வணக்கம்.
நவீன விருட்சம் blog ஆரம்பித்து ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று தற்செயலாகத்தான் இதை அறிந்தேன். இத்தனை பேர்கள் நவீன விருட்சத்திற்காக படைப்புகள் அனுப்புவார்கள் என்பதையும் எதிர் பார்க்கவில்லை. 160 பக்கங்கள் கொண்ட நவீன விருட்சம் 84வது இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான படைப்புகள் இந்த blog மூலம் எனக்குக் கிடைத்த படைப்புகள்தான். எனக்கே ஆச்சரியம்..இத்தனை பேர்கள் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்களா என்பது. எனக்கு தினமும் கவிதைகள் blogல் பிரசுரம் செய்ய அதிகம் பேர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கவிதைகள் பிரசுரம் ஆக ஆக கவிதைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவர்கள் பெரும்பாலும் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற எளிமையான வழி மட்டும் எனக்குத் தெரியும். அந்த எளிமையான வழியை எழுதுபவர்கள் எல்லோரும் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விருட்சம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன். நான் எழுதுவதுதான் சரி என்பதெல்லாம் இல்லை. மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்களும் இருக்கலாம்.
1) கவிதை எளிமையாக இருக்க வேண்டும்
2) எடுத்த உடன் வாசிக்க வைக்கும்படி இருக்க வேண்டும்
3) கருத்துகளில் குழப்பம் எதுவும் இருக்கக் கூடாது
4) கருத்து என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்கலாம்.
5) தோன்றுவதையெல்லாம் கவிதையாக எழுதலாம்.
6) மிகைப்படுத்தப்பட்ட உணர்வைத் தவிர்க்க வேண்டும்
7) கவிதை மூலம் யாரும் அழக் கூடாது
8) Self pity இருக்கவே கூடாது
9) கவிதை வாசிப்பவர்களையும் வசீகரித்து சிரிக்க வைக்க வேண்டும்.
10) ஜாலியான மன நிலையை கவிதை உருவாக்க வேண்டும். வாசிப்பவர்களும் அப்படியே வாசிக்க வேண்டும்
மேற் குறிப்பிட்டபடி எனக்குத் தோன்றுவதை எழுதியிருக்கிறேன். நீங்களும் நிறையா கருத்துக்களை அளிக்கலாம்.
அன்புடன்
அழகியசிங்கர்
Comments
Why Sir?
எனக்கு சில மாறுபட்ட கருத்துகள் இருக்கிறது.
3) கருத்துகளில் குழப்பம் எதுவும் இருக்கக் கூடாது
கவிதை தனிமனித புரிதல்களில் பல நேரங்களில் குழப்பம் தருகிறது. எனக்கு நகுலனின் கவிதையொன்று வாசிக்க எளிமையாக இருந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு அர்த்தம் தருகிறது.
உதாரணம்
எனக்கு யாருமில்லை
நான் கூட
4) கருத்து என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்கலாம்.
உண்மை
8) Self pity இருக்கவே கூடாது
நல்லதோர் வீணைசெய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி, சிவசக்தி; -எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
எனக்கு யாருமில்லை
நான் கூட
இவை போன்ற ஆகச்சிறந்த கழிவிரக்க கவிதைகள் உள்ளன
தாங்கள் குறிப்பிட்ட பத்தோடு ஒன்றாக இதையும் சேர்த்துக் கொள்ளலாமே
11) மேலே சொன்ன பத்தும் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இவை எதுவும் இல்லாமல் கூட நல்ல கவிதைகள் பிறக்ககூடும்.
காற்றுக்கெதற்கு வேலி?
//Self pity இருக்கவே கூடாது//
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெறும் சோகத்தை வடிக்கவே பயன்படுத்தி கவிதையென்ற பரிமாணத்திற்கு உட்படுத்தாமல் எழுதினால் அது தவறு. ஆனால் அந்த ஆழ்ந்த சோகத்தையும்; வாசிக்கும் பல பேரின் நாடி உணர்ந்திருக்கும் வலியாக மாற்றிச் சொல்லும்போது அது கவிதையாக வெற்றி பெறுகிறது.
"உனக்கு தெரிவதிவதில்லை
என் இரவில் நீ
சூரியனாய் சுடுவதும்
அதில் என்
இமைகள் கருகுவதும்..."
இதுவும் ஒரு சுயவலியின் பிரதிபலிப்பே. இருப்பினும், இந்த வரிகள் பலரால் பாராட்டப்பட்டது. சுஜாதா அவர்கள் சொன்னது போல சுய வாழ்க்கையிலிருந்து 30% கற்பனை 70% கலந்தால் அருமையான படைப்பு தயார்!
கருத்தில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.
ஒரு கவிஞரின் மூலம் குறைவாக தெரிந்துகொண்டேன்.
//
மேலே கூறிய குறைவாக என்பது, உங்களை மேலாக அல்லாமல் கீழாக தெரிந்துகொண்டேன் என்ற பொருளில்லை. அதிகமாக அல்லாமல் ஏதோ அவருக்குத் தெரிந்த குறைந்த அளவிலான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார் என்ற கூற விழைந்தது.