Skip to main content

ஆட்டுவித்தால் யாரொருவர்


அன்புள்ள அம்மா,

ஊரிலிருந்து வந்தவுடன் எழுதுவதாகக் கூறிவிட்டு மூன்று நாட்கள் கழித்துதான் எழுத முடிந்தது. கோபிக்காதே. டெலிபோனில் கூப்பிட்டால் அவசரமாகப் பேச வேண்டும். எவ்வளவோ சொல்ல வேண்டியுள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன். அப்பா இறந்தவுடன் கிட்டு மாமா வந்து போனதாக நீ சொன்னபோது, அவர் முகம் நினைவுக்கு வரவில்லை. நேரில் பார்த்ததும், நினைவு வந்தது. அவர் உன் மீது உயிரையே வைத்திருக்கிறார். "இனிமே இது உன்னோட வீடு ... தெரிஞ்சுதா? நான் வேலை வங்கித் தர்றேன்." என சந்தோஷப் பட்டார். சீக்கிரமே வேலை கிடைத்து அப்பாவுடைய கடனை எல்லாம் தீர்க்கத்தான் போகிறேன். உடம்பை கவனித்துக்கொள். கவலைப்படாதே.

அன்புடன்,

சிவா.


***************************


சிவாவின் டயரியில்:


அம்மா, உன்னிடம் பொய் சொல்ல மனம் வராததால் இதை டயரியில் எழுதுகிறேன். என்னை மன்னித்து விடு அம்மா. இதுதான் உண்மை. மாமா வீட்டில் நுழைந்த மறுகணமே, மாமி "என்னப்பா திடீர்னு?" என்றாள். மாமாவிடம் போனில் பேசிய விஷயம் ஆபீசோடு நின்று விட்டது. கண் ஜாடை காட்டிய மாமாவைப் பார்த்தபடி, "சும்மாதான் வந்திருக்கேன்" என சமாளித்தேன்.

"சரி ... அம்மா சௌக்கியமா? வேலை ... கீலை ... கெடைக்குமான்னு பாக்கிறதுதானே? சர்டிபிகேட் எல்லாம் கொண்டு வந்திருக்கியா?" எடுத்துக் கொடுத்தேன்.

"நான் எப்ப சொன்னது இப்ப வந்திருக்கே..."

பெட்டியையும் என்னையும் மாறி மாறிப் பார்த்து "நீ வேற எதுக்குப்பா எங்களுக்குத் தலைவலி?"

மாமி வெடுக்கென்று உள்ளே செல்ல, பின் தொடர்ந்த மாமா பேசுவது கேட்டது: " ஏய் ... சத்தம் போடாதே பாவம், புருஷன் போய்ட்டான். புள்ளையோட தனியா நிக்கிறவளுக்கு ... ஒரு உதவி..."

"கஷ்டப்படறவங்களுக்கெல்லாம் செய்ய இங்கே என்ன கொட்டியா கிடக்குது?"

"இப்ப என்ன செய்யச் சொல்றே . ..?"

"நாங்க இன்னிக்கு ராத்திரி 'டூர்' போறோம். எட்டு நாளில வந்துருவோம்னு சொல்லுங்க ..."

"இப்பத்தான் வந்தான் ... ஒரு வேளை சாப்பாடு கூடப் போடல ...

"சாப்பாடுதானே? நீங்களே போயி வாங்கிட்டு வாங்க ... என்னால முடியாது ..."

மாமா வெளியே வரும்போது ஜன்னல் வழியே ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

"வாடா போகலாம்... இந்த இடம் ஊருக்கு வெளியே ரொம்பத் தள்ளி இருக்குது. மெயினான இடத்துல உன்னைத் தங்க வைக்கிறேன் ..." என்றார்.

"போன வருஷம் புக் பண்ணினது டூர். மூகாம்பிகை, தர்மசாலா எல்லாம். எட்டு நாளாகும் ... வந்தவுடனே நீ திரும்பி வந்துடலாம்."

நாங்கள் போன இடம் ஒரு பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடி. ஆறாவது தளம். ஒரு சிறிய அறையில் ஐந்து பேர். நான் ஆறாவது ஆள்.

