அழகியசிங்கர்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை மக்களை மிரட்டும் என்று தோன்றுகிறது. போன ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த பேய் மழை வெள்ளத்தில் கொண்டு விட்டது. என் அறுபதாண்டு வாழ்க்கையில் அப்படியொரு வெள்ளத்தைப் பார்த்ததே இல்லை. ஒன்றாவது மாடியில் இருந்தாலும் படப்படப்பு லேசில் குறையவே இல்லை. சுற்றிலும் தண்ணீர். திகில் உணர்ச்சியுடன் எல்லோரும் மொட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு பேய் கனவுகள் அடிக்கடி வரும். அந்தப் பேய்க் கனவுகளைக் கண்டு பயந்திருக்கிறேன். திடுக்கிட்டு விழித்து விடுவேன். ஆனால் அந்தப் பேய்க் கனவுகளை நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை. அப்போது அதற்கு என்ன காரணம் என்று அவதிப்பட்டேன். ஆனால் டிசம்பர் மாதம் வெள்ளத்தைப் பார்த்த போன ஆண்டு, பேய்க் கனவு நிஜமாகவே நடந்து முடிந்து விட்டதாக நினைக்கிறேன்.
அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாமல் செயலற்றுப் போனதைப் பார்த்தேன். ஆனால் பலர் தன்னலம் கருதாமல் உதவி செய்த வண்ணம் இருந்தார்கள். இவர்கள் எல்லாம் யார்? இத்தனை ஆண்டுகளாக எங்கே போயிருந்தார்கள் என்றெல்லாம் கேட்க வேண்டும் போல் தோன்றியது. உதவி செய்ய வந்தவரின் அத்தனை முகங்களிலும் ஒரு வித அன்பு. தொடர்ந்து தொடர்ந்து உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் மிதந்து கொண்டே இருந்தது. அப்போதும் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் பெண் மடிப்பாக்கத்தில் எப்படி இருக்கிறால் என்ற கவலையில் ஆழ்ந்திருந்தேன். இதுமாதிரியான ஆபத்துக்களைச் சந்திக்கும்போது நாம் எப்படி இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதும் யோசித்துக்கொண்டிருப்பேன்.
இதுமாதிரியான ஆபத்தான சமயத்தில் நான் ஆசையாய் வாங்கி வைத்திருந்த நானோ ட்விஸ்ட் என்ற கார் எப்படியோ தப்பித்துவிட்டது. நம்மை அறியாமலே நம்மைச் சுற்றி உள்ள அரிய சக்திதான் நானோ காரை தப்பிக்க வைத்துவிட்டது. அந்தக் கார் மாத்திரம் வெள்ளத்தில் மாட்டியிருந்தால், எல்லாம் போயிருக்கும். எனக்கும் திரும்பவும் கார் வாங்கும் ஆசையும் போயிருக்கும். இந்த இடத்தில்தான் ஏதோ அபூர்வ சக்தி நம்மைக் காப்பாற்றுகிறது என்று நம்புகிறேன். கடவுள் என்று சொல்வதில் நான் வெட்கப்படப் போவதில்லை. பேய் மழை பெய்யும் சில தினங்களுக்கு முன் நானோ கார் ஒரு விபத்தில் ஒரு அபத்தமான தமிழ்ப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் தியேட்டரில் மாட்டிவிட அதை எடுத்துக்கொண்டு டாப்பே ரீச்சில் சர்வீஸ் செய்யக் கொடுத்திருந்தேன். பின் பேய் மழை. வெள்ளம். ஆனால் என் புத்தகங்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு விட்டன. 2013 ஆண்டு கொண்டு வந்த வினோதமான பறவை என்ற கவிதைத் தொகுதி வெள்ளத்தில் பெரும்பகுதி போய்விட்டன. ஒவ்வொரு முறையும் நான் அந்தப் புத்தகக் கட்டைப் பார்த்தவுடன் மருண்டு கொண்டிருப்பேன். ஏனென்றால் அந்தக் கவிதைத் தொகுதி என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல், என்னுடனே இருந்தது. அதேபோல் ரோஜா நிறச்சட்டை என்ற கதைத் தொகுதி சிறிது போய் விட்டது. நேர்ப் பக்கம் (அட்டையில் ப்புப் போட மறந்து விட்டேன்) என்ற கட்டுரைத் தொகுதி போயே போய்விட்டது. அதெல்லாம் கொஞ்சம் பிரதிகள்தான். ஆனால் கவிதைத் தொகுதி அதிகப் புத்தகங்கள். அதேபோல் சேகரித்த சில அரிய புத்தகங்கள்.
ஒரு வழியாக வெள்ளம் மனக் கிலேசத்தை உண்டாக்கி சில மாதங்கள் டல்லாக இருந்தது உண்மைதான். இதெல்லாம் போன டிசம்பர் மாதம்.
இந்த டிசம்பர் மாதம் வார்தா புயல். வீட்டைவிட்டு வெளியே போகவில்லை. பால்கனியிலிருந்து தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடித்தது புயல். எங்காவது வீடு விழுந்துவிடப் போகிறதோ என்றெல்லாம் தோன்றியது. ஒரு கோடி வீட்டில் தகர ஷீட் பிய்த்துக்கொண்டு பயங்கர சத்தம் போட்டது. மூன்று வீட்டு தள்ளி உள்ள ராமன் வீட்டு மாமரம் விழுந்து விட்டது. அந்த மரத்தில் உள்ள மாங்காய்கள் நல்ல சுவையாக இருக்கும். ஒருமுறை அவர் அன்பளிப்பாய்க் கொடுத்த மாம்பழத்தை சாப்பிட்டபின், இன்னும் கிடைக்குமா பணம் தருகிறேன் என்றெல்லாம் சொல்லிப் பாரத்தேன். அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எதிரில் முருங்கை மரம் சாய்ந்து விழுந்தது. மற்றபடி எங்கள் தெருவிற்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் நான் பார்த்த இடங்களில் வார்தா புயல் சூறை ஆடிவிட்டுச் சென்று விட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு நான் வாக்கிங் போக முடியவில்லை. மின்சாரம் இல்லாததால் நான் இன்வெர்டர் வெளிச்சத்தில் தமிழ்ப் புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன். அந்தப் புயலை பால்கனியிலிருந்து பார்க்கும்போது, அதன் முன் நான் மண்டியிட விரும்பினேன். அந்த வார்தா புயலை வைத்து ஒரு கவிதை.
யே வார்தா புயலே
எங்கிருந்து பதுங்கிக்கொண்டு
இப்படி வந்தாய்
யார் மீது உனக்குக் கோபம்
மரங்களை எல்லாம் வெட்டி
சாய்த்து விட்டாயே..
அவற்றின் புலம்பல் குரல்
உன் காதில் ஏறவில்லையா...
புயல் என்றால் கண்ணால் பார்க்க முடிந்தது
புயல் என்றால் காதல் கேட்க முடிந்தது
புயல் என்றால் முன்னால் அறிய முடிந்தது
ஆனால் இந்த இடத்தை விட்டுப் போ போ
என்று துரத்தியது காதில் விழவில்லையா?
உனக்கு என் வீர வணக்கம்.
சரி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் என்ன ஆகப் போகிறதோ?
Comments