Skip to main content

ரோகி

ரணத்தில் நிணம் கசிய
வீதியில் நின்றிருந்தேன்
பாதசாரிகளின் பார்வைகள்
விநோதமாயிருந்தது
தனக்கு வந்து விடுமோ
என அஞ்சி விலகினர் சிலர்
சிலர் அருவருப்புக் கொண்டு
மண்ணில் காறி உமிழ்ந்தனர்
புண்ணிலிருந்து வீசி்ய
வாடையை காற்று
வாங்கிச் சென்று
இன்னொருவர் நாசிக்குள்
நுழைத்தது
உச்சி வெயிலால்
காயங்கள் எரிந்தன
உடலின் மேல்
மற்றொரு உடல்
போர்த்தியது போலிருந்தது
உடலின் கனத்தால்
பாரம் தாங்க இயலாத
தோணி ஆடுவது போல
உடம்பு அங்குமிங்கும்
அசைந்தது
மரணம் வந்து விடுதலை
தரும் வரை
வேறு கதிமோட்சம்
இல்லையென்று
உள்ளம் புலம்பி அழுதது.

Comments

அருமை".உடல் மேல் ஒரு உடல் போர்த்தியதைப்போல.."
புதுமையான சிந்தனை.கவிதையின் முடிவில் கொஞ்சம்
கூடுதல் அழுத்தம் கொடுத்திருந்தால்
இன்னும் சிறப்பாய் இருக்குமோ..!
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
மானுடத்தின் சுமை விடுபடும் நேரம் மரணம். அழகான சித்திரம்