Skip to main content

ஓஷோவின் பிறந்த தினம் இன்று

 துளிகள்  - 160



அழகியசிங்கர்




மத்தியபிரதேசத்தில் உள்ள குச்வாடா கிôமத்தில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 11ல்பிறந்தவர்ரஜனீஷ் சந்திர மோகன்.  இவர், ஓஷோ என்றழைக்கப்பட்டார்.

ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியில் ஓஷோ கடையில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போவேன்.  59 வயது மட்டும் வாழ்ந்த ஓஷோ 1990 ல் ஜனவரி 19ல் இயற்கை எய்தினார்.


சிறிய வயதிலிருந்து கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் உடனுக்குடன் வாசிக்கும் திறமை படைத்தவர்.  கிட்டத்தட்டப் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பதிலிருந்து விலகியும் போய்விட்டார்.

\
அவருடைய எல்லாப் புத்தகங்களையும் அவர் கையால் எழுதவில்லை.  அவர் சொன்னதை மற்றவர்கள் குறித்துக்கொண்டு புத்தகங்களாக மாற்றி உள்ளார்கள்.  இப்படிப்பட்ட புத்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன.


எந்தச் சிக்கலான தத்துவங்களையும் எளிதாகப் புரியும்படி சொல்லிக்கொண்டே போவார்.

இவர் காலத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நிஸகர்தத்தா மஹாராஜ், யூ ஜி கிருஷ்ணமூர்த்தி என்று பல ஆன்மிக குருமார்கள் வாழ்ந்து வந்தார்கள்.  ஓஷோவை நிஸகர்தத்தா மஹாராஜ் தவிர எல்லோரும் கிண்டல் அடிப்பார்கள்.  குறிப்பாக யூ ஜி ஓஷோவை பயங்கரமாகக் கிண்டல் அடிப்பார்கள்.

இன்றைய ஜெக்கி வாசுதேவ் கிட்டத்தட்ட ஓஷோ ஸ்டைலில்  இருக்கிறார்.  ஓஷோவின் கண்கள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் கண்கள்.  

என்னதான் மற்ற குருமார்கள் கிண்டல் அடித்தாலும் ஓஷோ எழுதிய புத்தகங்கள் முன் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போக வேண்டியதுதான்.  ஓஷோவின் எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும்  ஒவ்வொருவரும் பரவசம் அடையாமல் இருக்க மாட்டார்கள்.  அந்த அளவிற்குத் திறமையானவர்.


அடையார் தியோசாபிகல் நூல்நிலையத்திலிருந்து ஓஷோவின் பதஞ்சலி யோகா ஐந்தாவது பாகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  படிக்கப் படிக்க அந்தப் புத்தகத்தைத் திருப்பிக்கொடுக்கவே எனக்கு மனமில்லை.


சரி, இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது எனக்கு என் நண்பர் கூறியபடி எக்ஸ்பிரúஸô காப்பி குடித்த மாதிரி இருக்கும். ஆரம்பித்தில். ஒரு கதைப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தூக்கிப் போடுவதுபோல் இம்மாதிரியான புத்தகங்களும் என்று எனக்குத் தோன்றும்.  ஆனால் எங்கே பார்த்தாலும் ஓஷோ புத்தகங்களை வாங்காமல் இருக்க மாட்டேன்.

சமீபத்தில் புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகம் தி புக் ஆப் சீக்ரட்ஸ்.  எங்கே  ஓஷோ புத்தகத்தைப் பார்த்தால் வாங்கிக் குவித்துவிடுவேனோ என்ற பயத்தில் ஓஷோ புத்தகம் விற்கும் பக்கத்திலேயே போய் நிற்கமாட்டேன்.

அன்று ஜெய்கோ என்ற புத்தக அலுவலகத்திற்குச் சென்றேன்.  ஆர்யாகவுடர் தெருவில்தான் அந்தப் புத்தகக் கடை இருந்தது.  என்ன சோகம்.  அங்குக் கிருஷ்ணா என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று இருந்தது.  700 பக்கங்கள் உள்ள புத்தகம்.  ரூ.375க்குக் கிடைத்தது. 

பொதுவாக ஓஷோ புத்தகங்கள் எல்லாம் கேள்வி பதில் வடிவத்திலிருக்கும்.  அந்த வடிவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதாவது ஒரு பக்கத்தைத் திறந்து எதாவது ஒரு கேள்வியை ஒரு பதிலைப் படித்தால் போதும். ஒன்றாம் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிக்க வேண்டாம். சரி, இந்தக் கொரானா நேரத்தில் ஓஷோ இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? தனித்திருக்கச் சொல்வார், விழித்திருக்கச் சொல்வார், மௌனமாக இருக்கச் சொல்வார்.  


     ஓஷோ பிறந்தநாளான இன்று கொஞ்சமாவது ஓஷோ புத்தகத்தைப் படிக்க வேண்டும். 



 
 
  


Comments