"வாங்க சார்!" என்றவன் மாமாவோட ஆபீஸ் பியூனின் மைத்துனன். தரையில்தான் உட்காருவது, படுப்பது எல்லாம். ஒரு பழைய மோடாவும் ஒரு மடக்கு நாற்காலியும் ரெண்டு பிளாஸ்டிக் பாய்களும் உள்ளன. அவற்றில் ஒருவர் மாற்றி ஒருவர் உட்கார்ந்து கொள்ளலாம். கக்கூஸ் ரொம்ப கண்ராவி. பழைய டால்டா டின்னில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கழுவ வேண்டும். ஜன்னல் வழியே காற்று வராது. வந்தாலும் அடுத்திருக்கும் கட்டடம் மிக நெருங்கி இருப்பதோடு அதன் ஏ சீ பெட்டி நேராக இருப்பதால் உஷ்ணமாக இருக்கும். அதனால் அதைத் திறப்பதில்லை. சாப்பாடு ஒரு நாளைக்கு ஒரு முறை - மெஸ்ஸில்.

*******************

நான்கு நாட்கள் கழிந்தவுடன்:

அன்புள்ள அம்மா,

இங்கு நான் வசதியாக இருக்கிறேன். இவ்வளவு உயரத்தில் இருப்பேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை. ஆறாவது மாடியில் இருந்து பார்த்தால், எல்லோரும் சின்னஞ்சிறு உருவங்களாகத் தெரிகிறார்கள். என்னைச்சுற்றி எல்லா பக்கமும் ஏ சீ தான். முதல் சம்பளம் வாங்கியதும் உனக்கு அனுப்புகிறேன். நீ பென்ஷன் பணத்தில் நன்றாகச் சாப்பிடு. எனக்காகக் கவலைப்படாதே. விரைவில் வருகிறேன். நேற்று ஒரு பெரிய மனிதரைப் பார்க்க காரில் அழைத்துப் போனார்கள்.

"நேர் வழி என்றும் கை கொடுக்கும்" னு நீ அடிக்கடி சொல்றது நினைவுக்கு வருது. போன வருஷம் தீபாவளிக்கு 'டவுன்ஹால்' பக்கத்து ஜவுளிக் கடையில மஞ்சள் நிறச் சட்டை ஒன்று எடுத்துத் தந்தியே ... அந்தச் சட்டைதான் இந்த மரியாதைக்கெல்லாம் காரணம். நேற்று இரவு முதல் வெறும் இனிப்பாகவே சாப்பிடுகிறேன். என் முகத்தில் பூரிப்பை நீ பார்க்கவில்லையே என்ற குறைதான் ... விரைவில் உன்னைக் காண வருவேன்.

அன்பு மகன்,

சிவா.

சிவாவின் டயரியில் :

இங்கு என்னுடன் உள்ள ஐந்து பேரில் தாமஸ் என்பவன் கேக் மாஸ்டர். சரியான பொறுக்கி. மதியம் இரண்டு மணிக்கு வேலை முடிந்தால், தண்ணி அடித்துவிட்டுத்தான் ரூமுக்கு வருவான்.

மற்ற நால்வரும் கீழே ஓட்டலில் வேலை செய்கிறார்கள். அதில் ராஜு நன்றாகப் பாடுகிறான். கல்யாணம் ஆனவுடன் மனைவியைப் பிரிந்து விட்டானாம். ஏதோ தகராறு பெரியவர்களுக்குள் ... மானப் பிரச்னை என்று அவளை அழைத்துப் போய் விட்டார்களாம். மூணு வருஷமாக அவள் நினைவாகவே பாடுகிறான்.

"ராஜாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு" பாடும்போது ரொம்ப உருக்கமா இருந்தது. நான் கூட அழுது விட்டேன்.

இங்கிருந்து பார்த்தால் சற்றுத் தள்ளி நாலு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அதில் பாத்ரூமில் இளம் வயதுப் பெண் ஒருத்தி காலையும் மாலையும் குளிப்பது சரிவாக கண்ணாடிகள் அடுக்கிய ஜன்னல் வழியாகத் தெரியுமாம். தாமஸ் இதைப் பார்ப்பது தெரிந்து அவள் வீட்டிலிருந்து காரில் நாலு பேரை அனுப்பி வைத்தார்கள். தாமஸ் புண்ணியவான். என்னுடைய மஞ்சள் சட்டையப் போட்டுக் கொண்டு நின்றிருக்கிறான்.

