Skip to main content

அறுந்த மஞ்சக் கயிறு..


வித்யாசாகர்விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை..
அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் பிடித்து தன்னை விழாமல் காத்துக்கொள்வதற்காக அவளின் தாலிக் கயிற்றைப் பிடித்து இழுத்துவிடுகிறான், அது அறுந்து அவன் கையோடு போய்விடுகிறது.
கலைக்கு தாலி அறுந்ததும் பதற்றம் தாங்கமுடியவில்லை. ஐயோ கடவுளே ஈஸ்வரா என்று அலறுகிறாள். சாமியறைக்கு ஓடிப்போய் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு கொஞ்சம் தாளியிலும் கண்ணீர்மல்க அப்பி வைக்கிறாள்.
தாஜ் ஓடிவந்து தாலிக் கயிற்றை வாங்கி அவளுடைய கழுற்றில் மீண்டும் கட்டிவிட்டு, அசடு இதற்கெல்லாம் போயா இப்படி அழுவாய் என்று சொல்லி அவளுடைய நெற்றியில் ஒரு முத்தமிடுகிறான்.
“வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி அறுந்துப் போச்சே தாஜ்”

“அதனாலென்ன அதலாம் ஒன்னும் ஆகாது, இனி அறுந்துவிடாமப் பார்த்துக்கோ”

“இல்லை தாஜ்., தாலி அறுந்தாலே கெட்ட சகுனம்னுவாங்க, அதிலும் வெள்ளிக்கிழமைன்னு பார்த்து அருந்திருக்கே, இப்படி ஆச்சின்னா புருஷனுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க தாஜ்”

“அம்மா அம்மா.. இதப்பாறேன்..”

“ஹேய்... சும்மா இரு சனியன்.., குழந்தையா நீ, உன்னால தான் இதெல்லாம்”
“ச்ச குழந்தையைப் போயி சனியன் அது இதுன்னு.. நீ வாடா செல்லம்”

