Skip to main content

திரும்பவும் கவிதைப் புத்தகங்களா?...

அழகியசிங்கர்




இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நான் கவிதைத் தொகுதியாகக் கொண்டு வருவது ஒரு தற்செயலான விஷயம்.  பெரும்பாலும் நான் கவிதைத் தொகுதியை மட்டும் கொண்டு வந்து கொண்டிருப்பேன்.  போன முறை அசோகமித்திரன் புத்தகம், சிறுகதைத் தொகுப்பு எல்லாம் கொண்டு வந்தேன்.  கூடவே வைதீஸ்வரன், பெருந்தேவி கவிதைத் தொகுதிகளையும் கொண்டு வந்தேன்.
நான் என்னதான் முயற்சி செய்தாலும் கவிதைத் தொகுதியை கொண்டு வந்தாலும், அதை விற்பது என்பது ஒரு சவால்தான்.  ஒரு தனி கலை. அந்த சவாலில் நான் பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை.  முன்பு நான் கொண்டு வந்த அளவு மீறிய எண்ணிக்கைக் கொண்ட கவிதைத் தொகுதிகள் என்னைப் இப்போது பார்க்கும்போதெல்லாம் நலன் விஜாரிக்காமலில்லை.  நானும் கவலைப் படுவதில்லை.  இப்போது எண்ணிக்கை அளவை நான் புரிந்து கொண்டு விட்டேன்.  அந்த எண்ணிக்கை அளவிற்குள்ளே கவிதைத் தொகுதிகளையும் கொண்டு வர ஆரம்பித்துள்ளேன்.  
இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் முதலில் நான் பாரதியாரின் புதுக்கவிதைகளை அடித்துள்ளேன்.  இத் தொகுதி ஏற்கனவே ழ வெளியீடாக வந்துள்ளது.  அதில் ஒரு சிறப்பான முன்னுரையை ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார்.  திரும்பவும் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.  இப் புத்தகத்தின் விலை ரூ.50.  இரண்டாவதாக நான் கொண்டு வந்த புத்தகம் üசிந்தை முட்கள்ý என்ற நீல.பத்மநாபன் புத்தகம். 78பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.60 தான்.  மூன்றாவதாக நான் கொண்டு வந்த புத்தகம். üவினோதமான பறவைý என்ற என் கவிதைத் தொகுதி.  நவம்பர் 2013ல் கொண்டு வந்த இந்தப் புத்தகம்.  அதிகமாக முன்பு அடித்து வைத்த குற்றத்திற்காக கட்டு கட்டாக அடுக்கி வைத்திருந்தேன்.  என் கவிதைத் தொகுதியாக இருந்தாலும் எல்லோரையும் பேசச் சொல்லி கூட்டம் நடத்துவதில் சாமர்த்தியம் இல்லாதவன் நான்.  என் புத்தகத்தை சிலாகித்து யாராவது பேசினால் அது விற்பனை ஆவதற்கு வழி கிடைக்கும்.  ஆனால் அந்தத் திறமை என்னிடம் இல்லை.  மேலும் அந்தப் புத்தகக் கட்டுகளை வெள்ளம் ஒரு பதம் பார்த்துவிட்டது.  இப்போது வெள்ளம் பற்றிய கவிதைகளையும் சேர்த்து திரும்பவும் குறைவான பிரதிகளை அடித்து வைத்துள்ளேன்.  அதன் விலை ரூ.80 தான்.  
நான்காவதாக நான் கொண்டு வந்த புத்தகம் üஇம்பர் உலகம்ý என்ற ஞானக்கூத்தன் கவிதைத் தொகுதி.  ஞானக்கூத்தன் கவிதைகளில் காணப்படும் வசீகரமான தன்மை இப் புத்தகத்தில் அதிகமாகவே நான் காண்கிறேன்.  இப் புத்தகத்தை அவர் உயிரோடு இருந்தபோதே என்னால் கொண்டு வர முடியவில்லை.  கையெழுத்துப் பிரதியில் அந்தப் புத்தகம் இருந்தபோது அதை டிடிபி செய்ய கொடுத்திருந்தேன்.  டிடிபி செய்பவருக்கு அவருடைய கையெழுத்துப் புரியவில்லை.  மேலும் நான் போன் பண்ணும்போது அவர் போனை எடுக்காமல் டபாய்த்துவிட்டார். ஞானக்கூத்தனுக்கு என் மேல் வருத்தம். அப்போதே என்னால் ஏன் கொண்டுவர முடியவில்லை என்பது புரியவில்லை.    தொழில் ரீதியாகக் புத்தகம் அச்சிடும் பழக்கம் எனக்கு இன்னும் ஏற்படவில்லை.   இப்படியே நான் 40 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.   ஆனால் தற்போதுதான் இம்பர் உலகம் புத்தகத்தை அச்சடித்துக் கொண்டு வந்துள்ளேன்.  
ஐந்தாவதாக நான் கொண்டு வந்த புத்தகம் சில கவிதைகள், சில கதைகள், சில கட்டுரைகள் என்ற என் புத்தகம்.  இதுவரை நான் எழுதிய கவிதைகளையும், கதைகளையும், கட்டுரைகளையும் சேர்த்துக் கொண்டு வந்துள்ளேன்.  இதில் உள்ள கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் நான் புதிதாக எழுதியவை. கவிதை பிடிக்காதவர்களுக்கு கதைகள் படிக்கலாம் கதைகள் பிடிக்காதவர்களுக்கு கட்டுரைகள் படிக்கலாம்.  அப்படியொரு அமைப்பு இது.
ஆறாவதாக பெருந்தேவியின் புத்தகம்.  கவிதைப் புத்தகத்தின் தலைப்பு 'வாயாடிக் கவிதைகள்' என்று பெயர்.  அழுக்கு சாக்ஸ் என்ற புத்தகமும் இந்த ஆண்டு நடுவில் வெளிவந்தது.  பெருந்தேவியின் கவிதைகள் எளிமையான வரிகள் கொண்ட கவிதைகள். .மேலே குறிப்பிட்ட எல்லாக் கவிதைத் தொகுதிகளைப் பற்றியும் நான் திரும்பவும் ஒவ்வொரு புத்தகமாக அறிமுகப்படுத்தி பின்னால் எழுதுகிறேன்.

Comments