உள்ளே வந்த தடியன்கள் அப்போதுதான் அவன் கழற்றிக் கொடியில் போட்டிருந்த மஞ்சள் சட்டையைக் காட்டி, "இது யாருது?" என்றனர்.

நான் என்னுதுதான் என்ற உண்மையைச் சொன்னவுடன், தரதர என்று என்னை இழுத்துப் போய் காரில் ஏற்றினர். அப்போதுகூட தாமஸ் மட்டும்தான் அறையிலிருந்தான். ஆனால் அவன் ஒன்றும் செய்யவில்லை.

"என்ன சார் மேட்டெர்?" என்றான்.

"வந்து சொல்வாரு தொரை" என்றவர்கள், காரில் என் இரு பக்கமும் தோளில் கை போட்டுக் கொண்டு, மிக நெருக்கமாகக் உட்கார்ந்தனர்.

நாங்கள் போய்ச் சேர்ந்த வீடு மாதிரி, ஹிந்தி சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறேன். கீழேயே நின்றிருந்தோம். ஒருவன் மட்டும் மேலே போய்விட்டு, பிறகு கை தட்டி அழைத்தான். உள்ளே சென்றோம். படிக்கட்டில் கூட கம்பளம், காலுக்கு மெத்தை போல இருந்தது. படுத்துத் தூங்கலாம். பெரிய ஹாலில் நேஷனல் ஜிக்ரபிக் சேனல்ல கழுதைப் புலி ஒன்று சிங்கக் குட்டிகளை தூக்கிப் போய் குதறுவதை வெகு சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் கழுத்தில் ஒற்றை ருத்ராட்சம் தங்கச் சங்கிலியில் தொங்கியது. சந்தனக் கீற்றுக்கு மேலே நெற்றியில் குங்குமம். வயது ஐம்பது இருக்கும். பெரிய தொப்பை.

"என்னடா?" என்றார். முக்கியமான நியூஸ் பார்ப்பது போல மீண்டும் டி வியில் லயித்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, அந்த தடியன் ஒருவன்

"இவன்தான் ஐயா அந்த மஞ்ச சர்ட்டு ..." என்றான்.

"உக்காலி, சரசாம்மா குளிக்கிறது இவருக்கு இங்கிலீஸ் படமாட்டம் இருக்குதாக்கும்."

குறிப்பறிந்து அந்தத் தடியன் மூக்கில் விட்ட குத்தில் மேல் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது ... சட்டைஎல்லாம் ஒரே ரத்தம்...

"எந்த ஊருடா உனுக்கு ...?"

"திருத்துறைப்பூண்டி ... நான் என்ன செஞ்சேன்னு ...?" கேட்பதற்குள் ஒருவன் காதைப் பிடித்து இழுத்துத் தள்ளிய வேகத்தில் தொப்பைக்காரர் காலடியில் போய் விழுந்தேன். டி வியில் இருந்து கண்ணை எடுக்காமலேயே,

"என்ன வேலைடா செய்யுறே?" என்றார்.

"வேலை இல்லை சார்."

"ஊர்ல அப்பன் ஆயி படிக்க வச்சு பொழப்புக்கு அனுப்புனா, இங்க மேயப் பாக்குரானுவோ ... சொல்லி வைடா ... போ போ"

வெளியே போகச் சொல்லி ஜாடை காட்ட, ரத்தம் வழிய வெளியே வரும்போது, இரண்டு டோபர்மன் நாய்கள் சோபாவின் அருகே படுத்தபடி என்னை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ரூமுக்கு வந்தவுடன் மற்ற நாலு பேரும் "ஐயோ பாவமே! என்னையா பண்ணினே?" என்று பதற, வாயக் கொப்பளித்து, ஐஸ் கட்டி வைத்தழுத்தியதில் ரத்தம் வருவது நின்று போனது. "உங்க மாமா கிட்ட வேணா போவலாமா?"

"அவுரு ஊர்ல இல்ல ... வரதுக்கு இன்னும் அஞ்சு நாளாகும்."

"மெஸ்ஸுக்கு வேணா போய் சாப்பிடறதுக்கு எதுனா வாங்கீனு வரவா?" என்றான் ராஜு.

"சூடா சாப்பிடாதே ... ரத்தம் வரும் ... வலியும் எடுக்கும்" என்றான் பக்கிரி. அவன் பாலக்காட்டில ஒரு டாக்டர்கிட்ட இருந்தவன்.