அவன் தன் குழந்தை விமலைத் தூக்கி ஒரு முத்தமிட, கலையும் வந்து அவன் மார்மீது சாய்ந்துக் கொண்டாள். கலையும் தாஜும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். பெற்றோர் அவர்களை வீட்டைவிட்டே விரட்டிவிட்டதால் ஒதுங்கி தன் ஒரே மகனான விமலோடு வாழ்க்கையை வாழும் அன்பு இதயங்களுக்கிடையே இப்படி ஒரு மஞ்சக் கயிறு உயிரை அறுக்கும் கத்தியாக வந்துநிற்குமென்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கலைக்கு மட்டும் அந்த கவலை மிகையாக இருந்தது. இப்படி தாலி அறுந்து புருஷன் இறந்த நிறைய கதைகளை அவளின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தார் சொல்ல அவள் முன்பே கேட்டிருக்கிறாள். அதும் வெள்ளிக்கிழமையன்று கண்ணாடியே உடையக் கூடாது என்பார்கள் இன்றென்னடான்னா தாலியே அறுந்துவிட்டதே என்றொரு பெரிய கவலை அவளைத் தொற்றிக்கொள்ள வருத்தத்தில் தாஜைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்க முயற்சிக்கிறாள்.
கடிகார முட்களின் சப்தத்திற்கு இடையிலும் மின்விசிறியின் காற்று உரசும் பொழுதிற்கு நடுவேயும் எப்படியோ அவளுக்கு தூக்கம் வந்து தூங்கிதான் போகிறாள்.
அவள் தூங்கினாலென்ன சும்மா விடுமா அந்த தாலியறுந்த சகுணம் அவளை? என்று கேட்டாற்போல் இதோ அவளின் தூக்கத்தில் புகுந்து கண்திரை கிழித்து கனவாகப் படர்கிறது அந்த மரணபயம்..
கனவை விரட்டி கைகளை அசைத்து போ.. போவென்று தள்ளிவிடுகிறாள் கலை. அவளின் கைபட்டு தாஜ் கண்விழிக்க, தூங்கிக் கொண்டிருந்த கலை எழுந்து தாஜ்.. தாஜ்.. என்று கத்துகிறாள். தலையிலடித்துக் கொண்டு அழுகிறாள். யாரையுமே கன் திறந்துப் பார்க்காமலே அவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதுபோல் துடிதுடித்துப்போகிறாள் கலை.
தாஜ் அவளைக் கட்டி தன் மார்போடு அணைத்துக் கொண்டு சமாதானப் படுத்த முயல கலை அவனை தொட்டு தொட்டு பார்த்து அழுதாள், உடம்பெல்லாம் தடவி உண்மையாகவே அவன் உயிரோடுதான் இருக்கிறானா என்று சரிபார்த்துக் கொண்டாள். ஒரு ஆபத்து நிறைந்த கனவு கண்டதாகவும், வெள்ளிக்கிழமையில் தாலி அறுந்ததன் காரணமே இப்படியெல்லாம் வருகிறதென்றும், கட்டாயமாக ஏதோ கெட்டது நடப்பதற்கான சகுணம்தான் இதலாமென்றும் அழுதுப் புலம்பினாள் கலை.
தாஜ் ஏதோ வேகமாக காரோட்டிப் போனதாகவும், திடீரென கார் பிரேக் பழுதாகி வண்டி நேரே போய் வேறு நிறைய கார்களின்மீது மோதி; பிறகு ஒரு பாலத்தில்மீது முட்டி நசுங்கிவிட்டதாககவும், இவளுக்கு மட்டும் ஒன்றுமே ஆகாமல் பின்னால் நன்றாக அமர்ந்திருந்ததாகவும், பின் பயந்து எட்டியுள்ளே பார்த்தால் தாஜ் நசுங்கிய காரினுடைய பாகத்திலிருந்து தவறி அந்த பாலத்தின் கீழிருந்த ஆற்றினுள் விழுந்து இறந்துவிட்டதாகவும் சொல்லி அவள் கதற – அதைக்கேட்ட தாஜுக்கே கூட கொஞ்சம் பயம் வந்தது.
அதற்குள் தூங்கிக் கொண்டிருந்த விமல் வேறு இவள் செய்த அட்டகாசத்தில் அலறி எழுந்து அவனொரு பக்கம் அழுதுக் கொண்டிருந்தான். தாஜூக்கு யாரை சமாதானப் படுத்துவதென்பதேப் புரியாமல் தவிக்க அருகாமை வீட்டு ஆட்கள் வந்து அதற்குள் கதவைத் தட்டினார்கள்.
