பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
7.
நான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாலும் என் சிந்தனை முழுவதும் என் குடும்பத்தைப் பற்றியே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. நான் எடுத்த முடிவு சரிதானா என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். என் தம்பி எனக்கு போன் பண்ணி விஜாரித்தான். ''என்ன உனக்கு கலெக்டர் உத்தியோகமா கொடுத்துள்ளார்கள். ஏன் போகணும்னு ஆசைப்படறே? கீழே இருக்கிறவனும் உன்னை மதிக்க மாட்டான். அதேபோல் மேலே இருக்கிறவனும் மதிக்க மாட்டான். பெரிய சம்பளமும் கிடையாது. '' அவன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை என்பதை நான் உணர்ந்தேன். இதை அங்கே சென்றபிறகுதான் உணர்ந்தேன். தம்பி பெரிய பதவியில் இருப்பவன்.
என் முட்டாள்தனத்தை நினைத்து பெரிதாக வருந்துவதைவிட வாய்விட்டுச் சிரித்தால் சரியாகிவிடும் என்று தோன்றும் நான 50வது வயதை எட்டிக் கொண்டிருக்கிறேன். என் பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு செய்து விட்டேன். ஆனால் திருமணம் நடக்கும் தருணத்தில் பெண்ணுடன் இல்லாமல் பந்தநல்லூரில் இருக்கிறேன்.
விடுமுறை எடுத்துக்கொண்டு வருவதிலிருந்து எல்லோரிடமும் தொங்க வேண்டும். திருமணத்திற்காக ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வர தீர்மானித்தேன். என் எண்ணம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை.
வட்டார மேலாளராக இருக்கிற ராம்மோகனிடம் ஏற்கனவே பணி புரிந்திருக்கிறேன். தலைமை அலுவலகத்தில் அவரிடம் சுருக்கெழுத்தாளராக இருந்த அனுபவம் எனக்குண்டு. பந்தநல்லூருக்கு வருவதற்குமுன் அவரிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டேன். ''சார், என் அப்பாவிற்கு சொந்த ஊர் மாயவரம். எனக்கு அங்கே போஸ்டிங் கொடுங்க..'' என்று கேட்டேன். அவர் கையை விரித்துவிட்டார். பந்தநல்லூர்தான் ஒரே ஊர். மாயவரத்திலிருந்து 28 கிலோமீட்டர தூரத்தில் இருப்பதாகக் கூறி இங்கே போட்டுவிட்டார். வேற எங்காவது என்றால் கும்பகோணம் போக வேண்டும். மேலும் என் உறவினர்கள் சிலர் மாயவரத்தில் இருக்கிறார்கள்.
என் அத்தைப் பெண் குடும்பம் இருக்கிறது. என் பெரியப்பா பையன் குடும்பமும் இருக்கிறது. பஸ்ஸிலிருந்து நேராக நான் திருப்பனந்தால் என்ற இடத்தில் இறங்கினேன். அங்கிருந்து ஒரு பஸ்ஸைப் பிடித்து பந்தநல்லூருக்குச் சென்றேன்
(இன்னும் வரும்)
Comments