அழகியசிங்கர்
தினமணியைப் படித்துக்கொண்டு வரும்போது üதினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியைýப் பற்றிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். எப்போதும் நான் கதைகள் எழுதுவது என்பது குறைவாகத்தான் இருக்கும். கதை எழுது என்று எந்தப் பத்திரிகைக்காரரும் என்னைக் கேட்பதில்லை. ஏன் யாரையும் கேட்பதில்லை? என் பத்திரிகையில் நான் எழுதுவது தவிர. எந்தப் பத்திரிகையிலும் நான் கதை அனுப்பினால் கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருக்கும். பத்திரிகைகாரர்களைக் குறை சொல்ல முடியாது. ஏகப்பட்ட கதைகள் அவர்களுக்கு வரும். அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களிடையே குழப்பமாக இருக்கும். ஏன் போட்டியாகக் கூட இருக்கும்.
ஒருமுறை அசோகமித்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அடிக்கடி என்னிடம், üமற்றப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புங்கள்,ý என்று கூறிக்கொண்டிருப்பார். üயாரும் கண்டுக்க மாட்டாங்க, சார்,ý என்பேன் நான். ஏனென்றால் எல்லாப் பத்திரிகைகளிலும் எனக்குத் தெரிந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு என் கதைகளை அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். எனக்கும் சங்கடம். அவர்களுக்கும் சங்கடம் என்பதுதான் உண்மையான காரணம்.
இந்தத் தருணத்தில்தான் üதினமணி சிவசங்கரி சிறுகதைýப் பற்றிய அறிவிப்பைப் படித்தேன். இதைச் சாக்காக வைத்து ஒரு கதையை 2 அல்லது 3 நாட்களுக்குள் எழுத முடியுமா என்று முயற்சி செய்தேன். என் முயற்சி வெற்றி பெற்றது. முதலில் போட்டிக்கு அனுப்புவோம். போட்டியில் இக் கதை தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றால் என் பங்குக்கு ஒரு கதை எழுதி விட்டேன் என்று இருப்போம் என்றுதான் நினைத்தேன். போட்டிக்கும் அனுப்பினேன். பின் மறந்துவிட்டேன்.
அதேபோல் முடிவுகள் அறிவித்தவுடன் என் கதையைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை என்று தெரிந்ததும் பேசாமல் இருந்து விட்டேன். வழக்கமாக நேற்று விருட்சம் சார்பில் கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டத்தை நடத்துவதற்கான முனைப்பில் இருந்தேன். அந்தத் தருணத்தில் தினமணியிலிருந்து எனக்குத் தொலைப்பேசி வந்தது. என் கதையை ஆறுதல் பரிசுப் பெற்ற கதையாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் நம்ப முடியவில்லை என்றால் இதுமாதிரி போட்டிக்கு வரும் கதைகள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கதைகள் வரும். அதில் எல்லாவற்றையும் படித்துத் தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் என் கதையும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. ஆறுதல் பரிசாக இருந்தாலும் என் கதை தினமணிக்கதிரில் பிரசுரமாகும், அதைப் பலர் படிப்பார்கள் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி. சிவசங்கரி என்ற எழுத்தாளர் தினமணியுடன் சேர்ந்து ஒரு லட்சம் பணம் சிறுகதைகளுக்காக ஆண்டுதோறும் செலவழிக்கப் போகிறார். இந்த ஆண்டு பல புதியவர்கள் விதம் விதமாகக் கதைகள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள். வரும் ஆண்டுகளிலும் இன்னும் அதிகம் பேர்கள் வெற்றி பெறுவார்கள். இப்படி சிறுகதைகளை ஊக்கப்படுத்தும் சிவசங்கரிக்கும் அதைப் பலப்படுத்தும் தினமணிக்கும் திரும்பவும் என் நன்றி. இதற்கு ஒரு விழா ஏற்பாடு செய்து கௌரவம் செய்ததற்கும் இன்னும் நன்றி.
Comments