துளிகள் -
இன்று யோகி ராம்சுரத்குமாரின் பிறந்த நாளும்..
என் பிறந்தநாள் போதுதான் யோகி ராம்சுரத்குமார் பிறந்த நாளும். அல்லது அவர் பிறந்தநாள் போது என் பிறந்தநாளும் வருகிறது.
ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் போது அவரையும் நினைத்துக் கொள்கிறேன்.
என் வாழ்நாளில் ஒரு முறை அவரைச் சந்தித்ததைப் பேசியதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.
2015 ஆம் ஆண்டு என் பிறந்த தினம் போதுதான் வெள்ளம் புயல் அடித்து புத்தகங்களை எல்லாம் நாசமாகிவிட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாய் என் கார் தப்பி விட்டது. புயல் வருவதற்கு இரண்டு நாட்கள் முன் அஜித் படம் பார்க்க காரில் போயிருந்தேன். பார்கிங் பண்ணும்போது என் கார் இன்னொரு கார் மீது மோதி என் காருக்கும் சேதம் அன்று என் காரை நான் பார்க் பண்ணவிலலை . தியேட்டரில் உள்ள ஒருவரைத்தான் பார்க் பண்ணக் கொடுத்திருந்தேன்.
நல்லகாலம் அவர் காரை இடித்ததால் அண்ணாசாலையில் உள்ள மெக்கானிக் கடைக்குப் போகும்படி ஆயிற்று. வீட்டில் வைத்திருந்தால் கார் வெள்ளத்தில் மூழ்கி இன்னும் மோசமாக உருமாறி இருக்கும். ஏன் காரே போயிருக்கும்.
எல்லாம் நம்மை அறியாமலேயே யாருடைய சித்தம் இருக்கிறது.
அந்த ஆண்டு அப்போதுதான் புதிதாக அடித்து அடுக்கி வைத்திருந்த கவிதைத் தொகுதி போய்விட்டது. கூழ் கூழாகி விட்டது. வேற சில புத்தகங்களும் போய்விட்டன.
ஒவ்வொரு முறையும் பெரிய முயற்சி செய்து புத்தகங்கள் கொண்டு வருகிறேன். பதிப்பாளரும் நானே. எழுத்தாளரும் நானே.
எதுவும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் புத்தகங்களைப் படித்துக்கொண்டு இருப்பேன்.
இந்தக் கொரானா காலத்தில் நண்பர்களை உறவினர்களை இழந்து விட்டேன்.
இதெல்லாம் மீறி இந்த ஆண்டு இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஜீரோ டிகிரி பதிப்பாளர் என் கதைகளின் 9 எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள். அப் புத்தகத்தின் தயாரிப்பு ஆங்கிலப் புத்தகம் பார்ப்பதுபோல் இருக்கிறது. அஸ்வினி குமார் என் கதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் பார்க்கும்போது என் புத்தகம்தானா என்ற பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
Dad’s Favourite Newspapaer என்பதுதான் புத்தகத்தின் பெயர். இரண்டாவது புத்தகம் துளிகள் 2 என்ற புத்தகம். ஏற்கனவே துளிகள் 1 என்ற பெயரில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். நான் எப்போதும் 100 பக்கங்களுக்குள் என் புத்தகத்தைக் கொண்டு வருவதை விரும்புவேன். துளிகள் 1 என்ற புத்தகத்தைப் போல் துளிகள் 2. இந்தப் புத்தகங்களை ஒருவர் வாங்கிப் படிக்க ஆரம்பித்தால் கீழேயே வைக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்..
Comments