அழகியசிங்கர்
திருமதி ஆபா காந்தியின் நினைவுகளாக 14வது அத்தியாயத்திலிருந்து 24ஆம் அத்தியாயம் வரை இப் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.
ஆபா காந்தியை 12வயது சிறுமியாக இருக்கும்போதே அவருடைய தந்தை சேவா கிராம ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார். ஆபா காந்திக்குப் புரியவில்லை. அனாதைக் குழந்தைகளைத்தானே ஆசிரமத்தில் சேர்ப்பார்களே தான் அனாதை இல்லையே என்கிறார் அப்பாவிடம்.
வர்தாவிலிருந்து சேவா கிராமம் சுமார் 5 மைல் தூரம். முதலில் ஆபா காந்திக்கு விருப்பமில்லை. தன் தாயரை விட்டு வருகிறோமே என்று தோன்றியத. ஆபா காந்தியையும் அவர் அண்ணன் தீரேன் பாபியையும் அழைத்துக்கொண்டு சேவாகிராமம் வருகிறார் அவர்கள் தந்தையாகிய அம்ருத்லால்.
வீட்டு நினைவாகவே இருக்கிறார் ஆபா காந்தி. காந்திஜி வேடிக்கைப் பிரியர். "நான் வேடிக்கைக்காரனாக இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்று அடிக்கடி சொல்வார்.
"என்ன தீர்மானித்தாய்? இங்கே இருப்பாய் அல்லவா?" என்று கேட்கிறார்.
"ரொம்ப அம்மா ஞாபகம் வருகிறது. மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு வருஷம்தான் இங்கு இருப்பேன்" என்கிறார் ஆபா காந்தி.
ஆபா காந்தியை ஆசிரம வாழ்க்கைக்கு பழக்கப் படுத்துகிறார் காந்தி. முதலில் வங்காளி மொழி மட்டும் தெரியும் ஆபா காந்திக்கு. எட்டு மாதங்களில் ஹிந்தி கற்றுக்கொண்டு விடுகிறார். அம்மாவின் ஞாபகமும் வீட்டு நினைவும் வராத அளவுக்கு காந்திஜி ஆபா காந்திமீது அன்பு காட்டினார். அவருக்கு ஆசிரமம் பிடித்து விட்டது.
1200 கிலோ மீட்டர் தூர வெளி மாநிலத்திலிருந்து வந்த ஆபா காந்தி ஒரு வருடம்தான் ஆசிரமத்தில் இருக்கப் போவதாகச் சொன்னவர் வருடக்கணக்கில் இருந்துவிட்டார். இதற்குக் காரணம் காந்திஜி தாயைப் போன்று அவரைப் பார்த்துக்கொண்டதுதான்.
அதேபோல் ஆபாவிற்கு கஸ்தூர்பாயின் ஆதரவு அதிகம். ஒரு சமயம் ஜ÷ரம் 34 முறை வந்தது. அந்தச் சமயத்தில் பா (கஸ்தூர்பா) தான் அவரை தன்னுடன் தன் குடிலுக்கு அழைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டார். இதை நெகிழ்ச்சியுடன் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எப்போதுமே தன்னுடைய காரியத்தை பா யாரையும் செய்ய விரும்புவதில்லை. 1941ல் பா நோய்வாய்ப்பட்டார். அவர் கருக்கலில் குளியலரையில் வைத்திருக்கும் பானையில் காலைக்கடன் கழிப்பார். அந்தப் பானையை சுத்தம் செய்ய ஆபா எடுத்து வைத்துக்கொண்டார். பானையைப் பிடுங்கிக் கொண்டு, 'வேண்டாம், வேண்டாம்' என்று தடுத்துவிட்டார் பா. முடியாதத் தருணத்திலும் மற்றவரைத் துன்புறுத்தக் கூடாது என்று நினைத்தவர் பா. இந்த நிகழ்ச்சியை ஆபா பதிவு செய்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில்.
எப்படி காந்தி ஒரு இலட்சிய ஆசிரியர் என்பதை நிரூபிக்கிறார் என்பதை இந்தச் சம்பவம் மூலம் தெரியப்படுத்துகிறார் ஆபா.
ஒருநாள் குடிலுக்குப் போகும்போது மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்துவிடுகிறார் ஆபா. இதைப் பார்த்துக் கொண்டிருந்த காந்திஜி இப்படிக் கூறுகிறார் : " நீ ஒரு இலையைப் பறித்திருக்கிறாய். நீ மட்டும்தான் இந்தத் தவறைச் செய்கிறாய் என்பதில்லை. இது நம் எல்லோருக்கும் வழக்கமாகிவிட்டது. போகும்போதும் வரும்போதும் மரத்தைப் பார்த்தால் இலையைப் பறிப்பது, பூவைப்பார்த்தால் பூவைப் பறிப்பது. இது என்னை மிகவும் உறுத்துகிறது. வலி தருகிறது. இப்படி தேவையில்லாமல் பூ, இலை பறிப்பது ஒரு வகையில் ஹிம்சைதான். நமது நாட்டின் மாபெரும் விஞ்ஞானியான ஜகதீஷ் போஸ் சின்னஞ்சிறு செடிகளுக்கும் உயிர் உண்டு என்று என்னிடம் சொன்னதிலிருந்து மக்கள் என் கழுத்தில் மாலை போடுவதை நான் அனுமதிப்பதில்லை " என்கிறார் காந்தி.
