Skip to main content

வல்லிக்கண்ணன் திரும்பவும் வந்து விட்டார்.

 20.06.2023 (செவ்வாய்)

அழகியசிங்கர்




1.12.1992 அன்று என் பிறந்தநாள்.  முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்தித்ததைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.

1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன்.  சந்தித்த நோக்கம்.  அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான்  . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன்.

கூட்டம் நடத்தும் செலவு எப்போதும் ரூ.100 தான்.   அதுமாதிரியான கூட்டத்தை இப்போது நினைத்தால் என்னால் நடத்த முடியாது.

எப்படி ரூ.100 செலவு என்று சொல்கிறேன்.  கூட்டம் நடத்தும் இடத்திற்கு வாடகை ரூ.50.  எல்லோருக்கும் கூட்டம் பற்றித் தெரிவிக்க நான்  தபால் கார்டுகள் வாங்குவேன்.  100 கார்டுகள் விலை ரூ.25. கூட்டத்திற்கு வருகை புரிபவருக்குக் காப்பி அல்லது டீ செலவு ரூ.25.

பேச வருபவருக்கு நான் எதுவும் கொடுப்பதில்லை.  என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்.




பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பேசி இருக்கிறார்கள்.  வல்லிக்கண்ணனை அவர் படித்த தமிழ் நாவல்களைப் பற்றிப் பேச அழைத்தேன்.

அவரைச் சந்தித்த அன்று என் பிறந்தநாள்.  அவரிடம் தெரிவித்தேன்.  

சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புத்தகத்தை அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.  என்னால் மறக்க முடியாத நாள் அன்று.

நாவல்கள் பற்றிப் பேச விருட்சம் இலக்கியக் கூட்டத்திற்கு வந்திருந்த  வல்லிக்கண்ணன், மூச்சு விடாமல் அவர் படித்த நாவல்கள் ஒவ்வொன்றையும் கூறிக்கொண்டே போனார். அவர் ஏதோ அவசரமாகப் பேச வேண்டும்போல் பேசினார். எனக்கு ஆச்சரியம் எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் அவர் பேசியது.  ஞாபகத்திலிருந்து அத்தனை நாவல்களையும் பேசினார்.அன்று அவர் பேசியது சிறந்த பேச்சு. 

நான் ஞாபகமறதிக்குப் பெயர் போனவன்.   ஒரு நாவலைப் படித்தேன் என்றால் குறிப்புகள்  எழுதி கட்டுரையாக உடனே எழுத வேண்டும். இப்படி நான் படித்த புத்தகங்களைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதிப் பல புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளேன்.




பல நாவல்களை நான் படித்தவுடன் குறிப்புகள் எழுதி கட்டுரைகளாக மாற்றாமல் விட்டேனென்றால், என் ஞாபகத்திலிருந்து அந்த நாவல்கள் போய் விடுகின்றன.  நான் படித்தேன் என்று என்னால் சொல்ல முடிகிறது.  அந்த நாவல் என்ன என்று சொல்ல முடியவில்லை.  இது மாதிரி அசோகமித்திரனின் 'மானசரோவர்' என்ற நாவலை மூன்று முறை வெவ்வேறு காலங்களில் படித்து மூன்றாவது முறை படிக்கும்போதுதான் கட்டுரையாகத் தயாரித்து எழுதினேன்.

திரும்பவும் நாவல்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் நான் எழுதிய கட்டுரைகளை வைத்துக் கூறி விடுவேன். 

ஆனால் குறிப்புகள் எதுவும் கையில் வைத்துக்கொள்ளாமல் துல்லியமாக நாவல்களின் சுருக்கங்களைக் கூறிய  எங்கேயோக்கண்ணனை இன்றும் என்னால் மறக்க முடியாது.

அப்போது வல்லிக்கண்ணன் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த புத்தகத்தை நான் கொஞ்சம் படித்துவிட்டு எங்கயோ வைத்து விட்டேன். 

யாராவது அந்தப் புத்தகம் பற்றி எதாவது கேட்டால் எனக்குச் சொல்ல வராது.  புத்தகம் படித்திருக்கிறேன் என்பதற்கு எப்போதும் அடையாளமாய் பேனாவால் கோடுகள் இடுவேன். ஆனால் இந்தப் புத்தகத்தில் எந்தக் கோடும் போடவில்லை.  என் கூட நடைப்பயிற்சிக்கு வரும் நண்பர், நான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்.  நண்பர் கேள்வி கேட்கும் பழக்கம் உள்ளவர். அவர் கேட்டபோது புத்தகத்தின் சாரம்சத்தைச் சொல்ல முடியவில்லை. அவர் ஒரு பதிப்பக நண்பர்.

பாதுகாத்து வைத்திருந்த  வல்லிக்கண்ணன் புத்தகத்தைத் திரும்பவும் அச்சிட அவருக்குக் கொடுத்து உதவினேன்.

என்னால் மறக்க முடியாத பழைய  வல்லிக்கண்ணன் புத்தகத்தைக் கொடுத்ததோடு அல்லாமல் புதிதாக அச்சிட்ட புத்தகத்தையும் எனக்கு வழங்கினார்.  அவருக்கு என் நன்றி. புத்தகத்தின் பின் அட்டையில்  வல்லிக்கண்ணன் பற்றி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது அச்சிட்டுள்ளார். 

 வல்லிக்கண்ணனைப் பற்றி ஜெயகாந்தன் கூறும்போது 'அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத்தக்கதும் வழிபடத் தகுந்ததுமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.




'தோற்றம்' என்ற தலைப்பில்  வல்லிக்கண்ணன் எழுதியிருப்பதைப் பாருங்கள்.

'புதுக்கவிதை என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை.  இந்தப் பெயரைக் கண்டு பலர் மிரளுகிறார்கள்.  கேலி  செய்ய வேண்டுமென்ற தூண்டுதலை  இது சிலருக்கு ஏற்படுத்துகிறது.  இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம் அடைகிறவர்கள் பலர்..இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது  வல்லிக்கண்ணன் எழுத்து.

சந்தியா பதிப்பகம் கொண்டு வந்துள்ள இந்தப் புத்தகத்தைத் திரும்பவும் பார்க்கும்போது  வல்லிக்கண்ணன் புதுப்பொலிவுடன் என்னிடம் வந்து விட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது.

346 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.350. ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது. 



Comments