Skip to main content

நியூட்டன் என்ற இந்திப் படம்


அழகியசிங்கர்





2017 ஆம் ஆண்டு வெளிவந்த நியூட்டன் என்ற ஹிந்திப்படம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்ததோடல்லாமல் உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்றது.  சமீபத்தில் ப்ரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் அமித் வி மசுர்கர்.  இது இவரது இரண்டாவது படம். இந்தப் படத்தைத் தயாரித்தவர் மனிஷ் முன்டிரா.  இதில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தவர்கள் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திருப்பதி, அஞ்சலி பட்டேல்.  இந்தப் படத்திற்கான தயாரிப்பு செலவு 9 கோடி.  பணம் ஈட்டுக் கொடுத்தது 81கோடி.  

நியூட்டன் குமார் (ராஜ்குமார் ராவ்) என்பவர் அரசாங்கத்தில் புதியதாக குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர்.   அவரை தேர்தலை நடத்த நக்ஸலைட்டுகள் பிடித்து வைத்துள்ள சத்தீஸ்கரின் காட்டுப் பகுதியில் உள்ள ஊருக்கு அனுப்புகிறார்கள்.  அது நக்ஸலைட்டுகள் நிறைத்த பகுதி.   ஏற்கனவே இங்கு தேர்தலை நடத்த வரவேண்டியவர் இதய நோயால் பாதிக்கப்பட்டதால் நியூட்டன் குமாரை அனுப்புகிறார்கள்.  கூடவே அவர்களைப் பாதுகாக்க மத்ய காவல் படையும் செல்கிறது.  மத்ய காவல் படைக்குத் தலைமை வகுத்து நடத்துபவர் ஆத்ம சிங் (பங்கஜ் திருப்பதி) 

நக்ஸலைட்டுகள் எந்தத் தருணத்திலும் தாக்குதல் நடத்துவார்கள் என்ற பயத்துடன் எல்லோரும் கிளம்புகிறார்கள்.  காடுகள் வழியாக அவர்கள் போகும்போது படம் பார்க்கும் நமக்கும் எந்த நேரத்தில் அட்டாக் நடக்குமென்று பயம் ஏற்படுகிறது.  தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.  நடுவழியில் அந்தப் பகுதியில் வசிக்கும் மால்கோ (அஞ்சலி பட்டேல்) என்கிற லோகல் தேர்தல் அதிகாரியும் நியுட்டன் குமாருடன் சேர்ந்து கொள்கிறாள்.  அடர்த்தியான காட்டில் பாதுகாப்பு படையினரும் (பத்து பதினைந்து பேர்கள் இருப்பார்கள்). நியூட்டன் குமார் குழுவும் செல்லும் காட்சி அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.  போகும் கரடுமுரடான பாதையும், நெருக்கமாக இருக்கும் மரங்களும், நேரத்திற்கு நேரம் மாறும் வெளிச்சத்தையும் படம் பிடித்திருப்பது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. ஆத்ம சிங், நியூட்டன் குமாருடன் பேசும்போது,  நியூட்டன் குமார் ஏன் இங்குத் தேர்தல் நடத்த வேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறான் என்று ஆத்மசிங் நினைக்கிறான்.   அடிக்கடி நான் ஒரு தேர்தல் அதிகாரி, நான் சொல்வதைப் போல்தான் கேட்க வேண்டுமென்று ஆத்ம சிங்கை மிரட்டுகிறான் நியூட்டன் குமார். 

ஊருக்குள் நுழைகிறார்கள்.  அங்கு யாரும் கண்ணில் தென்படவில்லை.  திகைப்பாக இருக்கிறது நியூட்டன் குமாருடன் வந்திருந்த எல்லோருக்கும்.  ஆள் அரவமற்ற ஒரு கட்டடத்தைக் காட்டி இங்கேதான் தேர்தல் நடத்த வேண்டுமென்று ஆத்ம சிங் சொல்கிறான்.  அதிருப்தியுடன் அந்த இடத்தைப் பார்க்கிறான் நியூட்டன் குமார்.  ஒரே தூசியாக இருக்கிறது.  ஒரே ஒரு அறைதான்.  அந்தத் தூசிகளைத் தட்டி அவர்கள் எடுத்து வந்த மடக்கு நாற்காலிகளையும், மேசைகளையும் விரித்துப் போடுகிறார்கள்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் சரி செய்து நியூட்டன் குமாரும், தேர்தல் அதிகாரி மல்கோவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள்.  நியூட்டன் குமாருக்குக் கீழே அவனுக்கு உதவி செய்ய உதவியாளர்களும் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். 

சிறிது நேரத்தில் உதவியாளர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  நியூட்டன் குமார் வெறுத்து விடுகிறான்.  அங்குத் தேர்தல் நடத்துவதை வெளிநாட்டு நிருபர் பார்க்க வர உள்ளார் என்பதை அறிந்த பிறகு, அவர்கள் எல்லோரும் மக்கள் வசிக்குமிடத்திற்குப் போகிறார்கள்.  கூட்டமாக அவர்களை எதிர் கொள்கிறார்கள்.  

ஊரார்களைப் பார்த்துத் தேர்தலைப் பற்றி விவரிக்கிறான் நியூட்டன் குமார்.   ஹிந்தியில் அவன் சொல்வது எதுவும் அவர்களுக்கு விளங்கவில்லை.  கூடவே இருக்கும் மால்கோதான் அவர்கள் பேசும் மொழியில் மொழி பெயர்த்துக் கூறுகிறாள்.  ஒவ்வொரு கட்சியிலிருந்தும் யார் யார் நிற்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்கிறாள்.  அக்கூட்டத்தில் அவர்களின் தலைவன் போலெருவன் கேட்கிறான்.  நாங்கள் டெல்லிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோமா என்று. நியூட்டன் குமாருக்கு சங்கடமாகிவிடுகிறது. அவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறார்களே என்று நினைக்கிறான்.    'நாங்கள் ஓட்டுப் போட்டால் நக்ஸலைட்டுகள் எங்களைத் தாக்குவார்கள்.  ஓட்டுப் போடாவிட்டால் பாதுகாப்புப் படையினர் எங்களை மிரட்டுவார்கள்,' என்கிறான். 

