Skip to main content

ராணித் தேனீ

தேனீக்கள் பற்றிய புதியபாடம்
நாளைக்கு


ஆசிரியர் நடத்தும் முன்
வாசித்துச் செல்லும் பழக்கம்
செல்வராணிக்கு


‘குடும்பமாய் வாழும் தேனீக்கள்..
குடும்பத்தின் தலைவி ராணீத்தேனீ ‘


படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது
ராணீத் தேனீ


“எப்போடி வந்தே, சாப்பிட்டியா?”
உழைத்த களைப்பைக்
குரலில் காட்டாமல் கேட்டாள்
வீட்டுக்குள் நுழைந்த அம்மா.


‘ராணியாக வளரவேண்டிய
புழுவுக்கான அறை
பிரத்தியேகமானது
நிலக்கடலை வடிவில்
அழகிய கிண்ணம் போன்றது’


“எந்திரிடி போயீ திண்ணயில
உக்காந்து படி”
உதைத்துத் துரத்தினார்
போதையில் வந்த அப்பா.


‘ராஜாக்களின் வேலை
உண்பது உறங்குவது
இனம் பெருக உதவுவது..
இவற்றுக்குக்
கொடுக்குகள் கிடையாது’


"அய்யோ விடு
புள்ளை பரீச்சைக்கி கட்ட
வச்சிருக்கம்யா”
உள்ளே பாத்திரங்களின் உருளல்
அம்மாவின் அலறல்


“சம்பாதிக்க திமிராடி
பொட்டக்குட்டி படிச்சு
என்னாத்தக் கிழிக்கப் போவுது”
அப்பாவின் உறுமல்
மீண்டும் டாஸ்மாக் நோக்கி
நகர்ந்தன அவர் கால்கள்


‘பஞ்சகாலத்தில் வெளியே
தள்ளப் படுவார்கள்
சோம்பேறி ராஜாக்கள்’


எத்தனை முறை வாசித்தாலும்
இதுமட்டும் மனதில் ஏறாமல்


கேட்கத் தொடங்கியிருந்தது
அம்மாவின் கேவல்


மேலே படிக்க இயலாத
செல்வராணியின் கண்களிலிருந்து
மெல்ல வழிந்திறங்கிய நீர்த்துளிகள்
புத்தகத்தில் விழுந்து நிற்க


முதன் முறையாய்
உப்புக் கரித்தத் திரவத்தை
உறிஞ்சிச் சுவைத்த ராணீத்தேனீ..


நன்றி சொல்லியது கடவுளுக்கு
ராஜாத் தேனீக்களுக்குக்
கொடுக்குகள் தராததற்கு.
***

Comments

மிக அருமை,வித்தியாசமான ஒப்பீடு
இயல்பாக சொல்லிச் சென்ற விதமும்
முத்தாய்ப்பும் மிக அருமை
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
குதிரையிலேறி இரண்டுகளங்களில் பயணித்த நல்லதோர் அனுபவ சித்திரம்
ஆசிரியருக்கும், கருத்து வழங்கிய ரமணி, எஸ். நீலகண்டன் ஆகியோருக்கும் என் நன்றி.