Skip to main content

பூனைகள் உலகம்



1 -  நினைவுப் பூனை
____________________

அன்றொரு பூனை பார்த்தேன்
முதுகு தடவி கொடுக்க ஆளின்றி
கண்ணில் மென்சோகம் கவிழ்ந்து
மெதுவாய் நடந்து சென்றது
.
பூனையின் சொந்தக்காரன்
இழுத்த இழுப்பில்
கழுத்தில் பட்டையொடு
விரைந்ததப் பூனை
.
பின்னொருநாளில்
அந்த பூனையைப் பார்க்கையில்
சோகம் கழிக்க என்று
கையேந்த  யோசித்த நேரம்
கையில் கீறி
ரத்தம் சொட்டச் செய்தது
வீட்டுப் பூனையின் நினைவு

****

2 - பூனையின் குரல்
_________________

நாயும் பூனையும்
நித்தம்  சண்டையிடும் வீட்டில்
நாயின் குரல் ஓங்கி இருந்தது
இருவரையும் நிறுத்தச் சொல்லிக்
கத்தி சென்றான்
வீட்டுக் காரன்

பூனையின் குரல் அவனிடமும்
வழக்கம் போலவே
தாழ்ந்திருந்தது.

உன் நியாயத்தை
எஜமானனிடமாவது
 எடுத்து சொல்
என்றேன் பூனையிடம்

என் அடிமைகளிடம் நான்
அதிகம் பேசுவதில்லை
என்றது அந்த பூனை.
******



3  -  இளிச்சவாய் பூனை.
___________________

மகளின் கதைப் புத்தகத்தில்
அறிமுகமானது அந்த பூனை
காதளவு நீளும் புன்னகையுடன்

உனக்கும்  சிரிப்புக்கும்
சம்பந்தம் இல்லை என்றேன்
சிரிப்பை எனக்களித்து
ஓடிப் போய்விட்டது.

இப்போதெல்லாம் நிறையபேர் 
ஏளனம் செய்கிறார்கள் என்னை
இளிச்சவாய் பூனையென்று.

உருவம் காட்டாமலேயே
தோளமர்ந்து சிரிக்கிறது
ஆலிஸின் பூனை

Comments

ஷைலஜா said…
நன்றாக இருக்கிறது பூனைகளைப்பற்றிய வரிகள்
நல்ல கவிதைகள். பூனைகள் கூட்டம் கூட்டமாய் காத்திருக்கின்றன... அவற்றைப் பற்றிய கவிதை நூலுக்காக...