Skip to main content

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்...3

டாக்ஸி என்ற ஈரானியப் படம்....

அழகியசிங்கர்


விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள். டாக்ஸி படம் காட்டிய அன்று அந்தப் படம் மட்டும்தான் என்னால் பார்க்க முடிந்தது.  
டாக்ஸி என்ற இந்தப் படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உண்டு.  இரானியன் இயக்குநர் ஜாவர் பன்னஹி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக 2010லிருந்து படம் எடுக்கத் தடை செய்யப்பட்டவர்  மேலும் வீட்டுக் காவலில் உள்ளவர்.   அவர் தடைகளை மீறி எடுத்தப் படம்தான் டாக்ஸி. இந்தப் படம் டாக்ஸிக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட படம்.  டெஹ்ரான் தெருக்களை இந்தப் படம் டாக்ஸியின் வழியாகப் பார்த்தபடி காணப்படும் காட்சிகளை சொல்வதாக எடுக்கப்பட்டுள்ளது.  
டாக்ஸியில் வெவ்வேறு தருணங்களில் ஏறி அமரும் வாடிக்கையாளர்களை வைத்தும் படம் எடுக்கப்பட்டுள்ளது.  படத்தைத் தயாரித்து இயக்கியவரே டாக்ஸி ஓட்டுபவராக நடித்துள்ளார்.  வெவ்வேறு தரப்பட்ட மனிதர்கள் டாக்ஸியில் ஏறி இறங்குகிறார்கள்.  அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இயற்கையாக போரடிக்காமல் அமைகிறது. அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   65வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்றுள்ளது.
டாக்ஸியில் ஒரு காமெரா பொருத்தப்பட்டுள்ளது.  அந்தக் காமெராதான் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று படம் பிடிக்கிறது.  வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருந்தாலொழிய இதுமாதிரியான படத்தை எடுக்க முடியாது.  
முதலில் இந்த டாக்ஸியில் ஒரு ஆணும் பெண்ணும் ஏறுகிறார்கள். தெருவில் கார் ஓடுவதைக் காட்டிக்கொண்டிருந்த காமெரா, மெதுவாக திரும்பி அவர்கள் பக்கம் நகருகிறது.  அந்த ஆண் இந்தக் காமெராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  காமெரா நன்றாகப் பொருத்தப்பட்டுள்ளது என்று வாழ்த்துகிறான்.  அவனுக்கு இந்தக் காமெரா திருடனைக் கண்டுபிடிக்க உதவுவதாக நினைக்கிறான்.  அவனுக்குப் பின்னால் உள்ள சீட்டில் ஏறி அமர்ந்த பெண்ணிற்கும் அவனுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவன் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறான்.  அவனுடைய நண்பனுடைய காரிலுள்ள டயர்களை ஒரு திருடன் திருடிவிட்டு, அந்த டயர்களுக்குப் பதில் செங்கல்களை வைத்துவிட்டதாக சொல்லுகிறான்.  அதுமாதிரியான திருடர்களை கொன்று விட சட்டம் போட வேண்டுமென்கிறான்.  பின்னால் அமர்ந்திருந்த பெண் அவன் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  ஒருத்தர் இரண்டுபேர்களுக்கு அதுமாதிரியான தண்டனை கொடுத்தால்தான் திருடாமல் இருப்பார்கள் என்கிறான்அந்த இளைஞன்.  அந்தப் பெண் தன்னை டீச்சர் என்று சொல்கிறாள். டாக்ஸியிலிருந்து இறங்கும்போது அவன் ஒரு பிக்பாக்கெட்காரன் என்று தன்னைப் பற்றி சிரித்தபடியே அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.   அந்தப் பெண்ணும் இறங்கிப் போய்விடுகிறாள். 
