அழகியசிங்கர்
இந்த முறை என் நண்பர் சென்னைக்கு என் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார். அவரிடம் ஒரு மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ஆம். அவர் ஒரு புத்தகப் ப்ரியர். புத்தகம் எப்போதும் படித்துக்கொண்டிருப்பார். அதிகமாகப் புத்தகங்கள் இருப்பதால் படிக்க முடியவில்லை என்றார். பொதுவாக புத்தகங்களை வாங்கிச் சேர்ப்பவர், இந்த முறை எந்தப் புத்தகமும் வாங்க அவர் விரும்பவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம்: என்னிடம் அதிகமாகப் புத்தகங்கள் படிக்க இருக்கிறது. அதனால் வாங்க விரும்பவில்லை என்றார்.
நானும் பல புத்தகங்களை புத்தகக் கண்காட்சியின்போது வாங்கிச் சேர்த்திருக்கிறேன். புத்தகம் படிக்கிறேனோ இல்லையோ ஆனால் புத்தகம் வாங்கிக் கொண்டிருப்பேன். சேர்த்துக்கொண்டிருப்பேன். அவரிடம் சொன்னேன் : புத்தகம் படிப்பது வேறு, புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வது வேறு, என்று.
தேனுகா அவர்கள் டாக் சென்டரில் கடைசியாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதுதான் அவருடைய கடைசிக் கூட்டம் என்று நினைக்கிறேன். அவருடைய புத்தகம் மதி நிலையம் என்ற பதிப்பகம் விற்றுக்கொண்டிருந்தது. நான் தேனுகாவின் புத்தகத்தை வாங்கிக் கொண்டு தேனுகாவிடம் கையெழுத்தும் வாங்கினேன். ஆனால் அந்தக் கூட்டம்தான் அவர் பேசிய கடைசிக் கூட்டம் என்று தெரியாது.
கூட்டம் முடிந்து வெளியே வந்தவுடன், ஒரு மூத்த நண்பர் என்னுடன் பேசிக்கொண்டு வந்தார். அவர் நான் வைத்திருக்கும் தேனுகாவின் புத்தகத்தைக் கேட்டார். ஏனோ கொடுத்துவிட்டேன். அவர் படித்துவிட்டு புத்தகத்தைக் கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை. ஒரு முறை ஒரு கார்டு எழுதினேன். புத்தகம் திருப்பித் தரும்படி. ஆனால் அவர் பதில் எழுதவில்லை. ஆனால் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை.
அதன்பிறகு அவரைப் பார்க்கும்போது எனக்கு நான் கொடுத்தப் புத்தகம் ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது. அவரைப் பார்ப்பதற்கு விரும்பவில்லை. அவர் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் அவர் முன் நான் நிற்க விரும்பவில்லை.
ஒரு முறை ஒரு கூட்டத்தில் என் பக்கத்தில் அவரும் இருந்தார். பின் அவர் என்னிடம் பேச முயற்சி செய்தார். நான் மழுப்பலாகப் பேசினேன்.
"தேனுகா புத்தகம் வேண்டுமா?" என்று திடீரென்று கேட்டார்.
"ஆமாம். தேனுகா கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். நான் அப் புத்தகத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்," என்றேன்.
"நீங்கதான் அந்தப் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லையே எதற்கு அந்தப் புத்தகம்," என்று கேட்டார்.
"நான் படிக்கிறேனோ இல்லையோ அந்தப் புத்தகத்தை நான் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்," என்றேன். அவர் அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்லவே இல்லை. அதனால் அவர் எங்கிருந்து என்னைக் கூப்பிட்டாலும் அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஓட்டமாய் ஓட ஆரம்பித்தேன்.
அப் புத்தகத்தை நான் விலை கொடுத்து வாங்கி உள்ளேன். என்னிடம் அபகரித்த அந்த நண்பர் அந்தப் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லை, என்னிடம் திருப்பியும் தரப் போவதில்லை. அவர் ஒரு புத்தக நோயாளி என்று தோன்றியது.
ஊரிலிருந்து வந்த நண்பர் புத்தகம் வாங்காமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. நானும் அவரும் தி நகரில் உள்ள தக்கர்பாபா பள்ளிக்கூடம் சென்றோம். அங்கே போனதற்குக் காரணம் ஏ கே செட்டியார் காந்தியைப் பற்றி எடுத்த முதல் ஆவணப்படத்தை விலைக்கு வாங்குவதற்காக சென்றோம். அங்கு காந்தி நிலையம் என்ற இடத்தில் அந்த ஆவணப்படத்தின் பிரதி கிடைத்தது. நண்பருக்கும் எனக்கும் சேர்த்து இரண்டு பிரதிகள் வாங்கினேன்.