பார்த்தியா நீ கத்தி செய்த ஆர்பாட்டம்தான் அக்கம்பக்கம் கூட எழுந்து வந்த விட்டார்கள், ஏன் கலை இப்படி பண்ற, எனக்கு அதலாம் ஒன்றும் ஆயிடாது, சகுனம் ஜோசியமெல்லாம் அத்தனை முழுமையான உண்மையொன்றுமில்லை. அப்படிச் சொல்லத் தக்க ஆட்கள் இப்போதெல்லாம் மிகக் குறைந்துப்போய்விட்டார்கள். இந்த காலத்தில்போய் ஒரு மஞ்சக் கயிறு அறுந்ததுக்கு நீ இப்படி அவஸ்தைப் படுறியே கலை (?). அதலாம் ஒரு கணிப்பு’ எச்சரிக்கை’ அவ்வளவு தான். அதற்காக இப்படி பயந்து நடுங்கி ச்சே..” என்று தலையில் அடித்துக்கொள்ள அவள் மன்னித்துவிடக் கேட்டு அழுதாள். மனசெல்லாம் படபடன்னு இருப்பதாகவும் ஏதோ நடந்துவிடுமோ என்று பயமாகவே இருப்பதாகவும் சொல்லி தவித்தாள் கலை. தாஜூக்கு அவள் படும் அவஸ்தையைக் காண வலிப்பதாக உணர்ந்தான். அதற்குள் மீண்டும் படப்படவென கதவு வேகமாக தட்டப்பட்டது.
ஓடிப்போய் கதவு திறந்தால், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பட்ட தன் குழந்தையை தூக்கிக் கொண்டு நின்றிருந்த பக்கத்துவீட்டுக் காராரின் மனைவி வந்து அவன் காலில் விழுந்து ஓவென்று கத்தினாள்.
ரத்தம் வழிய குழந்தையைப் பார்த்ததும் ‘ஆ அல்லா..’ வென வாய்பொத்திக் கொண்டு தாஜ் அவர்களிடம் என்ன ஆனதென்று கேட்க, திருடன் யாரோ திடீரென வீட்டிற்குள் வந்ததாகவும், அவன் குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும், கடைசியில் பொருட்களைத் தூக்கிக் கொண்டு ஓடுகையில் மகளை தூக்கி தூரே எரிந்துவிட்டதாகவும், இந்த இரவு நேரத்தில் யாரும் உதவ வரமாட்டார்கள் நீங்கள் தான் மருத்துவமனை வரை வந்து உதவவேண்டும் என்றும் கேட்க, தாஜ் சற்று கவலையோடு கலையைப் பார்க்க ‘ஐயோ வென கலை பதறினாள்’ அழத் துவங்கினாள், அவர்களுக்கு இதலாம் ஒன்றும் புரியவில்லை என்பதைவிட புரிந்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லாதிருக்க, தாஜ் ஒன்னுமாகாது நீ போவென்று சொல்லி அவளை உள்ளே அனுப்பி கதவைச் சாற்றிவிட்டு கார்சாவி எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
ரத்தம் போக போக குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக கண்களை இறுக்கி மூடலானாள். அதற்குள் அந்த குழந்தையின் தாய் ஐயோ என் குழந்தை கண்மூடுதே என்று கத்த, தாஜ் பதறியடித்து அவளைத் தூக்கி தன் காரில் படுக்கவைத்துக்கொண்டு அவர்களோடு மருத்துவமனைக்கு விரைந்தான்.
குழந்தை என்பதால் எல்லோருமே மிகுந்த கவனம் காட்டினார்கள். ஆளாளுக்கு ஒருபுறம் ஓடி, ஒரு தனியறையை உடனடியாக சுத்தம் செய்து குழந்தையை அங்கே கிடத்தி ரத்தமெல்லாம் துடைக்க, அவசரமாக அங்கு வந்த மருத்துவர் குழந்தையை நன்றாக பறிசோதித்து, ரத்தமேற்றி மருந்திட்டு வலிபொருக்க மயக்கமருந்தும் கொடுக்க குழந்தை கண்ணயர்ந்து மூடிக் கொண்டது.
பொழுது மெல்ல சாய்ந்து விடிகாலைப் புலர, காகங்கள் இதற்கெல்லாம் சம்மந்தமே இல்லாததாய் தன் மொழியில் கத்திக் கொண்டிருக்க, தாஜ் அருகிலிருந்த ஒரு தேநீர் விடுதிக்கு அந்த குழந்தையின் பெற்றோரை அழைத்துச்சென்று குடிக்க தேநீர் வாங்கிக்கொடுத்து அவனும் ஒரு தேநீர் வாங்கிக்கொள்ள கலை மீண்டும் அவனை அலைபேசியின் வழியே அழைத்தாள்.
இரவெல்லாம் இப்படித் தான் நிமிஷத்திற்கோர் முறை அவள் அவனை இடை இடையே அழைத்து நடப்பதைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள், அவளுக்கு நடப்பதெல்லாமே ஒவ்வொன்றும் விபரீதமானதாகவே இருக்க அது மேலும் பயத்தைக் கூட்டியது.
