Skip to main content

சி சு செல்லப்பாவின் மறைந்த நாள் இன்று


அழகியசிங்கர்



திருவல்லிக்கேணியில் தள்ளாத வயதில் மனைவியுடன் ஒரு சின்ன குடியிருப்பில் குடியிருந்தார் சி சு செல்லப்பா.

முக்கிய நோக்கமாக அவர் சென்னையில் குடியிருந்தார். 'சுதந்திர தாகம்' என்ற அவருடைய நாவலை அவரை அச்சடித்து வெளியிடுவதென்று முடிவெடுத்து சென்னையில் குடியிருந்தார்.

அந்தத் தள்ளாத வயதில் அவருடைய உறுதி எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. சுதந்திர தாகம் 3 பாகங்களைக் கொண்டது. திருவல்லிக்கேணியில் உள்ள மணி ஆப்செட்காரரை சி.சு செல்லப்பாவிற்கு அறிமுகப்படுத்தினேன்..மணி ஆப்செட் (பெயர் மறந்து விட்டது)காரர் சிசு செல்லப்பா வீட்டிற்கே வந்து ப்ரூப் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சடித்துக் கொடுத்தார்.

மூன்று பாகங்களை அவர் வீட்டுப் பரணில் அடுக்கி வைத்து விட்டார். அவர் ஒருவரே எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஆயிரம் பிரதிகள் அச்சடித்திருந்தார். அதுதான் எனக்குத் திகைப்பு. அவ்வளவு மன உறுதி. அவர் புத்தகம் விற்றுவிடும் என்று.

அதற்குத் தகுந்தமாதிரி இந்தியா டுடே பத்திரிகையில் அந்தப் புத்தகத்திற்குப் பெரிய விளம்பரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 300 பிரதிகள் விற்றன.

சி சு செல்லப்பா முழுவதும் சுதந்திர தாகம் விற்பதற்குள் இன்னொரு புத்தகத்தையும் தயார் செய்து விட்டார். அது 'ராமையாவின் சிறுகதை பாணி' என்ற புத்தகம். அதையும் துணிச்சலாக 500 பிரதிகள் அச்சடித்து விட்டார். ராமையாவின் சிறுகதைகள் புத்தகமாக (இன்னும் கூட வரவில்லை) இல்லாதத் தருணத்தில் அவற்றைக் குறித்து விமர்சன நூல் உருவாக்கி விட்டார் செல்லப்பா.

இவர் செயலை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு இடத்திற்கும் நடக்க முடியாத இவர் எப்படி இந்தப் புத்தகங்களை விற்கப் போகிறார்?. சுதந்திர தாகமாவது பரவாயில்லை. ஆனால் ராமையாவின் சிறுகதைகளே முழுமையாக இல்லாதத் தருணத்தில் அவருடைய கதைகளை விமர்சனம் செய்த புத்தகம் எப்படி விற்கும்?. ஆசைக்குக் கொஞ்சம் பிரதிகளாவது போட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் என்ன துணிச்சல் இவருக்கு. 500 பிரதிகள் அச்சிட்டு விட்டாரே ?

ராமையா 304 கதைகள் எழுதியிருக்கிறார். சி சு செல்லப்பா ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். அத்தனை கதைகளும் எந்தந்தப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. ஆனால் 287 கதைகளை முன்கதை சுருக்கத்துடன் விமர்சனம் செய்திருந்தார்.
சி சு செல்லப்பா மறைந்தபின்பு அவருடைய 'சுதந்திர தாகம்' நாவலுக்கு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்தது.

300 பிரதிகள் விற்ற பின் அவர் இறந்து விட அவருடைய உறவினர் வீட்டிற்கு எல்லாப் புத்தகங்களும் மாற்றப்பட்டு விட்டன.

கெஞ்சிக் கூத்தாட நூலகம் ஆணை இன்னும் சில நூறு பிரதிகளுக்குக் கிடைத்தன. அவருடைய தள்ளாத வயதில் நூலக ஆணையரைச் சந்தித்து புத்தகம் வாங்குவதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் பிறகு அவருடைய சுநத்திர (3 தொகுதிகள்) தாகம் என்ற நாவலைப் புத்தகக் கண்காட்சியின் போது 3 தொகுதிகளும் சேர்த்து ரூ.100 அல்லது ரூ.150 என்று விற்றேன்.

ஒரு தீவிர போஸ்ட் மாடர்னிஸ விமர்சகர் எல்லாப் புத்தகங்களும் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்துக்கு வந்து விடும் என்று சாபமிட்டார். நல்ல காலம் நான் அதைத் தடுத்துவிட்டேன்.

'ராமையாவின் சிறுகதை பாணி'யை இன்னும் அடிமாட்டு விலைக்கு விற்றேன்.

சி சு செல்லப்பாவை நினைக்கும் போது எதையும் சாதிக்க முடியும் என்ற அவருடைய உறுதியை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவரை இந்த நாளில் நினைவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.




Comments