அழகியசிங்கர்
சமீபத்தில் நான் இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்த்தேன். ஒன்று இறுதிச் சுற்று. இன்னொன்று விசாரணை. என்னால் விசாரணையை விட இறுதிச் சுற்று என்ற படத்தை ரொம்பவும் ரசிக்க முடிந்தது. விசாரணை என்ற படம் பார்ப்பவர்களை தலை கீழாக கவிழ்க்கும் தன்மை கொண்டது.
பொதுவாக சினிமாப் படங்களை யாரும் பொழுது போக்கும் அம்சமாகக் கருதிதான் பார்க்கிறார்கள். நான் இந்த இரு படங்களையும் பார்த்துவிட்டு வரும்போது, இறுதிச் சுற்று பார்த்த திருப்தியை விசாரணை பார்க்கும்போது எனக்கு ஏற்படவில்லை.
வெற்றிமாறன் துணிச்சலாக இந்தப் படத்தை எடுததிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் படம் பார்க்க வருபவர்களுக்கு இந்தப் படம் என்ன சொல்கிறது? இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது. போலீஸ்காரர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்றா?
இறுதிச் சுற்று ஒரு மெல்லிய காதல் கதை. எப்போதும் போல உள்ள காதல் கதை. மீனவக் குப்பத்தில் உள்ள சுட்டிப்பெண்ணான ரித்திகாசிங்கை பாக்ஸராக்கி வெற்றி பெற செய்கிறார் மாதவன். எல்லா பொழுது போக்கு அம்சங்களையும் கொண்ட ஒரு கிளுகிளுப்பான படம்தான் இறுதிச்சுற்று.
ஆனால் விசாரணையோ ஆரம்ப காட்சியிலிருந்து அடி அடியென்று அடிக்கிறார்கள். ஆந்திராவில் மளிகைக் கடையில் வேலை செய்யும் திணேஷ் உள்ளிட்ட நான்கு நண்பர்களையும் செய்யாத திருட்டை ஒப்புக் கொள்ள செய்ய அடிக்கிறார்கள். மிரள வைக்கும் காட்சிகளாக இது காட்டப் படுகிறது. இப்படி ஒரு சாதராண திருட்டு வழக்கிற்காகவா இது மாதிரியான தண்டனையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதிலும் ஒரு பயம் இருக்கிறது. அது அறிந்தோ அறியாமலோ இருக்கிறது. விசாரணை போன்ற படத்தைப் பார்க்கும்போது ஆழ் மனதின் பயத்தைக் கிளற செய்கிறது. மேலும் படத்தின் கடைசி காட்சி வேறுவிதமாக இருக்குமென்று நம்பினேன். அதாவது தினேஷ் மட்டும் தப்பித்துப் போய் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உண்மையைச் சொல்வதுபோல் வரும் என்று நினைத்தேன். ஆனால் அந்தக் காட்சி இன்னும் வன்முறையில் முடிந்து விடுகிறது. விசாரணை என்ற பெயரில் அப்பாவியான இளைஞர்கள் படும் கொடுமையை மட்டும் காட்டவில்லை இந்தப் படம். போலீஸ்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் கொலைகாரர்களாக மாறுவதுபோலவும் காட்டப் படுகிறது. இது ஒருபடம் என்ற முறையில் பார்த்தாலும்,
சமுத்திரகனி கண்காணிப்பில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் விஜாரணை கைதியாக வரும் கிஷோர் விஜாரணை என்ற பெயரில் கொலை செய்யப்படுகிறார். இப்படியா போலீஸ் அவர்களுக்குள்ளேயே வன்மத்தைக் காட்டிக் கொள்வார்கள். சினிமாப் படம் என்றாலும், நம்ப முடியவில்லை.
நாம் பார்க்கும் ஒவ்வொரு படத்திலும் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எப்படி நம்மால் ஒரு படத்தை ரசிக்க முடிகிறது. அபத்தமாக ஒரு படம் இருக்கிறது. லாஜிக் இல்லாமல் ஒரு படம் இருக்கிறது என்பதாக எதையும் நான் அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை. நிஜ வாழ்க்கை என்பது வேறு, சினிமா என்பது வேறு. அது நிழல் உருவ வாழ்க்கை.
ஆரம்பத்தில் ஒரு படம் துன்பத்தைச் சொல்வது போல் ஆரம்பித்தால், முடிவில் துன்பம் மாறிவிடும். அல்லது ஆரம்பத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு படம் இறுதியில் துன்பத்தில் முடிவதாக இருக்கும். இப்படி மாறி மாறி காட்டி மக்களை பரவசப்படுத்துவார்கள். எத்தனையோ எத்தனையோ விதங்களில் இப்படியெல்லாம் காட்சிப் படுத்தப்படுகின்றன.
இறுதிச் சுற்றில் மாதவனால் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சினையை மீனவக் குடும்பத்தில் உள்ள சுட்டிப்பெண் நிறைவேற்றுகிறாள். அந்தக் கடைசிக் காட்சியில் அந்தப் பெண் ஓடிவந்து எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மாதவனை கட்டித் தழுவுவாள்.
ஆனால் விசாரணை அப்படி அல்ல. ஆரம்பத்திலேயே அடி அடியென்று அடிக்கிறார்கள். போலீஸ்காரர்கள் இவ்வளவு கொடுமைகாரர்களா என்று எல்லோரையும் பயமுறுத்துகிறார்கள். சரி படம் முடிவிலாவது துன்பத்திலிருந்து மகிழ்ச்சிக்கு மாறும் தருணம் இருக்கிறதா என்று பார்த்தால் எதவுமில்லை. ஆட்களே இல்லாமல் எல்லோரையும் சாகடித்து விடுகிறார்கள்.
வெற்றி மாறனை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அந்தக் கொண்டாடத்திற்கு நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. என் கருத்துகளை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
Comments