அந்தக் காலத்திலேயே காந்திஜிக்கு கரோனா என்ற நோய் தொற்றிக்கொள்ளும் என்று தெரிந்திருக்கிறது போலும். இந்தச் சம்பவத்தைப் படித்தால் அப்படித்தான் உங்களுக்குத் தோன்றும்.
காந்திஜியிடம் இரண்டு கைக்குட்டைகள் இருக்கும். ஒன்று முகம், கை துடைக்க ஒன்பது அங்குல நீளமும், ஆறு அங்குல அகலமும் கொண்டது. இன்னொன்று அதைவிடச் சின்னது மூக்கை சுத்தம் செய்து கொள்ள. ஒருவர் காந்திஜியிடம், “பாபுஜி, நீங்கள் முகம் துடைக்க இவ்வளவு சின்ன துணியை ஏன் வைத்துக்கொள்கிறீர்கள்? என்று கேட்டார். காந்திஜி, இது போதுமானதாக இருக்கிறது. இவ்வளவு சின்ன துணி போதும் எனும்போது பெரிய துணியை ஏன் பயன்படுத்த வேண்டும்,? என்றார். அப்படியானால் நீங்கள் ஏன் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, காந்திஜி, சின்ன கைக்குட்டை மூக்கு சுத்தம் செய்ய, தும்மல் வந்தால் மூக்கின் முன் வைத்துக் கொள்வேன். எதிரேயிருப்பவர்கள் மீது எதுவும் பட்டுவிடக்கூடாதல்லவா? அதனாலேயே மூக்கையும் சுத்தம் செய்து கொள்வேன். மூக்கை சுத்தம் செய்த துணியால் முகம் துடைக்கக் கூடாது. தூய்மையின் கண்ணோட்டத்தில் அது நல்லது அல்ல..
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மாலை. அன்று தான் காந்திஜியை கோட்சே சுட்டுக் கொன்றான். உண்மையில் அன்று மாலை என்ன நடந்தது என்றால் சர்தார் வல்லபாய் படேல் காந்திஜியைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவாக அவர் காந்திஜியைப் பார்க்க வரும்போது ஆபா காந்தியும் மனு காந்தியும் அறையில் இருப்பார்கள். ஆனால் அன்று சர்தார் சில முக்கிய விஷயங்களைப் பேச வந்தார். ஆபாவும் மனுவும் வராண்டாவிற்கு வந்துவிட்டார்கள்.
ஐந்து மணி பிரார்த்தனை நேரம். எப்படி ஞாபகப்டுத்துவது என்ற தவிப்பு ஆபா காந்திக்கு. சர்தாருடன் பேசிக்கொண்டே இருக்கிறார் காந்தி. 8 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது. ஆபா காந்திக்குப் பொறுக்க முடியவில்லை. காந்திஜி பொதுவாக பிரார்த்தனையில் நேரத்தைக் கடைப்பிடிப்பவர். பேச்சை முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஜன்னல் வழியாகக் குதித்து பிரார்தனைக்கு ஓடினார். கொஞ்ச தூரம் கூட நடந்திருக்க மாட்டார். இடப்பத்கத்திலிருந்து ஒரு இளைஞன் வேகமாக காந்திஜி பக்கம் குனிந்தான். மனு அவனைத் தடுக்க முனைந்தார். அவன் அவரைத் தள்ளினான். மனுவின் கையில் உள்ள காந்திஜியின் மாலை, குவளை எழுது அட்டை எல்லாம் கீழே சிதறின. மனு அவற்றை எடுக்கக் கீழே குனிந்தாலோ இல்லையோ, டுமீல் டுமீல் டுமீல் என்று மூன்று குண்டுகள் காந்திஜி மீது பாய்ந்தன. அவை காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. காந்திஜியின் வாயிஙூருந்து ஹே ராம் ஹே ராம் என்ற சொற்கள் வெளிவந்தன. பக்கத்தில் ஆபா காந்தி இருந்ததால் அவருடைய உடல் பாரம் முழுவதும் ஆபா காந்தி மீது சரிந்தது. சமாளித்துக் கொண்டு காந்திஜியை தன் மடியில் தாங்கிக் கொண்டார்.
டாக்டர் பார்கவ் வந்து நன்கு பரிசோதித்த பின்பு நேருவையும் படேலையும் பார்த்து, பாபுஜி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்றார். நேருஜி குழந்தையைப் போல் தேம்பி தேம்பி அழுதார்.
Comments