"டேய், இனிப்பு சாப்பிட்டால் எரியாது. குலோப்ஜாமுன் அல்லது ஜாங்கிரி எடுத்தா" என்றான் தாமஸ். இப்படி முகம் வீங்கிப் போய் (பூரித்து) இருப்பதால் பார்த்தால் உனக்கே என்னை அடையாளம் தெரியாது. இனிப்பாகவே இரண்டு நாளாக சாப்பிடுகிறேன்.

தாமஸ் ஆறுதலாய், "அந்தத் தொப்பைக்காரன் பெரிய தாதா ... குளிக்கிறது அவனோட பொண்ணு இல்லே ... செட்டப்பு ... நாம பாக்கறது அவளுக்குத் தெரியும். ஆனா ஜன்னல் மேல ஒரு டவலப் போடறதுதானே. சிறு வயசுக் குட்டி ... வேணுமின்னேதான் இப்படிக் குளிக்கிது. நீ வேற ... போப்பா" என்றான். இன்னும் என்னவெல்லாம் வரப் போகுதோ?
***********************
அன்புள்ள அம்மா,

நான் நலமாக இருக்கிறேன். ஆஸ்துமா அதிகமாகும் காலமாச்சே ... வெளியே போகாதே. நாமும் காஸ் அடுப்பு வாங்கணும்னு ஆசைப் பட்டியே ... இங்கு காஸ் அடுப்புகள் நிறைய. வாய்க்கு ருசியா எல்லாமே சாப்பிடக் கூடிய வசதியும் வந்துடுச்சு. இந்த நிறுவனத்துல எல்லாருமே யூனிபார்ம் போடணும்னு ஒரு சட்டம். என்னை இந்தக் கோலத்துல நீ பார்த்தா ... அப்படியே பிரமிச்சுப் போய்டுவே. கம்ப்யூட்டர் படிச்சுட்டு ஏ சீ ரூம்ல வேலைக்குப் போகணுமேன்னு கவலைப் பட்டேன். ஆனா எனக்கும் ஏ சீ ரூம்ல 'வீசிங்' வருது. அதுனால சூடா இருந்தாலும் பரவாயில்லன்னு பின் பக்கம் உள்ள ஒரு இடத்துக்கு மாத்திக்கிட்டேன். நல்லா வசதி நிறைந்த இடம். எல்லாருமே "சிவா, சிவா" ன்னு என்னைத்தான் கூப்பிடறாங்க. மேனேஜெர்க்கு என் மேல ஒரு தனிப் பிரியம். நம் ஊர் பீ . டீ. ஓ. குடும்பத்தோட எங்க ஆபீசுக்கு வந்திருந்தார். என்ன விஷயம்னு தெரியலை ... நான் போய் பார்க்கறதுக்குள்ள அவர் கிளம்பிப் போய்ட்டாரு. அவர் என்னைப் பார்த்தாரான்னு தெரியலை ... அவரை உனக்கு நினைவிருக்காம்மா? உசரமா, ஒடிசலா இருப்பாரே கன்னடக்காரர், அவர்தான். நீ பென்ஷன் வாங்கப் போகைல எதாவது சொல்லுவாருன்னு நினைக்கிறேன். நாம ஒருமுறை மாரியம்மன் கோவில்ல குறி கேட்டப்ப சொன்னாரே நினைவிருக்கா உனக்கு? இவன் படிக்கிறது ஒண்ணு செய்யிறது ஒண்ணுன்னு இருப்பான்னார் இல்லே ... அது பலிச்சுடுச்சு. நான் வேற துறைலதான் இருக்கேன். நேர்ல பாக்கும்போது சொல்றேன்.

பீ . டீ. ஓ. ஒண்ணும் சொல்லலியே?

அன்புடன்,

சிவா.

