Skip to main content

கௌதம புத்தர் - 3



அழகியசிங்கர்






துறவி ஆனப் பின் நிலையான உண்மையைத் தேடி புத்தர் ஒவ்வொரு ஊராகச் செல்கிறார்.  முதலில் சாக்கிய குடியில் ஒரு துறவியாகச் சாக்கிய முனியாக மாறுகிறார்.  அலைந்து அலைந்து வைசாலி நகரை அடைந்தார்.  அங்கு ஞானி அர்த்தகலாமரின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கினார்.  வாழ்க்கை பற்றிய உண்மையை ஆராய்ந்தார்.  அவர் படித்த பலவித தத்துவங்களில் எதுவும் அவர் தேடிய உண்மைகளைக் காட்டவில்லை.

இரண்டாவதாக அவர் செல்கிற இடம்.  மகத நாட்டுத் தலைநகரான ராஜகிருகம்.  அங்கு ருத்ரகர் என்ற ஞானி நடத்தி வந்த புகழ் வாய்ந்த கல்வி நிலையத்தில் சேர்ந்தார்.  அந்த ஞானியின் கல்விப் புலமையில் சித்தார்த்தர் மதிப்பு வைத்திருந்தார்.  ஆனால் புலமை மட்டுமே நிலையான உண்மையைக் கண்டறியப் போதுமானதல்ல என்பதையும் விரைவிலேயே உணர்ந்தார். 

கடுந்தவ வாழ்க்கை ஒருவனுக்கு சத்தியத்தைக் காட்டுமோ? முனிவர்களின் தொன்மையான இவ்வழியை முயன்று பார்த்துவிட கௌதமர் முடிவு கட்டினார்.  அவரது சீடர்களாக விரும்பிய ஐந்து துறவியரும் அவருடன் சேர்ந்தனர்.  ஐவருடனும் அவர் ஒரு காட்டில் புகுந்தார்.  தவம் செய்யத் தொடங்கினார்.  உடலை வருத்திக்கொண்டு உணவு இன்றி கிட்டத்தட்டச் சாகும் நிலையை அடைந்து விட்டார்.  தான் தேடும் உண்மையை அடையும் வழி தெரியவில்லை.  கடுந்தவம் செய்வதில் அர்த்தமில்லை என்று எண்ணி அதைக் கைவிட்டார்.  திரும்பவும் உலக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாரென்று எண்ணி அவர் சீடர்கள் அவரை விட்டு விலகினர்.

நிரஞ்சனா என்ற நதியில் மூழ்கினார்.  ஆறு அவரை அடித்துச் சென்றுவிடுமோ என்னும் அளவு அவர் பலவீனப்பட்டிருந்தார்.  பெரு முயற்சியுடன் கரை சேர்ந்தார்.  அந்தப் பகுதியில் சுஜாதா என்ற இளம் பெண் வாழ்ந்துவந்தாள்.  அவள் கொண்டுவந்த பால் பொங்கலைத் தின்று, களைப்புத் தீர்ந்தார்.

ஆழ்ந்த தியானமே, நிலையான உண்மையைத் தேடி அடையும் வழி என்று அவர் இறுதியாக முடிவு செய்தார்.  கயா நகரின் புற நகர்ப்பகுதியில் ஓர் அழகிய இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.  போதி மரத்தின் அடியில் சம்மணம் போட்டு அமர்ந்தார்.  உண்மையைக் கண்டறியாது இங்கிருந்து எழுவதில்லை என்று உறுதி கொண்டார்.

அந்த நிலையில் அவர் பல சோதனைகட்கு ஆளாக நேரிட்டதென்று சொல்கிறார்கள்.

நாற்பத்தொன்பதாவது நாள் அவர் வாழ்வு பற்றிய முழு உண்மையை உணர்ந்து கொண்டார்.  அவர் புத்தராக ஆனார்.  புத்தர் என்றால் ஞானம் பெற்றவர் என்று பொருள்.  எந்த மரத்தடியில் அவர் ஞானம் பெற்றாரோ, அந்த மரமும் அது முதல் போதிமரம் என்று பெயர் பெற்றது. 

Comments