ஏனோ எல்லாம் நிகழ்வுகக்ளையுயம் வைத்துப்பார்த்தால் ஒவ்வொன்றாக நகர்ந்து கடைசியில் அது தாஜின் மரணம்வரைதான் வந்துவிட யிருக்கிறதோ, அந்த தாலி அறுந்த சகுணம் சங்கதியெல்லாம் சரிதானோ எனுமொரு அச்சம் உள்ளுக்குள்ளே அவளுக்கு மிகுதியாகிக் கொண்டேயிருக்க, அதைப் புரிந்துக்கொண்ட தாஜ் அதைப்பற்றியெஎல்லாம அவளிடம் காட்டிக்கொள்ளாமல் இங்கு மருத்துவமனனயில் நடந்த விவரத்தையெல்லாம் அவ்வப்பொழுது சொல்லிவிட்டு ‘இதோ புறப்பட்டுவிட்டேன், இனி நீ அழைப்பதை விடு கவலையெல்லாம் படாதே நானின்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன்’ என்று சொல்ல, அவளுக்கு பயமாக இருப்பதாகவும், அவனின்றி அவள் ஒரு நொடி கூட உயிரோடிருக்கமாட்டாளென்றும் சொல்லி அழுகிறாள்.
‘வாழ்க்கையின்னா இப்படித் தானே, எல்லாம் தானிருக்கும், நீ கலவரமில்லாமல் இரு, நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் அங்கே வந்துவிடுவேன்’ என்று சமாதானமாகச் சொல்லி அலைபேசியை மடக்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தேனீருக்குப் பணம் தர தன் பணத்தை எடுத்து நீட்ட, அவர்கள் தாம் தருவதாக முன்வர பரவாயில்லை குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
நேரே அங்கிருந்து கார் பார்க்கிங் போய், பார்கிங்கிலிருந்து காரெடுத்து வெளிப்புறம் திரும்பி, பின் வாசலுக்கு வந்து வாசலிலிருந்த அந்த தேநீர் கடை அருகே வர, அங்கே சோகமாய் அமர்ந்திருந்த அந்த பெற்றோர்களைப் பார்த்து மனம் நொந்தான், இப்படி தனியே விட்டுச் சொல்கிறோமே என்றொரு வருத்தம் அவனை மேவிக்கொள்ள, வண்டியை நிறுத்தி இறங்க எண்ணுவதற்குள் மீண்டும் கலை அவனை விடாமல் அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள்.
அழைப்பைத் துண்டித்து அலைபேசியை கார் டேஷ்போர்டின் மேல் வைத்துவிட்டு, அங்கிருந்தே ஜன்னல் கண்ணாடியை கீழிறக்கி அந்த பெற்றோரை ஒரு ஆர்ன் அடித்து அழைத்து ‘சரி நான் சென்று வருகிறேன் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், ஏதேனும் அவசியமெனில் அழையுங்கள்’ என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து புறப்படுகிறான்.
அங்கிருந்து புறப்பட்டு வேகமாக திரும்பி, நான்கைந்து தெரு தாண்டி தன் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடைப்பட்டதொரு தூரத்தில் வருமந்த பாலத்தில் ஏற, கலை மீண்டும் அவனுடைய அலைபேசிக்கு விடாமல் மாறி மாறி அழைக்கிறாள்.
அவனுக்கு கோபமே வந்துவிட்டது. அலைபேசியில் வரும் அழைப்பை ஏற்று அவளிடம் பேசுவதா இல்லை திருப்பத்தில் வண்டி பாலத்தின் மீதேறுகிறதே அதைப் பார்ப்பதா என்று இரண்டிற்கும் மத்தியில் தடுமாறி நிதானிப்பதற்குள் தலையெழுத்தென அந்த கனவுவேறு நினைவில் வந்துத் தொலைக்கிறது.
அவளும் விடாமல் அழைக்கிறாள், மணி அடித்துக் கொண்டேயிருக்கிறது, தாஜ் பாலத்தைப் பார்க்கிறான், அலைபேசி கையில் அலறுகிறது, பின்னால் வந்துகொண்டிருந்த வண்டிகள் வேறு இவனின் வேகக்குறைவினை கண்டித்து வீல் என்று அலறுவதுபோல் மாறி மாறி ஆர்ன் அடிக்கிறார்கள், எதிரே வேகமாக ஒரு லாரி வந்து திரும்பி இடித்துவிடாமல் விலகிவிடும் இடைவெளிக்குள் குப்பென இவனுக்கு வியர்த்து கைகால் ஆடி கண்திரை மூடப்பட்டு இதயம் வெடிப்பதுபோல் ஒரு அதிர்வு மூளைக்குள் அதிர, எட்டிமுறித்து எப்படியேனும் இந்த விபத்தை உதறிவிட்டு தப்பித்துவிடுவதாக எண்ணி ஓங்கி ஒரு உதையை காலால் பிரேக் மீது எட்டிவிட, அது இடம் தவறி ஆக்சிலேட்டர் மீது பட்டு,