டயரிக் குறிப்பு :

மெஸ்ஸில் சாப்பிட்டதில் பணம் தீர்ந்து போனது. பதினெட்டு ரூபாய் சாப்பாடு. இரவில் பதினைந்து ரூபாய். ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுப் பார்த்தேன். முக வீக்கம் போய் விட்டது. அடிபட்டதில் முன்பல் ஒன்று மட்டும் கருப்பாகி உள்ளது. வேறு வேலை கிடைக்கிறவரைக்கும் பரவாயில்லை என்று ஓட்டலில் இருக்கிறேன். இந்த ஓட்டலில் வேலையில் சேரும்போது சுத்தம் செய்பவனாகத்தான் சேர வேண்டும். நண்பர்கள் நால்வரும் டிப்ஸ் தந்ததால், முதலாளி விசாரித்தபோது நான் கம்ப்யூட்டர் படித்த விஷயம் சொல்லவில்லை. ஒன்பதாம் வகுப்பு வரை படித்ததாகவே சொன்னேன். என்றாவது ஒரு நாள் இது அவருக்குத் தெரிந்தால் பெயர் கெட்டுப்போய்விடும் என்று கவலைப் பட்டேன். ஆனால் இது ஒன்றும் நிரந்தரமில்லை. கம்ப்யூட்டர் தெரிந்தவனுக்கு சர்வர் வேலை எதற்கு? வாரம் 350 ரூபாய் சம்பளம். காக்கி டிராயெர் சட்டை மூணு செட்டு உண்டு. வாஷ் பேசின் நாலு, ரெண்டு கக்கூஸ், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கழுவ வேண்டும். வேனில் காய்கறி மூட்டை, காஸ் சிலிண்டர் ஏதும் வந்தால் இறக்குவது ... குப்பைகளை லாரியில் காலை ஏழு மணிக்குள் ஏற்றி அனுப்புவது எல்லாம் என்னோட வேலை. மதியம் ஒன்றரை மணிக்கு ரூமுக்கு வந்து விடுகிறேன். வெயில் அதிகமாக இருப்பதால் மாடிப் படி அடியில் உக்கர்ந்துதான் எழுதுவதும் படிப்பதும். ஊரில் பீ . டீ. ஓ. மகள் என் கூடத்தான் படித்தாள். நான் முதல் ரேங்க் வாங்கியபோது அவள் ட்வெல்த் ரேங்க் வாங்கினாள் . அவள் என்னை ஓட்டலில் பார்த்திருந்தால், நிச்சயம் ஊர் பூரா சொல்லிவிடுவாள். அதுதான் மிகப் பெரிய கவலையாக உள்ளது.

********************

அடுத்த மாத இறுதியில்:

