Skip to main content

புத்தக விமர்சனம் 17

புத்தக விமர்சனம் 17

அழகியசிங்கர்

சோ சுப்புராஜ் எழுதிய துரத்தும் நிழல்கள் என்ற சிறுகதைத் தொகுதியை எடுத்து வைத்துக்கொண்டேன்.  20 சிறுகதைகள் கொண்ட 196 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  சுப்புராஜின் இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளும் பல பத்திரிகைகளில் பிரசுரமான கதைகள்.  இதிலிருந்து ஒன்று தெரிகிறது.  சுப்புராஜ் அவர்களுக்கு அவருடைய கதைகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  அவர் எது எழுதினாலும் எதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பினால் போதும் பிரசுரமாகி விடுகிறது.  அவரும் விடாமல் பல கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். உன்னதம் பத்திரிகையில் ஒரு கதையும், நவீன விருட்சம் பத்திரிகையில் ஒரு கதையும் பிரசுரமாகி உள்ளன.  அக் கதைகளை வேறு எங்காவது அனுப்பி இருந்தாலும் பிரசுரமாகி இருக்கும்.
சரி, அப்படியென்றால் தரம் இல்லாத கதைகளையா அவர் எழுதுகிறார் என்றால் அப்படி சொல்லவில்லை.  பலவிதமான கதைகளை அவர் எழுதிக்கொண்டு போகிறார்.  பலவிதமாக கற்பனை செய்கிறார்.  அவர் எழுத்து சமுதாயத்தின் மீது அவருக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறது.  பெண்களுக்கு ஏற்படும் தீங்கு, ஜாதி கண்ணோட்டத்தில் ஒரு ஜாதியை கீழ்த்தரமாகப் பார்ப்பது என்று வலுவான தீம்களை எடுத்து எழுதுகிறார்.  
ஒரு பெண் தனியாக வெளிநாடு போய்ப் படுகிற அவதிகளை ஒரு கதையில் சொல்கிறார்.  அப்படிப் போகிற பெண்  படிப்பறிவு இல்லாதவளாக இருக்கிறாள்.  இழிந்த ஜாதியில் பிறந்ததால், அதிகமாகப் படித்திருந்தாலும் பரம்பரையாகப் பார்த்து வந்த கக்கூஸ் கழுவற வேலையைப் பார்க்க நேருகிற கொடுமையை விவரிக்கிறார். இது மாதிரி தலித் கதைகள் அதிகமாக இந்தத் தொகுதியில் உள்ளன.  இன்னொரு கதையில் ஒரு பள்ளி மாணவி போலீஸ் ஸ்டேஷனலில் கற்பழிக்கப் படுவதைக் குறிப்பிடுகிறார்.  ஊர் அந்தக் கொடுமையான சம்பவத்தைக் கேள்விப்பட்டு போலீஸ் ஸ்டேஷனையே கொளுத்தி விடுகிறார்கள்.  ஆனால் அதன் பின் கொடுக்கும் ட்விஸ்ட்தான் கதையை நம்ப முடியாமல் செய்கிறது. கற்பழிக்கப்பட்ட பெண் என்றால், மன ரீதியில், உடல் ரீதியில் அந்தப் பெண்ணுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதி படுத்திவிடும்.  அவள் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.  ரொம்ப வருடங்களுக்கு முன் எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி நடித்தப் படம் பூமாலை என்ற படம்.  அதில் எஸ்எஸ்ஆர் குடி வெறியில் விஜயகுமாரியைக் கற்பழித்து விடுவார்.  அதனால் கல்யாணம் ஆகாத விஜயகுமாரி கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்வதாக கதை.  இது மாதிரியான பேத்தல் படத்தை இப்போது நம்மால ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. 
தாமரை என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கதை.  கற்பு என்னும் குறும்படத்தின் கதைச் சுருக்கம் (பக்கம் 155).  எடுக்கப்படும் படத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை இக் கதை எடுத்துக் காட்டுகிறது.  நாடக பாணியில் வேடிக்கையாக எழுதப்பட்ட கதை இது.  
ஒரு தற்கொலை; சில குறிப்புகள் (பக்கம் 1) என்ற கதையில் வெறும் மிரட்டலுக்குப் பயந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது. மனது உருகும்படி இந்தக் கதையை எழுதி உள்ளார். ஆனால்  நம்ப முடியவில்லை. 
கண்கள் இரண்டினில் ஒன்று (பக்கம் 16) என்ற கதை தினமணி கதிரில் வெளிவந்த இலக்கியச் சிந்தனை பரிசுப் பெற்ற கதை.  ஒரு பெண்பிளளையைத் தொடர்ந்து படிக்க அனுப்பாத ஒரு குடும்பத்தின் கதை.  பாண்டியம்மாள் என்ற அந்தப் பெண் படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கிறாள்.  ஆனால் என்ன பிரயோஜனம்.  அவள் பெரியவள் ஆனவுடன் அவள் படிப்பை குடும்பத்தினர்கள் நிறுத்தி விடுகிறார்கள்.  பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ள குடும்பம்.  மேலே படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கதை இது.  வழக்கம்போல் சரளமாக எழுதப்பட்ட கதை.  
விஷம் (பக்கம் 20) என்ற கதையைப் படிக்கும்போது எனக்கு தி ஜானகிராமன் எழுதிய கதையும் ஞாபகத்திற்கு வருகிறது.  சாதத்தில் பல்லி விழுந்து செத்துக் கிடக்கிறது.  அந்தச் சாதத்தைப் பிசைந்து தயிர்சாதமாக தன் கணவன் சுந்தரம் எடுத்துக்கொண்டு போய் விடுகிறான்.  பல்லியின் விஷம் தன் கணவனைப் பாதிக்கும் என்ற பதைப்பை கடைசிவரை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் கதையில்.  எப்படியோ அவன் ஆபிஸில் சுந்தரத்தைப் பார்த்து விடுகிறாள்.  கோலாலம்பூரை பின்புலமாகக் கொண்டு இக் கதை எழுதப்பட்டுள்ளது.  மொழி தெரியாத ஒரு இடத்தில் கணவன் பணிபுரியும் இடத்தை அடைவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  இத்தனை பரபரப்பையும் காடடிவிட்டு இறுதியில் யாரோ அந்த டிபன் பாக்ஸ் சாதத்தை சாப்பிட்டு விடுகிறார்கள் என்று முடிக்கிறார். கடைசி வரை பரபரப்பை கூட்டிக்கொண்டு போகிறார்.  இது கணையாழியில் வெளிவந்த கதை. 
கடைசிவரை பெயரை ஞாபகப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு அலுவலக நண்பரைப் பற்றிய கதைதான் ஒரு பெயர் சில ஞாபகங்கள்  (பக்கம் 29) என்ற கதை.  எதிர்பாராதவிதமாய் பஸ்ஸில் சந்திக்கும்போது அவனைப் பற்றிய எல்லா சம்பவங்களும் ஞாபகத்திற்கு வருகிறது.  அவன் பெயர் மட்டும் பிடிபட மாட்டேங்கறது.  விபத்தில்தான் அந்த நண்பனின் பெயர் ஞாபகததிற்கு வருகிறது.  தினமணிகதிரில் வெளிவந்த கதை.  
கொஞ்ச நீளமான கதைதான் துரத்தும் நிழல்கள் (பக்கம் 39) என்ற கதை.  2007ஆம் ஆண்டு கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்ற கதை.  கழிவறையைச் சுத்தம் செய்யும் நரசய்யா என்பவனைப் பற்றிய கதை. இழிந்த சாதியில் பிறந்தால் காலமெல்லாம்  மலம் அள்ளிக்கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கதை மூலம் சுப்புராஜ் எழுப்புகிறார்.  ஒரு தலித் பார்வையில் எழுதப்படட கதை.
நிலமென்னும் நல்லாள் (பக்கம் 51) என்ற கதையில் கதையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற பயம் வந்து கவ்விக்கொண்டது.  ஆனால் காளியப்பனுக்கு சாதகமாக முடிந்தது.  
பொதுவாக சுப்புராஜ் கதைகளில் வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் தமிழர்களின் நிலையைப் பற்றி அக்கறையுடன் எழுதப்படுகிற கதைகள் அதிகம்.  வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் உலகம் பற்றி நமக்கு பெரிதாக தெரிவதில்லை.  அந்தப் பதிவை ஓரளவு சுப்புராஜ் நிறைவேற்றி வைப்பதாக தோன்றுகிறது.  
ஜாதி கொடுமை இவர் கதைகளில் சற்று தூக்குதலாக தெரிகிறது.  பல கதைகளில் இந்த ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். பல கதைகளில் இந்தப் பாட்டைப் பாடும்போது மொத்தமாக இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது சற்று நெருடலாகத் தெரிகிறது.
இவர் கதைகளில் உருக்கத்தை நெகிழும்படி செய்து விடுகிறார். தினமணி கதிரில் வெளிவந்த கருணையின் நிழல்கள் (பக்கம் 140) என்ற கதை ஓர் உதாரணம். 


