ற எண்ணம் இல்லை. தேகத்தின் நினைப்பு வந்தவுடன்தான் பாவத்தின் எண்ணம் வருகின்றது. எனவே எண்ணங்களின் எழுச்சியே பாவம்தான்.
இப்படிப் படித்துக்கொண்டே போகலாம் போலிருக்கிறது இந்தப் புத்தகத்தை. ஏதோ கொஞ்சம் புரிவதுபோல் தோன்றுகிறது.
ரமண மகரிஷி பற்றி சின்ன குறிப்புகள். விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், 1879 டிசம்பர் 30ம் தேதி பிறந்தவர் வேங்கடராமன் , மதுரையில், ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 17வது வயதில் மரணம் குறித்த கேள்வி அவருக்கு எழுந்தது. அது தொடர்பாக ஞானம் பெற, திருவண்ணாமலை சென்று, தியானம் செய்தார். திருவண்ணாமலை அடிவாரத்தில்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். 1950 ஏப்ரல் 14ம் தேதி, தன்,70வது வயதில் காலமானார்.
Comments