அழகியசிங்கர்
'தாயாரின் திருப்தி' என்ற இந்தக் கதை கு பா.ராஜகோபாலன் எழுதியது. மொத்தமே 3 பக்கங்களில் முடிந்து விடுகிறது. 1930களில் மணிக்கொடியில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அதைப் பற்றி விபரம் புத்தகத்தில் இல்லை.
ஒரு பிராமண சமுதாயத்தில் நடக்கும் கதை. பங்குனி மாசத்து வெயில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட வாயைத் திறந்துகொண்டு மௌனமாக மரங்களில் உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காகப் பிரமாதமாக ரகளை செய்து கொண்டிருந்தன.பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள்.
சுந்தரேசய்யர் என்ற பிராமணர் வீட்டில் அவர் தாயாருக்கு சிரார்தம். பிராமணர்கள் கடுமையான வெய்யிலில் சுந்தரேசய்யர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். சுந்தரேசன் நாஸ்திகருமல்ல, ஆஸ்திகருமல்ல. தென்னிந்திய ஆங்கிலம் படித்த பிராமணர்களின் திரிசங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று சுந்தரேசய்யரை கு.ப.ராஜகோபாலன் வர்ணிக்கிறார்.
ஒரு இடத்தில் பிரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார் என்கிறார். அர்த்தமில்லாமல் என்கிறார் கு.ப.ரா. சொல்பவருக்கும் அர்த்தம் தெரியவில்லை மந்திரங்களைக் கேட்பவருக்கும் அர்த்தம் தெரியவில்லை.
எப்போதும் ஸ்நான ஸந்தியா வந்திருதிகள் விதிப்படி நடக்காது. ஆனால் தர்ப்பணமும் சிரார்த்தமும் மட்டும் தவறாமல் நடைபெறும். “
அந்தத் தினங்களில் மட்டும் விபூதி, பஞ்சகச்சம், இவை பவித்திரத்தை சந்திக்கும் என்கிறார் கு.ப.ரா. இதில் வேடிக்கை என்னவென்றால் சுந்தரேசனுக்கு பஜனை பிடிக்கும். ராமஸங்கீர்த்தனத்தில் உருகிக் கண்ணீர் விடுவார். அதற்காக ஊரில் அவரை கேலி செய்வதுண்டு. இந்தக் கதையில் அவர் எந்த ஊர் என்று கு.ப.ரா சொல்லவில்லை. ஏதோ ஊர்? படிப்பவர் கற்பனை செய்துகொள்ள வேண்டும். வெகு சாதுவான பிரகிருதி. பிச்சைக்காரனென்றால் எதாவது கொடுக்காமல் அனுப்பமாட்டார். அதிலும் கூன், குருடென்றால் அரை, கால் என்று கொடுத்துவிடுவார். இப்படி அவர் தாராளமாக இருப்பதால், ஊர்க்காரர்கள் உலகம் தெரியாதவர் என்றும், கொஞ்சம் கிறுக்கு என்று பேசிக் கொள்வதுண்டு.
பிராமணர்கள் சாப்பாடு முடித்து பிண்டப் பிரதானமும் ஆகிவிட்டது. பிராமணர்கள் திருப்தி என்று சொல்ல வேண்டிய கட்டம். சுந்தரேசய்யர் மூன்று வயதுக் குழந்தை, வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவன் உள்ளே ஓடி வந்து,
"அப்பா, வாசல்லே பாட்டி வந்திருக்கா..சாதம் வேணுமாம்," என்றான்.
"பாட்டி வந்திருக்காளா? அதார்ரா?" என்று கேட்டுக் கொண்டே சந்தரசேய்யர் வாசலில் போய்ப் பார்த்தார்.
வாசற்படியில் கையில் தடியும் தகரக்குவளையுமுள்ள ஒரு குறுக் கிழவி சாய்ந்து கொண்டிருந்தாள்.
"ஐயா கிருகிருன்னு வருது. இந்தப் பாவி ஊர்ல ஒரு பிடி சோறு போடறவங்க இல்லையா? ஐயோ?" என்று புலம்புகிறாள்.
ஒரு பிராமணர் வீட்டில் திவசம் நடக்கும்போது திவசம் முடிந்து சாஸ்திரிகள் வீட்டிற்குப் போகும்வரை வெளி மனிதர்களைப் பார்க்கவே மாட்டார்கள். மேலும் திவசம் நடந்த வீட்டில் அன்று மட்டும் வெளிமனிதர்களுக்கு அன்னதானம் செய்ய மாட்டார்கள்.
இதில் விதிவிலக்காக சுந்தரரேசய்யர் இருக்கிறார். அவருக்கு மனதில் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஜாதியாசாரம் என்ற சொல்லப்படும் மூடபக்தியை மனிதனின் சுபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்று விட்டது என்று இங்கே கு.ப.ரா குறிப்பிடுகிறார். ஒரு நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானித்து, அதற்கு மதநம்பிக்கைக்கேற்ற சமாதானத்தையும் மனதிற்கொண்டார்.
