Skip to main content

இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்

 

அழகியசிங்கர்




1980 ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக ஞானக்கூத்தனை அறிவேன். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை என் நண்பர் எஸ். வைத்தியநாதன் ஏற்படுத்திக் கொடுத்தார்.
வைத்தியநாதனை முதன் முதலாக ஒரு இலக்கியச் சிந்தனையின் ஆண்டு விழா அன்று சந்தித்தேன். அப்போதுதான் எனக்குப் பல நண்பர்களை வைத்தியநாதன் அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய நண்பர்களில் ஒருவர்தான் ஞானக்கூத்தன்.
அவரைச் சந்திக்கும்போது நானும் கவிதை எழுதுபவனாகத்தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதில் எனக்குச் சற்று கூச்சமாக இருந்தது.
ஞானக்கூத்தன் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் அவரைச் சந்திப்பது வழக்கம். நான் திருவல்லிக்கேணி போவதற்கு முன் மயிலாப்பூரில் உள்ள வைத்தியநாதனையும் அழைத்துக் கொண்டு போவேன். அப்போது நான் லாம்பி என்ற ஸ்கூட்டர் வைத்திருந்தேன்.
கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் எங்கள் சந்திப்பு நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அங்குப் பல நண்பர்களுடன் சந்திப்பது வழக்கம். கவிதையை மட்டுமன்றி உலகத்தில் நடக்கிற விஷயங்கள் குறித்தும் விவாதம் நடக்கும். பல ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை அங்குப் போய் சந்திப்பதில் ஆர்வமுள்ளவனாக இருப்பேன்.
நான் அவரைப் பார்த்த சமயத்தில் ஆத்மாநாமை அந்தக் கூட்டத்தில் சந்திக்கவில்லை. ஆனால் ஆத்மாநாமுடன் நெருங்கிப் பழகிய நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன். எல்லோரும் கவிதைகள் எழுதுபவர்கள். ஞானக்கூத்தன் கவிதைகள் குறித்து ரசனை உள்ளவர்கள். உண்மையில் ஞானக்கூத்தன் குரு ஸ்தானத்தில் இருப்பவர். உண்மை அப்படி இருந்தாலும், ஆனால் அத்தனைப் பேர்களும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
உண்மையில் ஒருவர் அந்தக் கூட்டங்களில் நடந்ததைப் பதிவு செய்திருந்தால் நினைத்துப் பார்க்க முடியாத பொக்கிஷமாக இருந்திருக்கும்.
ஒருவர் 24 மணிநேரமும் கவிதைகள் குறித்து யோசிப்பவர் என்றால் அது ஞானக்கூத்தனாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து கவிதைக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து விட்டார்.
அவர் இழப்பு தமிழ்க் கவிதை உலகத்திற்குப் பெரிய இழப்பாக நான் கருதுகிறேன்.
நான் ஞானக்கூத்தனைச் சந்திப்பதற்கு முன்னால் அவருடைய கூட்டத்தில் முக்கியமான நபராக இருந்தவர் ஆத்மாநாம். அவரைப் பற்றி ழ இலக்கியச் சிற்றேடு என்ற தலைப்பில் பின்னால் எழுதியிருக்கிறேன்.
உண்மையில் திருவள்ளுவர் சிலை அருகில் ஞானக்கூத்தனின் அவர் நண்பர்களின் கூட்டத்துடன் ஆத்மாநாம் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். நான் ஞானக்கூத்தனைச் சந்திக்கும்போது ஆத்மாநாம் உயிருடன் இல்லை.
என் அலுவலகம் சென்னை பீச்சிலிருந்தது. மாம்பலத்திலிருந்து பீச் வரை அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அலுவலகம் செல்லும்போது எதாவது புத்தகம் படிப்பது வழக்கம். ஒரு முறை ஞானக்கூத்தன் கவிதையை வாசித்தேன்.

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல,
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக்கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்
என்ன மாதிரி உலகம் பார் இது. சிர்றே

அன்று முழுவதும் இந்தக் கவிதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தக் கவிதை 'ஆறு கவிதைகள்' என்ற தலைப்பின் கீழ் செப்டம்பர் - நவம்பர் 1979 ஆண்டு 'ழ' இதழில் வெளிவந்தது.
நான் கவிதை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து ஞானக்கூத்தன் பெயர் புகழ் பெற்றிருந்தது.
ஞானக்கூத்தன் 'மீண்டும் அவர்கள்' என்ற புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார். “எத்தனையோ இழப்புகளுக்கிடையில் நான் கவிதைகளை எழுதி வந்திருக்கிறேன். அதற்கு அடிப்படையான ஒரு காரணம் உண்டு. அரசியல், திரைத்துறை என்ற இரண்டு ராட்சதத் துறைகளின் கருணையில்லாமல் என் கவிதைகள் எவ்வளவு தூரம் வெளியுலகுக்குத் தெரியவருகிறதென்று பார்க்கலாம் என்ற அறை கூவல்தான் அது' என்று எழுதியிருக்கிறார்.
பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை எழுதும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதில் ஞானக்கூத்தனின் பங்கு முக்கியமானது. கவிதை மரபைச் சற்று மாற்றி புதுக்கவிதை எழுதியவர்.
இவருக்கு முன்னோடியாக ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யம், கு.ப.ரா, புதுமைப்பித்தன் என்று குறிப்பிடலாம்
ஆனால் ஞானக்கூத்தன் கவிதை எழுதும் முறை மேலே குறிப்பிட்டவர்களை விட வித்தியாசமானது. மரபு அறிந்து புதிய முறை கவிதை எழுதியவர்களில் ஞானக்கூத்தன்தான் என்று கூட குறிப்பிடலாம்.
சர்ரியலிஸ பாணியில் 1970லிலேயே கவிதை எழுதத் தொங்கியவர். அவருடைய எட்டு கவிதைகள் இதற்கு உதாரணம்.
**************

27.07.2016 அன்று காலையில் எழுந்தவுடன் பொழுது சரியாக இல்லை என்று தோன்றியது. ஞானக்கூத்தன் வீட்டிலிருந்து தொலைப்பேசி வந்தது. நான் திகைத்துப் போய் தொலைப்பேசியை எடுத்தேன். காலை ஐந்தரை மணிக்கு ஒரு தொலைப்பேசி வந்தால் அது சற்று திகைப்பாகத்தான் இருக்கும் ஞானக்கூத்தன் நேற்று இரவு இறந்து விட்டார் என்று துக்க செய்தியைச் சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. "நீங்கள் தயவுசெய்து எல்லோருக்கும் தகவல் சொல்லி விடுங்கள்," என்றார்கள்.

ஞானக்கூத்தன் இறக்கும்போது அவருக்கு வயது 78. 
See less




    • Like
    • Reply
    • 2m

Comments