Skip to main content

துளி - 75 - நாவல் எழுதியது எப்படி - 2



அழகியசிங்கர்




சரி, நாவல் அவ்வளவு சுலபமாய் எழுதி விட முடியுமா?  முடியும். ஆனால் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப எளிது.  அதன்பின் சிறுகதை கவிதை எழுதுவதை விடச் சற்று சிரமம்.  கட்டுரையும் அப்படித்தான்.  ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதாக இருந்தால் பல புத்தகங்களைப் படிக்க வேண்டும். படித்துக் கோர்க்க வேண்டும்.

நான் இப்போது எழுதி உள்ள 'தனி இதழ் நன்கொடை ரூ.20'. உண்மையில் என் முதல் நாவல்.  இரண்டாவதாக வந்து விட்டது. எப்போதோ ஆரம்பித்தேன்.   'ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்.'  என் முதல் நாவலாக மாறிவிட்டது. ஒரு நாள் பகல் நேரத்தில் வெகு நேரம் தூங்கி எழுந்தவுடன், யாரோ சொன்னதுபோல் (ஷ்ரடி சாய் என்று நினைக்கிறேன்) தோன்றியது 'உன் நாவல் கணினியிலேயே இருக்கிறது' என்று. 

உடனே கணினியைத் தட்டினேன்.  5 ஆண்டுகளுக்கு முன் நான் அம்ருதா பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் கிடைத்தன. அவற்றை எல்லாம் தொகுத்து 'எதையாவது சொல்லட்டுமா' என்ற கட்டுரைத் தொகுதி கொண்டு வந்தேன்.  பின் முதல் நாவலைத் தேதி வாரியாக நான் குறித்து வைத்திருந்தேன்.  அது புது விதமான நாவல். தன் புனைவு நாவல்.

பிரமிள் என்ன முயற்சி செய்தும் நாவல் எழுத முடியவில்லை.  ஞானக்கூத்தனும் கவிதைகள் தவிர நாவல் எழுதவில்லை.  ஏன் மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா சிறுகதைகளோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.  இலக்கியத் தரமான நாவல் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது என் நண்பர் ஒருவரை ஒரு கிருத்துவப் பெண் காதலித்தார். பார்க்க லட்சணமாகவும் இருந்தார்.  நண்பர் வேண்டாமென்று மறுத்து விட்டார்.  அவர் மறுத்தது என் மூளையில் போய் உட்கார்ந்து விட்டது.  அந்தப் பெண் அவரை மணந்து கொண்டால் எப்படி இருக்கும்?  அதுதான் நாவலின் இன்னொரு இழையாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

அமேசானில் போய் எளிதாக நீங்கள் படித்து விடலாம்.  விலை ரூ.49 தான்.

Comments