ஒமிட் என்ற இன்னொரு பயணி ஜாவர் பன்னஹியைப் பார்த்து, 'உங்களை எனக்குத் தெரியும்.  உங்கள் மகன் என்னிடம் முக்கியமான சீடிகள் வாங்கியிருக்கிறார்..நீங்கள் படம் எடுப்பவர்.  ஏன் டாக்ஸி ஓட்டுகிறீர்.  அதுவும் படத்தில் வரும் காட்சியா,' என்கிறார்.  டாக்ஸி ஓட்டடுவதும் ஒரு தொழில் என்கிறார் ஜாவர்.  ஓமிட்டை எங்கேயும் பார்த்தமதிரி ஞாபகத்திற்கு வரவில்லை ஜாவருக்கு.  அதன்பின்தான் தெரிகிறது அவர் சினிமா சிடிகளை விற்பவர் என்று.   ஒமிட் உடனே புதியதாக வரப்போகும் படத்திற்கான சீடியைக் கொடுக்கிறார்.  'இந்தப் படம் இன்னும் வரவில்லையே?' என்கிறார் பன்னஹி.  'படம் வெளியே வருவதற்கு முன் எனக்கு வந்துவிடும்,' என்கிறார் ஒமிட்.  இந்தச் சமயத்தில் காரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்துகிறது.  டூ வீலரில் அடிப்பட்ட ஒருவரை அவசரம்ம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு காரில் அடிப்பட்டவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்து ஏறுகிறார்கள்.  அடிப்பட்டவர் முகத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.  அவசரம் அவசரமாக உயில் எழுத விரும்புகிறார் அடிப்பட்டவர் தன் உயிர் போய்விடும் என்று பயந்து.  ஆனால் டாக்ஸியில் பேனாவும் பேப்பரும் இல்லை.  செல்போனில் அவன் சொல்வதைப் படம் பிடிக்கச் சொல்கிறான். அவனுக்குப் பிறகு அவன் மனைவிக்குத்தான் அவனுடைய வீடு தரவேண்டும்  இல்லாவிட்டால் தன் சகோதரர்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று சொல்கிறான். மருத்துவமனையில் அடிப்பட்டவனை சேர்த்தபிறகு அவன் மனைவி ஜாவர் பன்னஹிக்குப்போன் செய்கிறாள்.  தனக்கு படம் எடுத்த விடியோ படம் வேண்டுமென்கிறாள்.  ஜாவர் அதைத் தனியாக எடுத்துத் தருகிறேன் என்கிறார்.  பின் உன் கணவர் எப்படி இருக்கிறார் என்று கேட்கிறார்.  அவர் நலமாக இருக்கிறார் என்கிறாள். அப்படியென்றால் இந்த விடியோ எதற்கு என்று கேட்க, நான் அவர் சொன்னதை வைத்துக்கொள்ள வேண்டும்.  பின்னால் உதவும் என்கிறாள். இதுமாதிரி நகைச்சுவையுடன் காட்சி அமைப்பு இயல்பாக இப்படத்தில் மிளிர்கிறது.  
ஒமிட் திருட்டு சீடி விற்பவர்.  அதை அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விற்கிறார்.  ஒரு வீட்டிற்குச் சென்று அந்த சீடிகளை விற்க வரும்போது காரிலேயே இந்த வியாபாரம் நடக்கிறது.  ஒமிட் ஜாவர் பன்னஹியைத் தன் பார்டனர் என்கிறார் சீடி விற்பவனிடம்.  அவன் கேட்கிறான்.  "உங்களை அவர் பார்டனர் என்று சொல்கிறாரே, உண்மையா?" என்று கேட்கிறான்.  "அப்படியா சொன்னார்," என்கிறார் ஜாவர் பன்னஹி.  
பன்னஹி சினிமாப் படம் எடுப்பவர் என்று அவனுக்கும் அவரைப் பற்றி தெரிகிறது. சினிமா படம் எடுப்பதைப் பற்றிய சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான் அநத இளைஞன்.  'நல்ல நாவல்கள் படித்தாகி விட்டது..நல்ல படங்கள் எடுத்தாகி விட்டது,' என்கிறார் ஜாவர் பன்னஹி.
