Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 26



ப்போதெல்லாம் யோசிக்கும்போது இந்தக் கவிதைகளை ஏன் எழுதுகிறோம் என்று தோன்றுகிறது. கவிதைகளை வாசிப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்கள். யாருக்ககாக நாம் கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு கேள்வியைக்கூட நான் கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் யோசிக்கும்போது எனக்காகத்தான் நான் கவிதையை எழுதுகிறேன் என்றாலும், நானே எழுதி நானே வாசிக்கத்தான் கவிதை எழுதுகிறேனா என்ற கேள்வியும் உடன் எழுகிறது. நகுலன் அவர் கவிதைத் தொகுதியைப் புத்தகமாகப் போடுபவர்களைப் பார்த்து 50 பிரதிகளுக்குமேல் போடாதீர்கள் என்பார். தலையை எண்ணி கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து விடலாம் என்றும் சொல்வார்.


ஆரம்பத்தில் எனக்கு வள்ளலார் கவிதைகள் மீது ரொம்ப ஆசை. என்னடா வரிகளை இப்படி கொட்டு கொட்டென்று கொட்டுகிறாரே என்று தோன்றும். பின் என் மனநிலை மாறிவிட்டது. இன்று ஆயிரக்கணக்கான பேர்கள் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கவிதையைப் புரிந்துகொண்டு அதில் ஆழ்ந்து சிந்தித்து எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அலுவலகம் செல்லும்போது மின்சார வண்டியில் எதாவது கவிதையை வாசித்துக் கொண்டே போவேன். இப்படி கவிதை வாசிப்பு கவிதை எழுதுபவனாகக் கூட மாற்றி விட்டது. நானும் 200 கவிதைகளுக்குமேல் எழுதிவிட்டேன்.


மின்சாரவண்டியில் மாம்பலத்தில் ஏறியவுடன், நான் வாசித்த கவிதை என் மனதில் இருந்தால், அது குறித்து யோசித்துக்கொண்டே போவேன். இப்படிப் பல கவிதைகளை நான் ரசித்திருக்கிறேன். ஆனால் கவிதை ரசனை என்பது என் மனதில் திட்டமிட்டுத்தான் நடக்கும். இதற்கும் என் அலுவலகப் பணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்படி நான் செயல்படுவதை கவிதை ரசனை இல்லாதவர்களுக்குக் கிண்டலாகப் படும். ''என்ன கவிஞரே, கவிதை யோசிக்கிறீங்களா?'' என்று கிண்டலடிப்பார் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி. சுட்டுப்போட்டாலும் அவருக்குக் கவிதையே வராது. யோசிப்பது என்பது 24 மணிநேரமும் கவிதையைப் பற்றியே யோசிப்பது என்பதும் கிடையாது.

பிறகு இயற்கை வளமான பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் போதும், இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள், உங்களை மாதிரி கவிஞர்களுக்கு கவிதை எழுத மூட் வந்து விடுமே என்பார்கள். என்ன இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசுகிறார்களே என்று தோன்றும்.

'கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதியிருக்கிறார், ஏன் சார், உங்களுக்கு அப்படியெல்லாம் எழுத வரவில்லை,'என்பார் ஒருவர். அவர்களுக்கு எப்படி விளக்குவது என்பது நமக்குப் புரியாது. கவிதை ரசனை இல்லாதவர்கள்தான் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தமக்கும் கவிதையைப் பற்றி தெரியும் என்பதுபோல் பேசுவார்கள்.


ரொம்ப அறிவாளியான என் நண்பர் ஒருவர், தினமலர் இதழில் வெளிவரும் துணுக்குக் கவிதைகளைக் கொண்டாடு கொண்டாடு என்று கொண்டாடுவார். அவருக்கு விருட்சம் இதழில் வரும் கவிதையைப் பற்றி புரியாது. இப்படியெல்லாம் உள்ள அவதியான சூழ்நிலையில்தான் கவிதை எழுத முயற்சிக்கிறோம். கவிதையைப் பற்றி சிந்திக்கும் என் நண்பர்கள் பலர், தங்களை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். பட்டி மன்றத்தில் வாசிப்பதுபோல், கவிதையை இரைந்து சத்தம் போட்டு வாசிக்கக் கூட விருப்பப் பட மாட்டார்கள்.


இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு ஞாயிற்றுக்கிழமை சமயவேல் என்ற கவி நண்பர், ஜெயமோகன் எழுதியதைப் பற்றி குறிப்பிட்டார். சமயவேல், ஆனந்த், காளி-தாஸ், கனகதாரா போன்றவர்கள் போலி ஜென் கவிஞர்களாம். (இன்னும் ஜெயமோகன் எழுதியதை நான் படிக்கவில்லை) எனக்கு கேட்க வேடிக்கையாக இருந்தது. பிரமிள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். விருட்சம் இதழில் அவர் பெயரைக் குறிப்பிடும்போது, பக்கத்தில் ஞானக்கூத்தன், பசுவய்யா பெயர்கள் எல்லாம் வரக்கூடாதாம். இது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.


