Skip to main content

மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன் - பகுதி 1





அழகியசிங்கர்





சமீபத்தில் ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் ஒரு புத்தகக் காட்சி நடந்தது.  அந்த நிகழ்ச்சியைப் பற்றி எதாவது சொல்வதா அல்லது என்னைப் பற்றி எதாவது சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றித்தான் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  நான் மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன்.  என் அவதார நிகழ்ச்சியைச் சொன்னாலே போதுமென்று எனக்குத் தோன்றியது. ஆரம்பிக்கிறேன்.


1. புத்தகப் பதிப்பாளர் கம்  விற்பனையாளரான  அழகியசிங்கரின் கூற்று.

நான் 30 ஆண்டுகளாக விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறேன். கூடவே புத்தகங்களை அச்சடிக்கிறேன்.   கிட்டத்தட்ட 80 புத்தகங்களை அச்சடித்து விட்டேன்.  பெரும்பாலும் கவிதைப் புத்தகங்கள்.   கவிதைகளை அடித்து  விற்பது என்பது சாத்தியமில்லை என்று என் அறிவுக்குத் தெரிந்தாலும் கவிதைகளை மட்டும் புத்தகம் அடிக்க என்னிடம் கொடுப்பார்கள் பலர்.   புத்தகக் காட்சியில் என் புத்தகங்களை மட்டும் விற்க முடியாது என்று  எனக்குத் தெரிந்து விட்டது.  மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களோடு என் புத்தகங்களையும் விற்று வருகிறேன்.  புத்தகம் விற்று லாபம் சம்பாதிப்பது என்பது நிகழ்ந்தால் அது அற்புதமான கணமாக இருக்கும்.  
இந்த முறை ராயப்பேட்டையில் நடந்த புத்தகக் காட்சியில் முதல் நாளே எனக்குத் தெரிந்து விட்டது.  எவ்வளவு பணம் நஷ்டமடையப் போகிறோம் என்று.   அதனால் நஷ்டத்தை எண்ணி பதற்றமடையாமல் என்னைத் தேற்றிக்கொண்டேன்.  ஏன் இப்படி ஆயிற்று என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது போதிய விளம்பரம் இல்லை என்று மனதில் பட்டது.   இவ்வளவு வருடங்கள் புத்தக விற்பனையில் ஈடுபட்டாலும் பெரிய அளவில் பொருள் ஈட்ட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்.   என்னிடம் ஆள் இல்லை இல்லை.  நான் மட்டும்தான் எல்லாம்.   புத்தகம் தயாரிப்பதிலிருந்து எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வது வரை.  ஆனால் பலர் புத்தகம் தயாரிக்காமல் புத்தகம் விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.   நான் சற்று யோசித்துப் பார்த்தேன்.  இந்த முறை புத்தகக் காட்சியில் பராமரிப்பு செலவு அதிகமாகிவிட்டது.  அரங்கு வாடகை சற்று அதிகம்.  புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருகிற செலவும் கூடி விட்டது.  ஆனால் இதன் மூலம் பல அனுபவங்களைச் சேகரிக்க முடிந்தது.  ஒரு விற்பனையாளர் கூறினார்.  'நீங்கள் வெளியூருக்கெல்லாம் போய் புத்தக விற்பனையைச் செய்யாதீர்கள்,' என்று.  உண்மையில் என்னால் டெம்போகாரர்களுக்கு பணம் கிடைத்தது.  டீ விற்பவர்களுக்குப் பணம் கிடைத்தது.  வெளியே தின்பண்டம் விற்பவருக்குப் பணம் கிடைத்தது. ஆனால் எனக்குத்தான் புத்தகம் விற்றுப் பணம் கிடைக்கவில்லை. 
பெரும்பாலான புத்தகப் பதிப்பாளர்கள் என்ன புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று போய்ப் பார்த்தேன். திருக்குறள், பாரதியார் இல்லாத கடைகளே இல்லை.  மேலும் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் பல பதிப்பாளரின் வருமானத்தை உயர்த்துகின்றன.  ரூ.200க்கு நான்கு நாவல்கள் என்று ஆங்கிலப் புத்தகங்களை விற்கிறார்கள்.  அங்கே கொஞ்சம் கூட்டம்.  என் அரங்கில் சுஜாதா புத்தகங்கள் ஏனோ இந்த முறை  சரியாக விற்கவில்லை.  அதனால் சுஜாதா புத்தகங்களுக்கான கவர்ச்சி குறைந்து விட்டது என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. பல புத்தகங்களின் விலை கடுமையாக இருக்கிறது.   இது கூட புத்தகங்கள் வாங்குபவரை யோசிக்க வைக்கிறதோ?  விருட்சம் மூலம் கொண்டு வந்துள்ள பெரும்பாலான புத்தகங்களுக்கு விலை மிகக் குறைவு.  ஆனால் வாங்க வருபவர்கள் அதை விடக் குறைவு.  
(photo taken by Srinivasan Natarajan)

                                                            (இன்னும் வரும்)

Comments