அன்புள்ள அம்மா, ஊரிலிருந்து வந்தவுடன் எழுதுவதாகக் கூறிவிட்டு மூன்று நாட்கள் கழித்துதான் எழுத முடிந்தது. கோபிக்காதே. டெலிபோனில் கூப்பிட்டால் அவசரமாகப் பேச வேண்டும். எவ்வளவோ சொல்ல வேண்டியுள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன். அப்பா இறந்தவுடன் கிட்டு மாமா வந்து போனதாக நீ சொன்னபோது, அவர் முகம் நினைவுக்கு வரவில்லை. நேரில் பார்த்ததும், நினைவு வந்தது. அவர் உன் மீது உயிரையே வைத்திருக்கிறார். "இனிமே இது உன்னோட வீடு ... தெரிஞ்சுதா? நான் வேலை வங்கித் தர்றேன்." என சந்தோஷப் பட்டார். சீக்கிரமே வேலை கிடைத்து அப்பாவுடைய கடனை எல்லாம் தீர்க்கத்தான் போகிறேன். உடம்பை கவனித்துக்கொள். கவலைப்படாதே. அன்புடன், சிவா. *************************** சிவாவின் டயரியில்: அம்மா, உன்னிடம் பொய் சொல்ல மனம் வராததால் இதை டயரியில் எழுதுகிறேன். என்னை மன்னித்து விடு அம்மா. இதுதான் உண்மை. மாமா வீட்டில் நுழைந்த மறுகணமே, மாமி "என்னப்பா திடீர்னு?" என்றாள். மாமாவிடம் போனில் பேசிய விஷயம் ஆபீசோடு நின்று விட்டது. கண் ஜாடை காட்டிய மாமாவைப் பார்த்தபடி, "சும்மாதான் வந்திருக்கேன்" என சமாளித்தேன். ...