அங்கு காந்தி நிலையத்தைப் பார்த்துக்கொண்டிருந்த லைப்ரரி பெண்ணிடம் சொன்னேன். üநான் காந்தியைப் பற்றி புத்தகங்களைச் சேர்த்துக் கொண்டு வருகிறேன்,ý படிப்பதில்லையா? என்று கேட்டார் அந்தப் பெண்மணி.
'எப்போது தோன்றினாலும் படிப்பேன்,' என்றேன்.
அங்கு சில புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். என் கண்ணில் பட்டப் புத்தகம் üரசிகமணி கடிதங்கள்ý என்ற புத்தகம். அதைத் தொகுத்தவர் எஸ் மகராஜன் என்பவர். 392 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. அத்தனைப் பக்கங்களும் கடிதங்கள். ஒவ்வொரு கடிதம் மூலம் டி கே சிதம்பரநாதன் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார். அத்தனைக் கடிதங்களையும் அவர் இருவருக்கு மட்டும்தான் எழுதி உள்ளார். ஒருவர் எஸ் மகராஜன். இன்னொருவர் அவருடைய அருமைப் புதல்வி வேலம்மாள் அவர்களுக்கு.
கடிதங்கள் எழுதி குவித்திருக்கிறார். 156 கடிதங்கள் கொண்ட தொகுப்பு இது.
இங்கே அவர் எழுதிய சின்ன கடிதம் ஒன்றை அளிள்க விரும்புகிறேன் :
டி கே சிதம்பரநாத முதலியார் திருக்குற்றாளம்
தென்காசி
12.06.51
அருமைப் புதல்வி
வேலம்மாளுக்கு,
வண்டி இங்கே இருந்து வருகிறது. அதில் எல்லோருமாச் சீக்கிரமாக வந்துவிடலாம். எல்லாருக்கும் மத்தியானச் சாப்பாடு இங்கேதான். வரும்போது தங்கம்மாளையும் உனட் கூட்டிக்கொண்டு வாருங்கள். நேற்றும் இன்றும் வெயில்தான். மழை இல்லை. ஆகையால்க் குழந்தைகள் அருதுவியை லேசில் விட்டுவிட மாட்டார்கள். அதனால்தான் சீக்கிரம் புறப்பட்டு வந்து விட வேண்டும் என்று சொல்கிறேன்.
தம்பியையும் உடன் கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள். சாப்பாடு ஆனதும் அவசியமானால் தென்காசி போய்விட்டுச் சாயங்காலம் குற்றாலம் திரும்பலாம்.
*** ***** ***** ***
நேற்று நல்ல சங்கம் கூடியது. பாடல்கள் சிறக்கிறதெல்லாம் சந்தர்ப்பத்தையும் சங்கத்தையும் பொறுத்தது தானே. தாங்கள் இல்லையே என்று எண்ணிக்கொண்டேன். ஆனாலும், தங்களைப் பற்றிப் பேச நேர்ந்தது. பேசாமல் எப்படி இருக்க முடியும்.
அன்புடன்
டி கே சிதம்பரநாதன்
இந்தப் புத்தகத்தில் உள்ள கடிதங்களை எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். முன்னும் பின்னும் படிக்கலாம். தொடர்கதை மாதிரி கடிதங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறது.
என்னுடன் வந்த நண்பருக்கு இந்தப் புத்தகம் வாங்கிக் கொள்ள விருப்பமில்லை. நானோ பார்த்தவுடன் எடுத்துக்கொண்டேன். அதன் விலை என்ன தெரியுமா? வெறும் இருபது ரூபாய்தான்.
டி கே சி வட்டத்தொட்டி இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார்கள். இது வெளிவந்த ஆண்டு செப்டம்பர் 1979. ரூபாய் இருபதுக்கு இந்தப் புத்தகமா? நான் பத்துப் புத்தகங்களை வாங்கி எல்லோருக்கும் இலவசமாக இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடுக்கலாமா என்று நினைத்தேன். இருபது ரூபாய்தான் இந்தப் புத்தகம்.
Comments