துரத்தும் நிழல்கள் - சிறுகதைகள் - சோ.சுப்புராஜ் - வெளியீடு : காவ்யா - 16 இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024 - தொலைபேசி : 044 - 23726992,9840480232 - புத்தக விலை :  ரூ.150 - வெளியான ஆண்டு : 2012





-

Comments

என்னுடைய புத்தகத்தை விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.

/சுப்புராஜ் அவர்களுக்கு அவருடைய கதைகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது. அவர் எது எழுதினாலும் எதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பினால் போதும் பிரசுரமாகி விடுகிறது./ எனக்கு சூட்சுமமும் தெரியாது. சுரைக்காயும் தெரியாது. ஒவ்வொரு கதையும் எழுதப்பட்டு இரண்டு மூன்று வருடங்களுக்கு அப்புறம் ஒவ்வொரு இதழுக்கும் அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டு மறுபடியும் மீண்டும் அனுப்பிய பத்திரிக்கைகளுக்கே திரும்பவும் எழுதியோ அல்லது அதே பிரதியையோ அனுப்பி எப்படியோ பிரசுரிக்கப் பட்டவை. என்ன சலிக்காமல் திருப்பித் திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பேன். அவ்வளவு தான்.

இது உங்களின் தகவலுக்காக.
மறுபடியும் நன்றி!

அன்புடன்
சோ.சுப்புராஜ்