Skip to main content

அம்மா மாதிரி (சிறுகதை)#

01வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்?

பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா?

அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அம்மாதான் எவ்வளவு அன்பாக இருந்தாள்? சாந்தமான அந்த முகம். எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் கனிவு.

"அம்மா தாயே" என்று யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் அவர்களுக்கு அரிசியோ, காசோ ஏதாவது கொடுத்தனுப்பும் அந்த பரிவு. அம்மா நிஜமாகவே ரொம்ப நல்லவள்.

அப்பா அப்போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தார். அம்மாவிடமும் எங்களிடமும் அன்பாக இருப்பார். அடிக்கடி எதையாவது சொல்லி சிரிப்பு வரவழைத்தபடி இருப்பார். எனக்கும் தம்பி தங்கச்சிக்கும் வெளியே எங்காவது போனால் கண்டிப்பாக ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். அம்மா அப்பாவோடு நான் தம்பி தங்கச்சி எல்லோரும் சினிமா போவோம்.

சாயங்காலம் ஆனால் அம்மா எல்லோரையும் உட்காரச் சொல்லி படிக்கச் சொல்லுவாள். தங்கச்சி பாப்பாவுக்கு ஏ பி சி டி சொல்லிக் கொடுக்கும்போது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

அம்மா எதையுமே சிரித்த முகத்தோடுதான் செய்வாள். அன்று வெள்ளிக்கிழமை. அப்பா வழக்கம் போல் கம்பெனி க்கு வேலைக்குப் போயிருந்தார். சயந்திரம் மூணு மணிக்குப் போனால் இரவு பனிரெண்டு மணிக்குத்தான் வருவார். நானும் தம்பி தங்கச்சியும் பள்ளிக்கூடம் விட்டு வந்தபின் விளையாடப் போய்விட்டோம். அப்போது கூட அம்மா நல்லாதான் இருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து, பக்கத்து வீட்டு ராஜூ ஓடி வந்து "உங்கம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கடா" என்றபோது அவசர அவசரமாய் வீட்டுக்கு ஓடிப் போனவன், அம்மாவைக் கட்டிலில் படுக்க வைத்து, அக்கம் பக்க ஆட்கள் எல்லாம் சுற்றி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அம்மாவின் கண்கள் மேல்நோக்கி பார்த்தவண்ணம் இருந்தன.

அப்பா வந்து சேர்ந்த சிறிது நேரம் கழித்து அம்மா செத்துப் போனாள். அப்பா வாய்விட்டு அழுதார். நான் தம்பி தங்கச்சி எல்லோரும் கேவிக் கேவி அழுதோம். அம்மா இனிமேல் வரமாட்டாள் என்று நினைத்த போது அழுகை இன்னும் அதிகமாய் வந்தது. 02அம்மா போய் ஒரு வாரமாகி விட்டது. அப்பா சவரம் செய்யாத முகத்துடன் சோகமாய் வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்.

பின் ஒருவாறு சமாதானமடைந்து வேலைக்குப் போக ஆரம்பித்தார். முன்பைவிட எங்களிடம் நிரம்ப அன்பாக இருந்தார். ஒருநாள் அப்பா படித்துக் கொண்டிருந்த எங்களிடம் வந்து அமர்ந்து,

பாசத்தோடு என் தலையைக் கோதியபடி, "கண்ணா… அம்மா இல்லாம ஏதோ போல இருக்கு இல்ல" என்றார். “ஆமாம்பா” என்றபடி அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். “கவலைப்படாதே, இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு புது அம்மா வரப் போறாங்க” என்றார். அப்பா சொல்வது என்னவோ புரிவது போல் இருந்தது. அதற்கு சரியான அர்த்தம் புரிவதற்குள், வீடு கோலாகலப்பட்டு அப்பா புதிதாய் ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். “இன்னிலிருந்து இவங்க உங்க அம்மா மாதிரி” என்றார்.

அதற்கப்புறம் அப்பாவிடம் பழைய கலகலப்பு தோன்றியது. தம்பியும் தங்கச்சியும் ஒருமாதிரி, புதிதாய் வந்த அம்மாவிடம் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தனர். எனக்கு மட்டும் என்னவோ அம்மா இருந்த இடத்தில் இந்த “அம்மா மாதிரியை” வைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை. இத்தனைக்கும் “அம்மா மாதிரி” என்னிடமும் அன்பாகத் தான் இருந்தார். அம்மா மாதிரியை “சித்தி” என்று அழைக்கத் தொடங்கியிருந்தோம்.

அப்பாவும் சித்தியும் அடிக்கடி வெளியே கிளம்பிப் போனார்கள். “கூட வர்றேன்” என்று அடம் பிடித்த தம்பியும் தங்கச்சியும் நீண்ட நாளைக்குப் பின் அப்பாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினார். அவரும் சித்தியும் தனி அறையில் தான் படுத்தார்கள்.

“நாங்களும் கூடத்தான் படுத்துக்குவோம்” என்று சொல்ல எண்ணிய தம்பியும் தங்கச்சியும் அப்பாவிடம் "வாங்கிக்" கட்டிக்கொள்ள பயந்து சும்மா இருந்தனர். அம்மா இருந்த இடத்தில் இன்னொருவரைக் கொண்டு நிறுத்தியதோடல்லாமல், இந்த அப்பாவால் எப்படி இவ்வளவு கலகலப்பாய், எதுவுமே தன்னை வருத்தாதது போல் இருக்க முடிகிறது என்று பலமுறை நான் எண்ணி வியந்ததுண்டு.