அந்த இளைஞன் சீடிக்களை வாங்கிக் கொண்டு போனபிறகு, ஜாவர் பன்னஹி பெயரைக் குறிப்பிட்டால், அதிகமாக சீடி விற்க முடியும் என்கிறார் ஒமிட்.  ஈரானில் நல்ல சினிமாக்களை தியேட்டர்களில் பார்க்க முடியாது.  அதனால்தான் சீடிக்கள் மூலம் விற்க முடிகிறது என்கிறார் ஒமிட். இது ஒரு கலாச்சார சேவை என்கிறார் ஓமிட்.  கண்ணாடி ஜாடியில் மீன்களுடன் இரண்டு பெண்கள் அவசரமாக புனித ஸ்தலத்திற்குப்  போக வேண்டுமென்று மன்றாடி டாக்ஸியில் ஏறிக்கொள்கிறார்கள்.
ஒமிட்டை ஒரு இடத்தில் இறக்கி விடுகிறார்.  கீழே இறங்கும்போது சீடி விற்பதற்காக அவர் பெயரைப் பயன்படுத்தியதற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறார் ஒமிட்.  ஜாவர் பன்னஹியும் காரில் வந்ததற்காக அவரிடமிருந்து பணம் வாங்கவில்லை.  கலாச்சார சேவையாக இருக்கட்டும் என்கிறார் சிரித்துக்கொண்டு.   
காட்சி மாறுகிறது.  பின்னால் கண்ணாடி ஜாடியுடன் அமர்ந்த இரண்டு வயதான பெண்கள் அவசரமாக புனித ஸதலத்திற்குச்  செல்ல வேண்டுமென்று  நெருக்கடியைக் கொடுக்கிறார்கள்.  12 மணிக்குள் போக வேண்டுமென்றும் ஜாடியில் உள்ள மீன்களை சேர்பிக்க வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார்கள்.  ஜன நெருக்கடி இருந்தால் அங்கே 12 மணிக்குள் போக முடியாது என்கிறார் பன்னஹி.  அவர்கள் படுத்திற பாட்டில் பன்னஹி வேகமாக டாக்ஸி ஓட்ட ஒரு இடத்தில் பிரேக் போட அவர்கள் வைத்திருந்த கண்ணாடி ஜாடி கீழே விழுந்து ஒடைந்து விடுகிறது.  மீன்களும் கீழே விழுந்து விடுகின்றன.  பதட்டத்துடன் அந்தப் பெண்கள் கத்துகிறார்கள்.  மீன்கள் செத்து விடும் என்று கத்துகிறார்கள்.  அவசரம் அவசரமாக காரின் பின்பக்கத்தில்  உள்ள  ஒரு பிளாஸ்டிக் பையில் தண்ணீரை நிரப்பி மீன்களை அதில் இட்டு காப்பாற்றுகிறார் பன்னஹி.  அவர்கள் அவசரப்படுத்த, பன்னாஹி அவர்களை வேறு டாக்ஸியில் போகும்படி சொல்கிறார்.  பள்ளி வாசலில் இவருக்காக காத்துக்கொண்டிருக்கும் 11 வயது  சகோதரி மகள் அன்னாவை அழைத்துக் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு.  அவர்கள் இருவரும் இவரை திட்டியபடியே வேறு டாக்ஸிக்குப் போகிறார்கள். டாக்ஸியில் வந்ததற்கு இவருக்கு அவர்கள் பணமே கொடுக்கவில்லை.  இதே நம்ம ஊராக இருந்தால் அங்கு நடக்கிற விதமே வேறாக இருக்கும்.  