சமீபத்தில் அலுவல் விதிப்படி எங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு பெண்மணி வேறு ஒரு கிளைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்படி ஒரு பிரிவு ஏற்படும்போது, கூட்டம் நடக்கும். கூட்டத்தில் பலர் பேசுவார்கள். நான் அந்தச் சந்தர்ப்பத்தில் எதாவது கவிதை வாசிப்பேன். நான் அப்படி ஏற்கனவே எழுதிய கவிதை ஒன்றை வாசிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன், அலுவலகத்தில் உள்ள நண்பர் ஒருவர், 'நான் இப்போதே எழுந்து வெளியே போய்விடுகிறேன்,' என்று மிரட்டினார். கடைசியில் நான் பேசும்போது, வெளிக் கதவைச் சாத்தி விடுகிறேன்...யாரும் வெளியே போகக்கூடாது...என்று மிரட்டி என் கவிதையை வாசித்தேன்.


வாசித்து முடித்தவுடன், கவிதையை கேட்பதற்கும், ரசிப்பதற்கும் ஆட்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்று வருத்தமாக இருந்தது.

Comments

உலகில் ஒவ்வொன்றையும் இப்படி ஆழ்ந்து நாம் சிந்திக்கும் போது மனம் மிகுந்த சலிப்பிற்குள்ளாகி விடுகிறது. உலகில் பலரும் மற்றவர்களை குறை சொல்லியும் தன்னை மிகைப் படுத்தியும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்சிகள் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது போலவே இலக்கியவாதிகள் பலரும் மாறி மாறி கருத்துக்களைக் கூறி தங்களை அடையாளப் படுத்தியும் தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள்.சில நேரங்களில் பிரபலம் என்ற ஆளுமையால் கவிதைகள் திணிக்கப் படுகின்றன. ஆனால் உங்களைப் போன்ற உயர்ந்த கலைஞனின் எழுத்துக்களின் அதிர்வுகள் ஒரு தொடர் வினையினை வாசகனிடமும் எழுத்தாளனிடமும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் எழுதுவது எங்கோ ஏதோ ஒரு அலையை எழுப்பிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நீங்களே உற்சாகம் குறைந்தால் நாங்கள்?
உண்மைதான். கவிதை கதையெழுதி என்ன சாதிக்க போகின்றோம் எ‌ன்று பலநேரங்களில் ஒருவித சலிப்பு தோன்றும். அப்போதெல்லாம் இலக்கியத்தில் தீவிரமாக குறிப்பாக தொடர்ச்சியாக இயங்கும் உங்களை போன்றோர்களை நினைத்து உற்சாகம் அடைவோம். நீங்களே இப்படி சலித்துக்கொண்டால் நாங்கள்? எங்கோ நீங்கள் வைத்த/வைக்கும் ஒரு புள்ளி தொடர்ச்சியாக மற்றவர்களால் ஒரு கோட்டை இழுத்துச்செல்லும்.
Unknown said…
என் எண்ணங்கள் உங்கள் கட்டுரை படித்ததும்..

தமிழில் இலக்கிய முயற்சியில் ஈடுபடும் எல்லோருக்கும்
ஒரு வியாதி இருக்கிறது..

1. நான் எழுதுவதுதான் எழுத்து (அ) இலக்கியம்
2. மற்ற வெகுஜன எழுத்துக்கள் எல்லாம் குப்பை
3. நான் என் மனம் போல் எழுதுவேன்.. ஆனால்
எல்லோரும் என்னை கொண்டாட வேண்டும்.
4. என் எழுத்து எனக்கு பணம் கொணர வேண்டும்..
5. நான் வித்யாசமானவன்.. குடும்பத்தைக் கவனிக்க
மாட்டேன்.. ஆனால் குடும்பத்தினர் எல்லோரும்
என்மீது மரியாதை கோண்டிருக்க வேண்டும்..
6. எழுத்து மட்டுமே என் தொழில்..ஆனால் லௌகீக
மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா சுகமும் எனக்கு வேண்டும்..


எழுத்து ஒரு தவம். வேலை அல்ல.. எப்போது சலிப்பு
வருகிறதோ அப்போது தவம் கலைகிறது..

அங்கீகாரம் வேண்டுமெனில் வேறு வழிகள் இருக்கின்றன..

நல்ல எழுத்துக்கு வெகுஜன அங்கீகாரம் கிடைக்காது
என்பதை அறிந்தவன் அறிவாளி..

உயர்ந்த மானசரோவரில் ஆயிரக்கணக்கில் காக்கைகள்
கிடையாது.. ஒரு சில ஹம்ஸ பட்சிகள் மட்டுமே
இருக்கும்..
திரு சிவன்,
ஒரு சில எழுத்தாளர்களின் வியாதிகளை ,எல்லோருக்கும் இருக்கும் என்று நம்பாதிர்கள்.
சலிப்பும் தவத்தின் ஒரு நிலையே!
௨௨ ஆண்டுகளாக ஒருவர் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் இயங்கும் பொழுது ஏற்படும் சலிப்பு இயல்பானதே ,சில ஆண்டுகளுக்கு முன்னால் (௨00௫)
லா ச ரா வை சந்தித்த பொழுது ," எழுதி எண்ணத கண்டோம் இந்த மாதிரி வெட்டி பேச்சு தான் மிச்சம் " என்றார்.
(எனக்கு தெரிந்து தமிழில் நீண்டநாள் எழுதிய எழுத்தாளர் அவர்.)
மற்றபடி அ சிங்கர் , எழுதுவதை நிறுதிடலம்னு கனவு காணதிர்கள்.
தப்பிக்க முடியாது :(
அன்புடன்
சுந்தர் குருக்கள்