அழகியசிங்கர்
மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறார் அழகியசிங்கர். உண்மையில் இந்தக் கூட்டத்தின் நோக்கம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் பொதுவாக புத்தகங்களைப் பற்றித்தான் பேச வேண்டும். அவர் வீட்டில் பால்கனியில் காத்துக்கொண்டிருக்கிறார். வழக்கம்போல் அவரைப் பார்க்க ஜெகனும், மோகினியும் வருகிறார்கள்.
காலிங் பெல்லை அடித்துவிட்டு வாசலில் நிற்கிறார்கள். "வாருங்கள் வாருங்கள்.." என்று வரவேற்கிறார் அழகியசிங்கர்.
மூவரும் ஒரு அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறார்கள்.
மோகினி : உங்கள் மனைவி எங்கே?
அழகியசிங்கர் : பெண் வீட்டிற்குப் போயிருக்கிறாள்.
ஜெகன் : கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
அழகியசிங்கர் : இந்த அரசியலே எனக்குப் புரியவில்லை. மதுரையில் நடந்த கூட்டத்தைப் பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்? இதெல்லாம் யார் கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.
மோகினி : நீங்கள் நடத்திற இலக்கியக் கூட்டம் என்று நினைத்தீரா?
அழகியசிங்கர் : நான் நடத்தும் இலக்கியக் கூட்டத்திற்கு 20 பேர்கள் கூட வருவதில்லை. ஆனால் என் கூட்டம் ஏற்படுத்தும் அமைதியை கமல்ஹாசன் கூட்டத்தில் காண முடியுமா என்பது தெரியவில்லை.
ஜெகன் : அரசியல் வேண்டுமா வேண்டாமா? நீங்கள் சொல்லுங்கள்.
அழகியசிங்கர் : மக்களுடைய பிரச்சினையை யார் தீர்ப்பார்கள்? அல்லது தீர்க்கத்தான் முடியுமா? இதற்கெல்லாம் விடை தெரியவில்லை.
மோகினி : எந்தத் துயரம் ஏற்பட்டாலும் தமிழ் மக்களைப் போன்ற பொறுமைசாலிகளை எங்கும் காண முடியாது.
ஜெகன் : என்ன புத்தகம் கையில் வைத்திருக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : MARGINAL MAN என்கிற சாருநிவேதிதாவின் ஆங்கிலப் புத்தகத்தை வைத்திருக்கிறேன்.
ஜெகன் : ஒரு வினாடி கொடுங்கள். பார்த்துவிட்டுத் தருகிறேன்.
(அழகியசிங்கரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டு பார்க்கிறார்)
ஜெகன் : என்னால் நம்ப முடியவில்லை.
அழகியசிங்கர் : என்ன நம்ப முடியவில்லை
ஜெகன் : இந்தப் புத்தகம்.
மோகினி : ஆமாம். ஒரு ஆங்கில புத்தகம் போலவே இருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். புத்தகக் கண்காட்சியின் போது என் இலக்கிய நண்பர் ஒருவர், இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.
ஜெகன் : Zero Degree Publishing தான் இந்தப் புத்தகத்தைத் தயாரித்துள்ளார்கள்.
மோகினி : தமிழிலிருந்து வெளிவரும் எத்தனையோ ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பார்த்தால் ஒரு ஆங்கிலப் புத்தகம் பார்க்கிற உணர்வே ஏற்படாது.
ஜெகன் : உண்மைதான். நான் ஒரு சமயம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாட்டர் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் பார்த்துவிட்டு பதறி விட்டேன். இரண்டு மூன்று வாங்கி வைத்துக்கொண்டேன்.
அழகியசிங்கர் : அசோகமித்திரனிடம் சொன்னீர்களா?
ஜெகன் : சொன்னேன். அவர் 'எனக்கு ஒரு பிரதி வாங்கிக்கொண்டு வாருங்கள்,' என்றார். வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்தேன்.
அழகியசிங்கர் : ஏன் அங்கு வந்தது என்று தெரியுமா?
ஜெகன் : தெரியாது.
மோகினி : சரி நீங்கள் சாருவின் ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தீர்களா?
அழகியசிங்கர் : இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன். தமிழில் அவர் புத்தகம் படிப்பதற்கு எப்படி இருந்ததோ அப்படியே ஆங்கிலத்திலும் இருந்தது.
ஜெகன் : தமிழில் என்ன புத்தகம் இது.
அழகியசிங்கர் : புதிய எக்ûஸல் என்ற நாவல்தான் என்று சாரு என்னிடம் கூறினார்.
மோகினி : அவர் எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது.
அழகியசிங்கர் : நான் கூட ராச லீலா என்ற அவருடைய நாவலைப் படிப்பதற்குப் பதில் புதிய எக்ûஸல் என்ற நாவலைப் முதலில் படித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
ஜெகன் : இப்போது படித்துக் கொண்டு இருக்கிறீர்களா?
அழகியசிங்கர்: ஆமாம். இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். பின் எங்கோ வைத்துவிட்டேன். அப்போது ஒரே சமயத்தில் பல புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றையும் உருப்படியாகப் படிக்க முடியவில்லை.
மோகினி : நாம் பேசும்போது ஒரு புத்தகத்தைப் படித்தாலும் படிக்காவிட்டாலும் பேசிக்கொண்டிருப்போமா?
அழகியசிங்கர் : ஆமாம். நாம் ஒரு புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டுத்தான் பேச வேண்டுமென்பதில்லை. ஒரு புத்தகத்தின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுவோம். திரும்பவும் பின்னால் இன்னும் கொஞ்சம் படித்து முடித்த விட்டப் பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றி திரும்பவும் பேசுவோம்.
ஜெகன் : புத்தகங்களில் காணப்படும் சுவாரசியங்கள்தான் நம் பேச்சில் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
மோகினி : இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரே புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட முடியும் என்று தோன்றவில்லை.
அழகியசிங்கர் : அன்று சந்தியா பதிப்பகம் போய் பாரதி விஜயம் என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். அப் புத்தகத்தை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். படிக்கவில்லை. பின் ஒருநாள் அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டி ஒரு இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்குப் பட்டது.
மோகினி : என்ன படித்தீர்கள்?
அழகியசிங்கர் : ரிக்ஷாகாரனின் துன்பத்தைப் பார்த்து தான் வாங்கிவந்த ஐம்பது ரூபாய் சம்பளத்தை பாரதியார் கொடுத்து விடுகிறார். அந்தப் பணத்தை நம்பியிருந்த பாரதி மனைவிக்கு வருத்தம். அந்த வருத்தத்தை பாரதியின் நண்பரிடம் தெரிவிக்கிறார். அந்த நண்பர் ரிக்ஷாகாரனைப் பார்த்துப் பேசி ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதிப் பணத்தை வாங்கிக்கொண்டு பாரதியின் மனைவியிடம் கொடுக்கிறார்.
ஜெகன் : நாம் இப்படிப் பேசிக்கொண்டே போனால் பொழுது போவதே தெரிவதில்லை. நான் காப்பிப் பொடி வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போக வேண்டும்.
மோகினி : நானும்தான்.
அழகியசிங்கர் : நானும் தபால் அலுவலகம் போக வேண்டும்.
(ஜெகனும், மோகினியும் அழகியசிங்கர் வீட்டை விட்டுப் போகிறார்கள்)
Comments