Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......4



விசிறி சாமியாரை அந்த முறைதான் அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. பிறகு பார்ப்பதே அரிதாகி விட்டது. பாலகுமாரன் மூலம் என்று நினைக்கிறேன். அவர் மிக முக்கியமான சாமியாராகி விட்டார். அவரைச் சுற்றிலும் எப்போதும் கூட்டம். அவர் பெயரில் தனியாக ஆசிரமம் கட்டி விட்டார்கள். அவர் ஆசிரமத்திற்கு ஒருமுறை போனபோது தனியாக அவருடைய சிலையை வைத்திருந்தார்கள். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம். நான் பார்த்தபோது எளிதில் பழகக்கூடியவராகவும், சற்று வித்தியாசமானவராக இருந்த விசிறி சாமியார் நெருங்க முடியாதவராக மாறிவிட்டார்.



நான் இங்கு சொல்வது என் நினைவில் தோன்றுவதைத்தான் சொல்கிறேன். சிலசமயம் அது கோர்வையாக இல்லாமல்கூட போய்விடும். அல்லது எதாவது சொல்வது விடுப்பட்டுப் போய்விடும். விசிறி சாமியாரைப் பார்ப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரமிளுக்கு என் நன்றி எப்போதும் உண்டு.



சாமியார்கள் சாதாரண மனிதர்கள்போல் தோற்றத்தில் இருந்தாலும், அவர்கள் மகான்கள். யோகி ராம்சுரத் குமார் ஒரு மகான். அதனால்தான் பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் அவருக்கு அளவு கடந்த மரியாதையும், பக்தியும் வைத்திருக்கிறார்கள். விசிறி சாமியார் ஒரு சாதாரண அழுக்கு வேஷ்டியை அணிந்துகொண்டு இருந்தாலும் அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ் எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது. கொட்டங்குச்சி வைத்திருந்தார். கையில் ஜபமாலையை வைத்துக்கொண்டு உருட்டுவதுபோல் வெறும் விரல்களில் ஜபம் செய்துகொண்டிருந்தார். எங்களுடன் பேசிக்கொண்டும் இருந்தார். அவர் அடிக்கடி Passingshow சிகரெட்டைப் பிடித்துக்கொண்டிருந்தார். அந்த சிகரெட் இப்போது வருவதில்லை என்று நினைக்கிறேன். சாமியார் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறாரே என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். பிரமிள் இலங்கையில் அவர் பார்த்த சில சாமியார்கள் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று குறிப்பிட்டார்.



பிரமிளுக்கு எண் கணிதம் மீது அபார நம்பிக்கை. ஒருவர் பெயரைக் கேட்டால்போதும் உடனே பெயரை எழுதி கூட்டி. கூட்டல் எண்ணை வைத்து பலன் சொல்ல ஆரம்பித்துவிடுவார். பெயரை வேறு எண் வரும்படி மாற்றிவிடுவார். அழகியசிங்கர் என்ற என் பெயரை அழகு சிங்கன் என்று வைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார். என் இயற்பெயர் மெளலியில் ஓ வருவதால் எல்லோரும் என்னைக் கிண்டல் செய்வார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். விசிறி சாமியாரிடம் எண் கணிதம் பற்றி பிரமிள் பேச ஆரம்பித்தார். அது ஒரு விஞ்ஞானம் என்றும், பெயர் மாற்றுவதால் எண்கள் மாறுவதால் அதனால் ஏற்படும் பலாபலன்களைப் பற்றி சாமியாரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவர் பெயரை மாற்றி பரிசோதனை செய்திருப்பதாகவும் அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.



விசிறி சாமியார் ஒவ்வொரு முறை பேசும்போதும் தன்னை ஒரு begger என்று குறிப்பிட்டுத்தான் பேசுவார். எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும். ''இந்த beggerஐத் தேடி ஒரு பெண்மணி வந்தாள். அவளுக்கும், அவள் கணவருக்கும் ஏதோ பிரச்சினை. அழுதபடி பிரச்சினையைச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டாள்...நான் பெயரை மாற்றி அவளை அனுப்பினேன்... இறுதியில் ஒரு வருடம் கழித்து அவள் திரும்பவும் வந்தாள்...அவளுக்கும் அவள் கணவருக்கும் இப்போது சுமுகமான உறவு இருப்பதாக கூறினாள்..'' என்று சாமியார் பிரமிளிடம் குறிப்பிட்டார். (இன்னும் வரும்)

Comments

ஒரு நல்ல தொடர் பதிவின் எதிர்பார்புகளைத் தாங்கி வரும் இந்த அனுபவப் பகிர்வு எனக்கு மிகப் பிடித்திருக்கிறது ... படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது ... தொடர்ந்து வாசிக்கிறேன் ... தொடருங்கள் ...