அன்னா அவர் காரில் ஏறிக்கொண்டே இவரைக் கிண்டல் செய்கிறாள்.  "இவ்வளவு அழகான பெண்ணை யாராவது கடத்திக் கொண்டு போனால் என்ன ஆகிறது?" என்று கேட்கிறாள்.  "அப்படியெல்லாம் நடக்காது என்கிறார்," இவர்.  ஆனால் 11 வயதான பெண் இப்படியெல்லாம் பேசுவாளா என்று தோன்றுகிறது எனக்கு.  அன்னா ஒரு சின்ன காமெரா வைத்துக்கொண்டு இவரைப் படம் எடுக்கிறாள்.  காரிலேயே இதெல்லாம் நடக்கிறது.  அந்தப் பெண் படிக்கும் பள்ளிக்கூடத்தில் படம் எடுக்கும்படி சொல்கிறார்கள்.   அப்படி படம் எடுக்கும்போது  சில கட்டளைகளை நிறைவேற்ற  வேண்டும் என்று வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொடக் கூடாது.  ஆண் பாத்திரத்தில் நடிப்பவர்கள் டை கட்டக் கூடாது.  பர்சியன் பெயர் வைத்திருக்கக் கூடாது.  கொடூரமான உண்மையைக் காட்டக் கூடாது.  அன்னாவால் எப்படிப் படம் எடுத்க முடியும் என்று தெரியவில்லை.
டாகஸியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அராஷ் என்ற நண்பரைப் பார்க்கப் போகிறார் பன்னஹி. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் அந்த நண்பரைப் பார்த்தது.  சிறிது நேரம் பார்த்து விட்டு பன்னஹி திரும்பி வருகிறார்.  அந்த நண்பரும் அவர் கார் அருகில் வந்து அவளுடைய சகோதரி பெண் அன்னாவை ஐஸ் காப்பி வாங்கித் தர அழைத்துப் போகிறார்.  
இந்தப் படத்தில் பல இடங்களில் திருட்டுத்தனமாக சினிமா சீடிக்கள் விற்கிறார்கள்.  அதற்கு அடிப்படையான காரணம் ஈரானில் சினிமாப் படங்களை தியேட்டரில் திரையிட பயங்கரமான கட்டுப்பாடுகள் இருக்குமென்று தோன்றுகிறது.  தனியாக காரில் அமர்ந்திருககும்போது ஒருவநன் இவரிடம் சீடி விற்கிறான்.   மலர்களுடன் ஒரு பெண் வக்கீல் இந்தக் காரில் ஏறுகிறார்.  அவருக்கு ஜாவர் பன்னஹியைத் தெரிந்திருக்கிறது.  அரசாங்கம் கொடுக்கும் கெடுபிடிகளைப் பற்றி சொல்லிவிட்டுச் செல்கிறாள்.  அவள் போனபின் டாக்ஸியின் பின்னால் அமர்ந்த அன்னா ஒரு பர்ûஸக் கண்டுபிடிக்கிறாள்.  பன்னஹியிடம் அதைக் காட்டுகிறாள்.  அந்தப் பர்ஸ் வயதான இரண்டு பெண்மணிகள் காரில் தவற விட்டது என்று பன்னஹிக்குத் தெரிகிறது.  அதைக் கொண்டுபோய் கொடுக்க அந்தப் புனித இடத்திற்கு இருவரும் செல்கிறார்கள்.  காரை ஓரிடத்தில் வைத்துவிட்டு அவர்கள் இருவரும் அந்த வயதான பெண்களைப் பார்க்கச் செல்கிறார்கள். 
அவர்கள் போனவுடன், டூ வீலரில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் காரை நோக்கிச் சென்று டாக்ஸியின் கதவை உடைத்து உள்ளே எதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறான்.   எல்லோரும் இருக்கும் பகல் நேரத்திலேயே இந்தக் கொள்ளை நடக்கிறது.  அதில் காமெராவும் சேதம் அடைந்து விடுகிறது.  காமெராவிலிருந்து படம் எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் பேசுவது காதில் விழுகிறது.  படம் இத்துடன் முடிந்து விடுகிறது.  டாக்ஸியையும் காமெராவையும் வைத்து அருமையாக எடுக்கப்பட்ட படம் இது.  

Comments