அன்புள்ள அம்மா, நான் நலமாக இருக்கிறேன். மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட முடிகிறது. உனக்கும் அடுத்த மாதம் முதல் பணம் அனுப்புகிறேன். இங்கு என் நண்பர்கள் உயிருக்கு உயிராகப் பழகுகிறார்கள். ராஜு பாவம்! அவனுக்கு வைத்தீஸ்வரன் கோவில் போய் ஏடு எடுத்துப் படிக்கணுமாம். ஏன் மனைவியப் பிரிந்தான்னு தெரியணுமாம். தாமஸ் அவனைக் கிண்டல் பண்ணினான். என்னிக்கு அடிச்சுக்கப் போறாங்களோ தெரியலை. மாமா வீட்டுக்கு அடிக்கடி போய் வரேன். அவர் ரொம்ப நல்லவர். ஆஸ்துமாவுக்கு ஊசி வேண்டாமாம். ஸ்ப்ரே நல்லதாம். பக்கிரி சொன்னான். MKS டாக்டர்கிட்ட போய்க் காட்டு. புது ஆளுகிட்ட எல்லாம் போக வேணாம். அடிக்கடி ஊசி போட்டால் எலும்பு மக்கிடுமாம் - பக்கிரி சொன்னான். சீக்கிரமே பணம் அனுப்புகிறேன். அன்பு மகன், சிவா. டயரிக் குறிப்பு: அம்மா, வழக்கம்போல பொய்தான். நண்பர்கள் உயிர் நண்பர்கள்தான். பாக்கெட்ல கை விட்டுக் காசை எடுக்கிறார்கள். அந்த அளவு நெருக்கம். சாப்பாடு மூன்று வேளை ஓட்டலிலேயே போட்டுதான் அனுப்புகிறார்கள். என் சோப்பு, டவல், லுங்கி எல்லாம் இவர்கள் இஷ்டத்துக்கு எடுத்து கொள்வது பிடிக்கவில்லை. அதுவும் ராஜுவுக்குப் படை - மருந்து போடுகிறான். நாள் பூரா சொரிந்து கொள்வது கொஞ்சம் அருவருப்புதான். டவல் சோப்பு தனியாக வைத்துக்கொள்ள முடிவதில்லை ஓட்டல் முதலாளி மகனுக்குத் திருமணம். சீனியர் ஆட்களை எல்லாம் பஸ் பேசி மைசூருக்கு அழைத்துப் போனதால், எங்கள் எல்லாருக்கும் இரண்டு நாள் லீவு. மாமா வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லை. எனவே அருகிலிருந்த இஸ்திரி வண்டிக்காரரைக் கேட்டபோது "மாமி ஒரு காலைக் காட்சியைக்கூடத் தவறவிடுவதில்லை" என்று கூறி சிரித்தார். சில சமயம் வீட்டில் இருந்தபடியேகூட ஜன்னல் வழியே கையை வெளியே விட்டுப் பூட்டுவது உண்டாம். நான் போனபோது கூட பூட்டு தொங்கியது. எப்படித் தெரியும் நான் வருவது? இஸ்திரி வண்டிக்காரர் சிரித்தார். "இங்கேந்து பாத்தால் தெரு முனை வரைக்கி தெரியுதுல்ல, அப்புறம் என்ன?" வழியில் சாப்பிட நினைத்து மெஸ் உள்ளே நுழைந்தோம். டோக்கன் வாங்கிக் கொண்டு திரும்பினால், கிட்டு மாமா ... முதல் வரிசையில் உக்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "மாமா, என்ன இங்கே? வீட்ல சாப்பிட வேண்டியதுதானே?" என்ற என்னை அருகே அழைத்தார். "கொஞ்சம் பொறு. வெவரமாச் சொல்றேன்." அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டு கையை அலம்பிக் கொண்டு வேட்டி முனையைத் தூக்கி வாயையும் கையையும் துடைத்துக் கொண்டார். "வா, கொஞ்சம் வெளியே நின்னு பேசுவோம் ..." நண்பர்களை அனுப்பி விட்டு, அவருடன் நடந்தேன். வெளியில் வந்து பீடா ஒன்றை வாங்கி மென்று கொண்டே, "தம்பி, என்னைப் பத்தி நீ ஒன்றும் தப்பா நெனைக்க மாட்டியே ... ஒன்று சொல்லட்டுமா?" என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். "என்ன மாமா, நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். எனக்குப் போய் நீங்க ..."

"உனக்கு என்னடா வயசு?"

"இருவது முடிஞ்சு போச்சு மாமா..." "வயசு வந்த பையன். பெத்த பிள்ளையாட்டமா நெனச்சு சொல்றேன். எங்களுக்குக் கல்யாணம் ஆகி இருவது வருஷம் ஆவுது. முதல் அஞ்சு வருஷம் முடியறதுக்குள்ளே டெஸ்ட் எல்லாம் பண்ணிப் பாத்துட்டோம். எனக்குதான் பிரச்னை. என்ன செய்தாலும் இந்த ஜென்மத்துல புள்ள குட்டி கெடயாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். ..."

"இப்போ என்னென்னவோ செயற்கை முறை எல்லாம் இருக்குங்கிராங்களே மாமா?"

"இருக்கு ... எல்லாத்துக்குமே அடிப்படையா மனசுல ஈரம் இருக்கணும். பாறையில போய் பயிர் பண்ண முடியுமா? அவளுக்கு மனசுல கொஞ்சம் கூட இரக்கம் கெடயாது. யாருடைய கஷ்டமும் அவளைப் பாதிக்காது. தன் சுகம்தான் முக்கியம்." "சுவீகாரம் பண்ணி இருக்கலாமே

"அட, நீ ஒண்ணுப்பா ... இது தாய்மைங்கிற இரக்க குணமே இல்லாத ஜென்மம். ஒரு ராட்சசப் பிறவி. முதல் ரெண்டு வருசத்தில என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். திருந்தவே இல்ல. அதுக்கப்புறம் யோசிச்சேன். இதுகூட நாம்ப படற கஷ்டம் ... இத்தோட போகட்டும். ஒரு வாரிசு இவ மாதிரியே பிறந்தா ...? அதான் இது நம்ப தலை எழுத்துன்னு விட்டுட்டேன். மரியாதை இல்லாமப் பேசுவா ... எல்லாரையும் எடுத்தெறிஞ்சு துச்சமாப் பேசுவா ... நான் வாயையே தொரக்கிரதில்லே. ஏன் தெரியுமா? நான் பூர்வ ஜென்ம புண்ணியத்தை நம்பறேன். என்னுடைய பாவத்தை நானே தீர்த்துட்டுப் போய்டுறேன். உன்னை நான் கவனிக்கலைன்னு நினைக்கதேப்பா ..."