இந்த இடத்தில் ஆத்ம சிங் அங்கு வந்து அவர்களிடம் பேசுகிறான்.  அத்ம சிங் சொல்கிறான்.  ஓட்டு போடும் இயந்திரம் ஒரு விளையாட்டுப் பொருள்.   அதில் யானைப்படம், சைக்கிள் படம் எல்லாம் இருக்கும்.  இவர்கள் எல்லோரும்  ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறான்.  அதைக் கேட்டு நியூட்டன் அவனுடன் சண்டை போடுகிறான்.  'இவர்கள் யாரும் படிப்பறிவில்லாதவர்கள்.  அவர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியும்,' என்கிறான்.

அவர்கள் எல்லோரும் ஓட்டுப் போடும் இடத்திற்கு வருகிறார்கள்.  எல்லாரும் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போடுவதை விட அவர்களுக்குப் பிடித்த  சின்னங்களைப் பார்த்துப் போடுகிறார்கள்.  மேல்நாட்டுச் செய்தி நிரூபர் இதைப் பார்த்து இந்தியாவில் ஜனநாயகம் இப்படித்தான் நடக்கிறது என்று குறித்துக் கொள்கிறார்.

தேர்தல் நேரம் முடியும்வரை நியூட்டன் அங்கிருக்க விரும்புகிறான். பொய்யாக நக்ஸலைட்டுகள் அதிரடி என்று  அவனைச் சேர்ந்தவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டுகிறான் ஆத்ம சிங்.    இது ஒரு நாடகம் என்பதை உணர்ந்தவுடன் நியுட்டன் காட்டில் வந்து கொண்டிருக்கும்போது திரும்பவும் ஓட்டுப்போடும் இடத்திற்கு ஓடிப் போகிறான்.  ஆனால் போகவிடாமல் மத்ய காவல் படையினர் தடுத்து விடுகிறார்கள்.  தான் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வு நியூட்டனுக்கு.

காட்டு வழியில் போய்க் கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பெண் தேர்தல் அதிகாரி மால்கோ எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறாள்.  இன்னும் கொஞ்ச தூரம் போகும்போது 4 கிராமத்துக்காரர்கள்  ஓட்டுப் போடுவதற்காக வழியில் தென்படுகிறார்கள். மத்ய காவல் படைத்தலைவன் ஆத்ம சிங் இதற்கு உடன் படவில்லை.

நியூட்டனும் ஆத்ம சிங்கும்  தாங்கள் சொல்வதிலேயே உறுதியாக இருக்கிறார்கள்.  அந்தக் காட்டு வழியிலேயே ஓட்டுப் போடலாமென்று தீர்மானிக்கிறான் நியூட்டன்.  அதை எதிர்க்கிறான் ஆத்ம சிங்.  திடீரென்று நியூட்டன் ஆத்ம சிங்கின் ரைபிளைப் பிடுங்கிக் கொண்டு அவனை மிரட்டுகிறான்.  ஆத்ம சிங், 'தன்னுடைய மத்ய காவல் படை வீரர்கள் ஒருவரைக் கூட இழக்க விரும்பவில்லை,' என்கிறான். 

அதன் பின் மத்ய காவல் படையினரின் துப்பாக்கிகளைக் கீழே போட வைக்கிறான்.  வேறு வழியில்லாமல் எல்லோரும் துப்பாக்கிகளைக் கீழே போடுகிறார்கள்.

ஓட்டுப்போடும் நேரம் முடியவில்லை.  அவசரம் அவசரமாக நியூட்டனுக்கு உதவிக்கு வந்திருந்தவர்களை வைத்து ஓட்டுப் போட வைக்கிறான்.  கொஞ்சங்கூட கையில் வைத்திருக்கும் ரைபிளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்கிறான்.  அவர்கள் ஓட்டுப் போட்டு முடித்து விடுகிறார்கள்.
  
நியூட்டன் தன் கையில் வைத்திருந்த ரைபிளை கீழே வைத்துவிடுகிறான்.  அவ்வளவுதான். அவன்மீது உள்ள வெறுப்பால் எல்லோரும் அவன் மீது பாய்ந்து விடுகிறார்கள்.  

ஆறுமாதம் கழித்து ஆத்ம சிங் தன் மனைவி பெண்ணுடன் ஒரு டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் பொருள்கள் வாங்குகிறான்.  எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறான்.

நியூட்டன் குமாரை அவன் அலுவலகத்தில் லோக்கல் தேர்தல் அதிகாரி மால்கோ பார்க்க வருகிறாள்.  நியூட்டன் குமார் கழுத்தில் கட்டுடன் காட்சி அளிக்கிறான். அதே உற்சாகத்துடன்.  மால்கோ டீ குடிக்க கான்டீன் வரும்படி கூப்பிடுகிறாள்.   இன்னும் ஐந்து நிமிடங்கள் கழித்து வருகிறேன் அப்போதுதான் லஞ்ச் என்கிறான் நியூட்டன் பழைய உற்சாகத்துடன்.

இந்தப் படத்தைத் திறமையுடன் எடுத்துள்ள இயக்குநர் பாராட்டுக்குரியவர்.  

Comments