அடுத்த வினாடியே வண்டி பாய்ந்துபோய் நான்கைந்து வண்டிகளைத் தாண்டி பாலத்தின் மறுமுனையில் விழுந்து சீறிக்கொண்டுபோய் வேறொரு எதிரே வந்த காரின்மீது முட்டி டயர்கள் இளகி கண்ணாடிகள் உடைந்து ஆடி கலகலத்து பின்பும் முன்நகர்ந்துபோய் நிற்க -
எதிரே எதிர்பாராமல் வந்த வண்டிகளின் மீதெல்லாம் மோதி, ஒன்றன் மீது ஒன்றாக நான்கைந்து வண்டிகள் முட்டி ஒருவழியாக நின்றுவிட, வண்டி மொத்தமும் புகை பரவி, மக்கள் கூட்டம் கூடி உள்ளேயிருந்த தாஜை எடுத்து வெளியே கிடத்துகிறார்கள் தெருப் பயணிகள். அதற்குள் விவரம் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சொல்லப்பட்டு ஐந்தாறு மணித்துளிகள் நகர்வதற்குள் ஆம்புலன்ஸும் தீயணைப்பு வண்டிகளும் சீறிக் கொண்டுவருகிறது.

தாஜினுடைய கதை இப்படியெனில் கலைக்கு நடந்த இன்னொரு கொடுமையைப் பாருங்கள். கலை மீண்டும் மீண்டும் தாஜ் மருத்துவமனையில் நின்றிருந்தபோதே விடாமல் அழைத்துக்கொண்டிருந்தாள் இல்லையா (?)
தாஜ் அதை எடுக்காமல் விட்டதால் அவள் பயந்து பதறி அப்போதே வீட்டிலிருந்துப் புறப்பட்டு மருத்துவமனை வரத் தொடங்கிவிட்டாள். அதைச் சொல்லத் தான் மீண்டும் மீண்டும் அவனை அழைத்து அவன் எடுக்காமல்போக என்னவோ அபாயம் தான் நேர்ந்து விட்டதோ என்று பதறி வேகமாக வந்து பாலம் நெருங்கி தாஜினுடைய காரில் முதன்முதலாய் முட்டியதே இவள் தான்.
சிலநேரம் இப்படித் தான், விதி எல்லாவற்றையும் வென்று விடுகிறது. என்றாலும், அதையும் மதியை பயன்படுத்தி அன்பினால் வெல்ல இயலும் என்பதை இங்கே கலை புரியவைத்துவிடுகிறாள்.
ஆம்புலன்சில் தாஜைத் தூக்கிக் கிடத்தி, அவனோடு முட்டி மோதி தலையில் கைகாளில் அடிப்பட்டு வீழ்ந்த வேறு இரண்டு மூன்று பேரையுமென எல்லோரோடும் சேர்த்து கலையையும் ஏற்றி ஆம்புலன்சிற்குள் படுக்க வைக்கிறார்கள் அவசரப் பிரிவினர்.
அதோடு ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனை நோக்கிப் புறப்பட, அந்த வண்டிக்குள்ளேயே அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் மூலம் எல்லோருக்கும் உடனடி உயிர்காப்பு மருத்துவம் பார்க்கப் படுகிறது. இரண்டு மூன்று பேர் வலியால் துடிக்கின்றனர். தாஜ்க்கு உடம்பெல்லாம் சிராய்ப்பும் மண்டையில் பலத்த அடியும் பட்டிருப்பதாகவும் கலைக்கு அத்தனை அடியில்லை பயத்தில் மயங்கித் தான் கிடக்கிறாள் என்றும் மருத்துவர் சொல்ல, கலை மெல்ல முயன்று கண்களை லேசாக திறக்கப் பார்க்கிறாள்
எதிரே இருப்பவர்கள் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறார்கள். சற்று உற்று இமைப் பிரித்துப் நன்றாக ஆழ்ந்துப் பார்க்கிறாள் தாஜ் எதிரே படுத்திருப்பதுபோல் லேசாகத் தெரிகிறது அவளுக்கு. தாஜுக்கு சீ.பி.ஆர் கொடுத்து வேகமாக மூச்சு வாங்கியதும் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தி ரத்தம் பரிசோதித்தவரிடம் என்ன வகை ரத்தமென்று கேட்டு அதை எடுத்து அவனுக்கு ஏற்ற, அருகிலிருந்தவர் வந்து மானிடர் பார்த்துவிட்டு உயர்த குரலில் இப்போ ஹார்ட் பீட் ஓகே, இனி பயப்படவேண்டாம் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று சொல்ல..,

