கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணதைப்பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர்ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக்கொண்டிருந்தான்.தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை.
கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் 'பைத்தியம்'.
கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும் எங்கேயாவது நடந்து கொண்டே இருப்பாள். அவள் எங்கிருந்து வருகிறாளென்று எவருக்கும் தெரியாது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளென்றும், வரதட்சணைக் கொடுமையால் நடக்க இருந்த திருமணம் நின்று போனதால் இப்படி ஆனதாகவும், திருமணமானவளென்றும், யாரோ வைத்த சூனியத்தால் இப்படி ஆனதென்றும் பலவாறு கதைகள் உண்டு கியானைப் பற்றி. இவற்றில் எது உண்மையென்று யாருக்கும் தெரியாது. கியான் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியாது.
ஆனால், கியான் என்று அழைக்கையில் அவள் திரும்பிப் பார்ப்பாள்.கியான் எங்களூரில் பிரபலமானதே ஒரு சுவாரசியமான கதை. அது ஒரு நல்ல மழைக்காலம். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய் பெரிதாய்ப் பெய்த மழை, அன்று மெலிதாய் தூறிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் மழைத்தண்ணீரில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். கியான் வழக்கமான பேருந்து நிறுத்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். பஸ் நிறுத்தத்திற்கு எதிரே டீக்கடை ஒன்று உண்டு. டீக்கடை நாயரின் இரண்டு வயதுக் குழந்தையும் தெருவோரம் மழையில் விளையாடிக் கொண்டிருந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த லாரியொன்று அந்த இடத்தை நெருங்குகையில், சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, சாலையின் குறுக்காக ஓடி வர ஆரம்பித்தது. எந்தவித விபரீதமும் நிகழாமல், கியான் வேகமாய் ஓடிப் போய் குழந்தையை அணைத்தபடி காப்பாற்றி, மறுபுறம் கொண்டு வந்த அந்த தினத்திலிருந்துதான் கியான் எங்களூரில் நல்ல பிரபலம்.…
எடுப்பாய் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முன் பற்கள் இரண்டும் அந்த முகத்திற்கு சற்று விகாரமான தோற்றத்தைத் தந்தாலும் இதுவரை எந்த குழந்தையும் அவளைப் பார்த்து பயந்ததாய் எந்த கதையும் இல்லை. ஆனால், கியானின் அட்டகாசமென்று சொல்லவேண்டுமென்றால், அதை பேருந்துகள் வந்து நிற்கும் நேரத்தில் காணலாம். அதுவரை அமைதியாய் தன் (!) இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள், ஏதாவது பேருந்து வரும் சமயம், வேகமாய் ஓடி வந்து பேருந்தின் பக்கவாட்டில் தடதடவென்று தட்டுவாள். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து, அது பெண்களாய் இருந்தாலும், "மாமா மாமா" என்று சத்தமிடுவாள். ஆனால் இதுவரை அவள் பேருந்துக்குள் ஏறவோ, கல்லால் அடிப்பது போன்ற செயல்களிலோ ஈடுபட்டதில்லை. ஒரு சில வேளைகளில், யாரையாவது சுட்டிக் காட்டி, "இந்த மாமாவைக் கட்டிக்கிறியா" என்றால், அதற்கு "இக்கும் போ மாமா" என்றே பதில் சொல்வாள். அப்படி சொல்கையில் அவள் லேசாக வெட்கப்படுவதைப் போல் கூடத் தோன்றும்.
கியானுக்கு கோபம் வரவழைக்கும் விஷயம் ஒன்று உண்டு. "டமுக்கு டப்பான்" என்ற வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறதோ தெரியாது. சிறுவர்கள் யாராவது விளையாட்டுக்காக அந்த வார்த்தையை சொன்னாலும், கண்களில் அக்னி ஜ்வாலை தெறிக்க, தெருவில் கிடைக்கும் கற்களை எடுத்து வீசத் தொடங்கி விடுவாள். கூடவே "அய்ய.. இக்கும்.. போ" என்று கத்திக் கொண்டே சிறுவர்களை துரத்திக்கொண்டு ஓடுவாள். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம், பழைய கியானாய், பேருந்து நிறுத்த பெஞ்சில் அவளைக் காணலாம். வந்து அமர்ந்த சிறிது நேரம் வரை, அவள் முகத்தில் சிறிய கோபம் ஒன்று இருக்கும். அது போன்ற நேரங்களில், வழக்கமான "மாமா மாமா" போன்ற கூச்சலோ, பேருந்துகளைத் தட்டுவது போன்ற செயல்களிலோ அவள் ஈடுபடுவதில்லை. ஆனால் எல்லாம் சிறிது நேரம்தான். பிறகு தன் வழக்கமான வேளைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள்.
அந்தக் கியான் செத்துப் போனாளாம்.
அது அங்கு யாரையும் பாதித்ததாய் தெரியவில்லை. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாவரும் தன் வேலையைப் பார்த்தபடிப் போய்க்கொண்டிருந்தன(ர்). இரண்டு நாட்கள் போனது. பேருந்து நிறுத்தமே தன களையை இழந்தது போல் இருந்தது எங்களுக்கு. திடீரென்று “இக்கும்.. போ” என்ற குரல் கேட்க ஆரம்பித்தது. தலையில் ஒரு கட்டுடன் தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள் கியான். தலை காயம் பற்றி கேட்டவருக்கெல்லாம் “இக்கும்.. போ” என்றே பதில் சொன்னாள்.
ஒருவேளை அவள் யாராவது குழந்தையை காப்பாற்றப் போய் அடி பட்டிருக்கும் என்று யாவரும் நினைத்துக்கொண்டோம். அந்த “இக்கும் போ” என்ற சத்தமும், “மாமா மாமா” என்ற அழைப்பும் மறுபடி ஒலிக்க ஆரம்பித்ததில், இழந்த தன் களையை மறுபடி பெற்றிருந்தது எங்களூர் பேருந்து நிலையம். o
Comments