வேண்டாம்../அழகியசிங்கர்
"இவள்தான் உன் அம்மா" என்று புகைப்படத்தைக் காட்டி பையனிடம் அறிமுகப் படுத்தினான் பத்மநாபன்.
பையன் மகேஷ் "அம்மாவா!" என்று ஆச்சரியப்பட்டான்.
அவன் அப்பாவின் நிழலிலேயே இதுவரை வாழ்ந்து வருகிறான்.
அவனுக்கு அப்பாவைத் தவிர பாட்டியைத் தெரியும். ஒருமுறைகூட பாட்டி அம்மாவைப் பற்றி பேசியதில்லை.
"அம்மா இப்ப எங்கேப்பா?" என்று மகேஷ் கேட்டான்.
"அவள் நம்மை விட்டுப் போயிட்டாள்" என்றான் பத்மநாபன்.
மகேஷிற்கு ஒன்றும் புரியவில்லை.
"செத்துப் போயிட்டாளா.."
"இல்லை. என்னைப் பிடிக்கலைன்னு போயிட்டா"
இதையெல்லாம் இதுவரை பையனிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தான்.
என்னமோ இன்று மனைவியின் புகைப் படத்தைப் பார்த்தவுடன் சொல்ல தோன்றிவிட்டது.
"அம்மா இப்ப எங்கே?"
"இதே சென்னையிலே இன்னொரு மூலையிலே இருக்கா.."
"அப்பா உன்னைப் பிடிக்கலைன்னு அம்மா போயிட்டாளா?"
"ஆமாம்" என்றான் பத்மநாபன் சோகமாக.
அதைக் கேட்க மகேஷிற்கு வருத்தமாக இருந்தது.
"நீ இவ்வளவு நல்ல அப்பாவாக இருக்கும்போது அம்மா உன்னை ஏன் விட்டுட்டுப் போயிட்டா.."
இதற்குப் பதில் சொல்ல தெரியவில்லை பத்மநாபனால்.
"நான் உன்னுடன் இருக்கிறேன். அம்மாவுடன் இல்லாமல்."
"அமாம். அப்பா வேண்டாங்கற மாதிரி
உன்னையும் வேண்டாம்னு சொல்லிட்டா."
"இப்ப அம்மா யாரோட இருக்கா.."
"இன்னொரு மாமாவோட இருக்கா.."
"நான் ஒருமுறை அம்மாவைப் பார்க்கணும்.."
"நான் ஏற்பாடு பண்ணுகிறேன்.."
அடுத்தநாள் பத்மநாபன் அவளுடன் பேசினார்.
"உன் பையன் உன்னைப் பார்க்க விரும்பறான். அனுப்பட்டுமா?"
கொஞ்ச நேரம் சும்மா இருந்தாள்.
பின் வேண்டாம் என்றாள்.
Comments