கலைக்கு கண்களின் ஓரம் ஒரு சொட்டு கண்ணீர் உயிரில் கரைந்து வழிந்தது. முழுதாக கண்திறந்துப் பார்த்து அவன் பிழைத்துவிட்ட சந்தோசத்தில் அவனைக் கட்டிக்கொண்டு அழ இயலாவிட்டாலும் அவளால் அந்த தருணத்தின் உயிர்ப்பினை நன்றாக உணர முடிந்தது.
மனதின் தாளா சந்தோஷம் உடலெங்கும் பரவிநிற்க, கையைத் தூக்கி தன் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ள மார்பில் தடவுகிறாள். அதற்குள் அருகிலிருந்த மருத்துவர் வெடுக்கென கையைப் பிடித்துக்கொண்டு நோ நோ கையையசைக்கக் கூடாது என்று சொல்லி அவள் கையை கீழே அழுத்தி கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, லேசாக உதடு கோணி சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தவாறே மகிழ்வாக கண்மூடி ஆனந்தப் பட்டுக் கொள்கிறாள் கலை.

அவளுக்கெப்படித் தெரியும் அவள் கழுத்திலந்த மஞ்சள் கயிறு இல்லையென்று, அது அப்போதே அந்த பாலத்தில் தாஜினுடைய கார்மீது வந்து அவள் இடித்தபோதே அவளின் கழுற்றிலிருந்து அறுந்து தூர எறியப்பட்டு பாலத்தின் ஓரமிருந்த ஒரு கம்பியில் மாட்டிக் கொண்டிருந்ததை யார்தான் கண்டார்.., அது இப்போதும் காற்று சற்று வேகமாய் வீச அப்போது விழுந்த அதே கம்பியிலிருந்து ஆடிக் கொண்டேயிருந்தது..
தாஜும் கலையும் விதியின் வாசல்களை உடைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மனதால் எண்ணி எண்ணி இனி வாழப்போகும் நாட்களுக்காய் ஏங்கி படுத்துக் கொண்டிருந்தனர். விமல் வெளியேச் சென்ற அப்பாவும் அம்மாவும் எப்போது வருவார்களோ என்று ஜன்னல் வழியே வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தான்..

Comments

Taj said…
அன்புள்ள
வித்தியாசாகர்...
எனக்கு கலப்பு திருமணம் செய்துவைத்து
சந்தோஷப்படுத்தியுள்ளீர்கள் என்று பார்த்தால்...
தாலி/ விபத்து/ படுக்கைன்னு
பயம் காட்டிட்டீங்களே ஸார்!!!
- தாஜ்