Skip to main content

எழுத்தின் சாரம்

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
பேனா மை கொட்டலாம்.
பேனா முனை உடையலாம்.
காகிதங்கள் கிழியலாம்.
எழுதியதைக் கிழித்து
கைக் குழந்தை எறியலாம்.

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
நீங்கள் கணிப்பொறியில்
எழுதுபவராக இருந்தால்
தட்டச்சை தட்டிய போது
எழுத்தெல்லாம்
சதுரம் சதுரமாக வரலாம்.
வைரஸ் வந்து
உங்கள் எழுத்துக்களைத்
தின்று போகலாம்.
நினைவுத் தட்டின்
வெட்டுக் காயங்களில்
உங்களின் எழுத்து
உடைபடலாம். அல்லது
உங்கள் எழுத்துக்கு அங்கே
இடமில்லாமலும் இருக்கலாம்.

ஆனாலும்
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
அதில் எப்போதாவது
அபூர்வமாய் ஒளிவட்டத்துடன்
ஒரு நல்ல கவிதை வரலாம்.
அதன் விதையிலிருந்து
ஒரு மரம் வளரலாம்.
அதன் பூவிலிருந்து
ஒரு புதுக் கனி விளையலாம்.
அதைத் தின்ன
ஒரு தேவதை வருவாள்.
அவள் இன்னொரு கவிதையை
உங்களுக்கு தெரியாமலேயே
உங்கள் மனதில்
எழுதிவிட்டுச் செல்வாளாம்.
அந்த கவிதையை
உரக்க நீங்கள்
உச்சரிக்கையில்
பல்லக்கில் ஏற்றி அவள்
உலகமறியாத உன்னத
பரிசொன்றைத் தருவாளாம்.
அதென்ன பரிசு?

அதனை அறிவதற்கு
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்

Comments

ஆம், எழுதுவது பிடிக்கும். எழுதிக் கொண்டே இருக்கின்றேன்:)!

மிக நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நீலகண்டன்.
மிக அருமை.எழுதுவது பிடிக்குமென்றால்....
ஒரு சொற்றொடறை வைத்து
எவ்வளவு அழகாக கவிதை பின்னிப்போகிறீர்கள்
மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மதி said…
excellent lines around a thirst to write :-) super