"சேச்சே ... எனக்குத் தான் இடம் பார்த்துக் குடுத்தீங்களே மாமா!" "என்னை மன்னிச்சுடுப்பா.

உங்க அம்மா ரொம்ப நல்லவ. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இந்தப் பேய் வந்துட்டுது ..."

"அட, வுடுங்க மாமா! எனக்கு உங்ககிட்ட வருத்தமே இல்ல."

"அம்மாகிட்ட சொல்லிடாதேப்பா! பாவம்."

"சத்தியமாச் சொல்ல மாட்டேன்..."

"என்னோட அட்ரஸ் கூட வச்சுக்காதே. உங்க யாருக்கும் எதுவும் பண்ணக்கூடாது. இல்லேன்னா செத்துப் போறேன்னாப்பா. சத்தியம் பண்ணச் சொன்னாள்."

"நான் அப்டியே செய்றேன் மாமா." என்று உறுதி அளித்துவிட்டு வரும்போது பஸ் ஸ்டாப்பிற்கு ஒரு மைல் நடக்க வேண்டி இருந்தது. வழியில் வந்த லாரியில் கை காட்டினேன். வெளியூர் லாரி. காபின் உள்ளே நிறைய இடம். முகத்தைப் பாதி மறைத்தபடி மூணு இளைஞர்கள். "ஏங்க, டீசல் பங்க் எதுன்னா இருக்கா?" என்று கேட்ட டிரைவரிடம் "வாங்க, காட்டுறேன்" எனக்கூறி ஏறிக் கொண்டேன். "நேரா போய் ஹைவேல திரும்புனா பங்க் இருக்குது .."
"அட, அது வேணாம். உள்ளுக்கா எங்கயாச்சும் இருக்கான்னு சொல்லு தம்பி." "வாங்க போவோம்"

************************

சந்து பொந்தாகத் திரிந்து, இறுதியில் ஒரு பங்க்கை அடைந்தார்கள். டிரைவர் இறங்கி "முப்பது லிட்டர் டீசல் போடுப்பா" என்றபோது, சர்ரென்று வந்த இரண்டு போலீஸ் ஜீப்கள் இருபுறமும் நிற்க, திபு திபுவென்று வெளியே இறங்கியவர்கள், லாரியில் இருந்த மூன்று இளைஞர்களையும் டிரைவரையும் சேர்த்து சிவாவையும் கைது செய்து வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.

***********************

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப் பட்ட அமீது, குலாம் அலி, ஆடலரசன் என்கிற நடராஜனோடு சிவாவும் சிறையில் இருக்கிறான். முதலில் ஐந்து ஆறு முறை அதிகாரிகளிடம் சென்று விளக்க முற்பட்டபோது, காது கொடுத்துக் கேட்ட ஒருவர் மட்டும்

"இப்போ சொல்லி என்ன செய்யுறது ? இவனுங்களோட சேர்றதுக்கு முன்ன யோசனை பண்ணியிருக்கணும். போ ..." என்றார்.

அதன் பிறகு முழங்கால் சில்லை உடைக்கின்ற வேகத்தில் விழுந்த அடி சிவாவைப் பேச விடாமல் தடுத்துவிட்டது.

******************

சிவாவிடமிருந்து ஐந்து ஆண்டுகளாகக் கடிதமே வரவில்லையே என அவன் தாய் காத்திருக்கிறாள்.

******************

"தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்குவோம் ... ஆனால் திருந்தி வாழ அவர்கள் விரும்பினால், அதற்கு நேசக் கரமும் நீட்டுவோம்" - சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் முழக்கம்

Comments

பத்மா said…
சர சர வென்று நகர்கிறது கதை .பின்புலம் இல்லாமலிருந்தால் இப்படி ஆகிவிடுகிறது.
மனதை உலுக்கும் கதை
Anonymous said…
அருமை
Chandran Rama said…
well written story....