அம்மா போனபோது ஒருவாரம் தாடியும் சோகமுமாய் திரிந்த அப்பாவா, இப்படியெல்லாம் மாறிவிட்டார் என்று நினைத்தபோது மனசின் விம்மல் இன்னும் அதிகமானது. அதெல்லாம் வெறும் வெளி வேஷமோ என்றும் ஒரு யோசிப்பு உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அம்மா இருந்தபோது இருந்த முகம் சுளிக்காத அப்பா, கலகலப்பான அப்பா, பாசமான அப்பா கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தார். நானோ, தம்பி தங்கச்சியோ எதைக் கேட்டாலும் சுள்ளென்று எரிந்து விழ ஆரம்பித்தார். அடிக்கவும் செய்தார். வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. எங்களோடு மட்டுமென்றில்லை. சித்தியிடமும் அதே மாதிரி ஆரம்பித்ததுதான் எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமான ஒன்று.

03அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அப்பா வெளியே போனவர் இன்னும் திரும்பவில்லை. அன்று வேலைக்கு லீவு போட்டிருந்தார். நாங்கள் உள் அறையில் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். சித்தி வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அப்பாவிற்காக வாசலைப் பார்த்தபடியே எங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணி பதினொன்றானது. தம்பியும் தங்கச்சியும் நன்றாகத் தூங்கி விட்டனர். நானும் படுத்திருந்தாலும் தூங்காமல் விழித்திருந்தேன். பன்னிரண்டு மணிபோல் அப்பா வந்தார். சித்தியின் தோளில் கை போட்டபடி நடந்தாலும், நிறைய தள்ளாடினார். நான் படுத்திருந்த இடத்தைத் தாண்டும்போது புதுவிதமான வாசனையொன்று மூக்கைத் துளைத்தது.

அப்பா குடிக்க ஆரம்பித்திருக்கிறாரா? பக்கத்து அறையிலிருந்து பேச்சு லேசாகக் கேட்டாலும் சற்று தெளிவாகவே கேட்டது. "ஏங்க.. இப்படிக் குடிச்சுட்டு வந்திருக்கீங்களே...உங்களுக்கே இது சரியாப் படுதா?" ஏய்..நான் அப்படிதாண்டி.. சும்மா வந்து படுறீ.. என்று ஆரம்பித்து அப்பாவின் வித்யாசமான பேச்சுக்களைஅன்றுதான் கேட்டேன்.

தொடர்ந்து சித்தி ஏதோ பேசவும், அப்பா சித்தியை அடிக்கும் சத்தமும் தெளிவாக கேட்டது. 04அப்பா அன்று சீனு மாமாவைப் பார்க்க போயிருந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் அங்கு போவதும் வருவதுமாக இருந்தார். சில நேரங்களில் இரவில் நேரங்கழித்து வருவார். அப்படி ஒன்றும் சீனு மாமா வீடு கிட்டத்தில் இல்லை. பஸ் பிடித்துப் போக வேண்டும். என்றாலும், அப்பா அடிக்கடி, சில நாட்களில் வேலைக்கு லீவு போட்டுவிட்டு, போய்வந்தபடி இருந்தார். தாமதமாக வரும் நாட்களில், சித்தி ஏதாவது கேட்டால் தயங்காமல் அடிப்பார்.

அவர் அடிப்பதும், அது அவருக்குள் போயுள்ள சரக்கு பண்ணும் வேலை என்று சித்தி சமாதானப்பட்டுக்கொள்வதும் வரவர வாடிக்கையாய்ப் போய்விட்டது.இப்போதெல்லாம் அப்பா குடிக்காத நாட்கள் குறைந்து கொண்டு வந்தன. ஆனால், அந்த மாமாவைப் பார்க்க போய்விட்டு வரும் நாட்களில் மட்டும் நிரம்ப சந்தோசமாய் இருப்பார்.

சித்தியை நிரம்ப கொஞ்சுவார். தனி அறையில் தான். எங்கள் மேல் பாசம் பொங்கும். அதற்காகவே, அவர் அடிக்கடி அந்த மாமா வீட்டுக்குப் போகக்கூடாதாவென்று இருந்தது எங்களுக்கு. அன்றும் மாமா வீடு போயிருந்த அப்பாவின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். இம்முறை போகும்போது சித்தியையும் கூட்டிக் கொண்டு போயிருந்தார்.

கேட்ட தம்பியிடம் "சித்திக்கு அவங்க அப்பா அம்மாவைப் பாக்கணுமாம்" என்று சொல்லிச் சென்றார். வீடு அன்று வெறிச்சென்று இருந்தது. தம்பியும் தங்கச்சியும் வெகு நேரம் விழித்திருந்து விட்டுப் பின் தூங்கி விட்டனர். நான் மட்டும் விழித்துக் கொண்டிருந்தேன். ரொம்பத் தாமதமாக அப்பா வந்தார். அப்பா அன்று தன்னுடன் யாரோ ஒரு புதுப் பெண்ணை அழைத்து வந்தார். பயந்த சுபாவத்துடன் அப்பாவை உரசியபடி நடந்து வந்தது.

நான் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். அந்தப் பெண் அப்பாவிடம் "இதுதான் பெரிய பையனா" என்றது. "ஆமாம்" என்றவர் என்னருகில் வந்து லேசாக என் தலையை வருடினார். "இது யாருப்பா?" என்றேன். நம்ம சீனு மாமாவோடு பொண்ணு, இனி இவளும் உங்க அம்மா மாதிரிதான்" என்றார்.

Comments