சட்டென்று உள்ளே சென்று ஒரு பிண்டத்தையும் தன் தீர்த்த கலசத்தையும் எடுத்துக்கொண்டு வாசஙூல் வந்து உருண்டையைக் கலசத்தில் கரைத்துக் கிழவியின் குவளையில் பிடி என்று ஊற்றினார். அதை மடமடவென்று குடித்துவிட்டு கிழவி அப்பாடா உசிர் வந்திச்சு. மகாராசா, நீ நல்லா இருக்கணும் உன்னைப் பெத்த வயிறு என் வயிற்றைப் போல குளிரணும் என்று சொல்லி சிரமம் மேலிட்டு படியில் சாய்ந்துவிட்டாள்.
இது மாதிரியான துணிச்சலான காரியத்தை சுந்தரேசய்யர் செய்து விடுகிறார். பசித்தவளுக்குச் சாதம் போடுவதில் தவறில்லை. ஆனால் திவசம் நடந்து முடிந்த வீட்டிலிருந்து அது மாதிரி செய்வது சரியில்லை. மேலும் சுந்தரேசய்யர் பிராமணர்கள் அவர் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பே இதுமாதிரி செய்து விடுகிறார். அவர்கள் போனபிறகு இதைச் செய்திருந்தால் இந்தக் கதை எந்த சுவாரசியமும் இல்லாமல் போயிருக்கும்.
'என்ன என்ன' என்று ஓடிவந்து பிராமணர்கள் இதைப் பாரத்துத் திகைத்துப்போய், 'அடாடாடா, என்ன அபசாரம்! சிரார்த்தம் நஷ்டமாய்விட்டதே! என்ன அக்கிரமம்! யார் இப்படி சிரார்த்தம் செய்யச் சொன்னார்கள்!' என்று கேட்கிறார்கள்.
"ஏன்?" என்கிறார் சுந்தரேசய்யர்.
"வாயசத்துக்குக் கூட இன்னும் பிண்டம் வைக்கவில்லை. பித்ருக்கள் காக்கையாக வந்து காத்திருப்பார்களே?" என்கிறார்கள் பிராமணர்கள்.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது புரட்சிகரமான கருத்தை சுந்தரேசய்யர் வெளிப்படுத்துகிறார். உண்மையில் சுந்தரேசய்யர் மூலம் கு.ப.ராஜகோபாலன்தான் இங்கே பேசுகிறார்.
"மனித ரூபத்துடன் வந்து என் தாயார் இதோ திருப்தியடைந்து விட்டாளே..காக்கையைக் காட்டிலும் மனித ஜன்மம் மேலல்லவா?" என்கிறார்.
உண்மையில் பிராமணர்கள் எல்லோரும் போனபிறகு இந்தக் காரியத்தைச் செய்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. சிரார்த்தம் நஷ்டமாயிருக்காது.
சுந்தரேசய்யரைப் பார்த்து பிராமணர்கள், "உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. இனிமேல் இங்கே ஜலபானம் செய்யக் கூடாது. தாம்பூலத்தை இங்கேயே எறிந்துவிடும்" என்று சொல்லி பிராமணர்கள் வஸ்திரம், கும்பம், தக்ஷிணைகளைக் கைப்படாமல் எடுத்துக்கொண்டு, கீழே கால்வைத்துக்கூட நடக்காமல் சென்றார்கள்.
போகும்போது பிராமணர்கள் வஸ்திரம், கும்பம், தக்ஷிணைகளை எடுத்துக்கொண்டுதான் போகிறார்கள் என்கிறார் கு.ப.ராஜகோபாலன். வேண்டாமென்று அவர்கள் விட்டுவிட்டுப் போகவில்லை. ஆனால் சிரார்த்தம் பண்ணியும் புண்ணியமில்லை என்று சபித்துவிட்டுத்தான் போகிறார்கள்.
"ஐயோ இதென்ன இப்படிச் செய்துவிட்டீர்களே?" என்று கவலையோடு மனைவி வெளியே வந்தாள்.
"என்னடி அசடு. வாசலில் பார். அம்மா உருவெடுத்து வந்திருப்பதை?" என்று கூறுகிறார்
சுந்தரேசய்யர். இப்படிக் கூறும் சுந்தரேசய்யரை பைத்தியம் என்று கூறாமலிருக்க முடியுமா?
இந்தக் கதை இங்கயே முடிந்து விடுகிறது. அதற்குமேல் எந்தத் தகவலும் சொல்லாமல் கதையை முடித்து விடுகிறார். மூன்று பக்கங்களில் அற்புதமான கதை. ஒவ்வொருவரும் இக் கதையை அவசியம் படிக்க வேண்டும்.
Comments