Skip to main content

காந்தியுடன் நாங்கள்....1






அழகியசிங்கர்





காந்தியைப் பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும் அதன் மூலம் நமக்கு எதாவது செய்தி கிடைக்காமலிருக்காது.  நாம் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளாமலிருக்க மாட்டோம்.  அல்லது படித்துவிட்டு அப்படியா என்று ஆச்சரியப்படாமலிருக்க மாட்டோம்.  

நான் சமீபத்தில் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் வெளியிட்ட காந்தியுடன் நாங்கள் என்ற  புத்தகத்தைப் படித்தேன்.  இதை எழுதியவர்கள் கனு காந்தி மற்றும் ஆபா காந்தி.  இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தவர் டாக்டர் எம். ஞானம்.

கனு காந்தி காந்தியின் பேரன்.  ஆபா காந்தி கனு காந்தியின் மனைவி.  கடைசிவரை இவர்கள் இருவரும் காந்தியுடன் வாழ்ந்தார்கள்.  கனு காந்தியின் நினைவுகள், ஆபா காந்தியின் நினைவுகள் என்று இரண்டு பிரிவுகளாகப் புத்தகத்தைப் பிரித்துள்ளார்கள்.

பல தருணங்களையும், நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இந்நூலில் நினைவுச் சித்திரங்களாக வரைந்துள்ளனர்.  இவர்கள் இருவர்களும் காந்திஜியை எவ்வளவு நெருக்கத்தில் கண்டார்களோ, அவ்வளவு நெருக்கமாக அநேகமாக யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.  அந்த விதத்தில் இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான பதிவேடாக எனக்குத் தோன்றுகிறது.

முதல் 13 அத்தியாயங்கள்  கனு காந்தியும் அதன்பின் 24 அத்தியாயங்கள் வரை ஆபா காந்தியும் புத்தகத்தை எழுதி உள்ளார்கள்.  

          இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சிவாஜி நரஹரி பாவே சில முக்கியமான குறிப்புகளை முன்னுரையில் எழுதி உள்ளார்.  காந்திஜி 21 நாள்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.  ஆனால் ருசியான உணவுகள் அருந்தும் நம்மைப் போன்றவர்களின் முகத்தில் காணமுடியாத தேஜûஸ அவர் முகத்தில் காணும்பேறு அவருக்குக் கிடைத்ததாக எழுதி உள்ளார். காந்தியின் இந்திய சுயராஜ்யம் என்ற நூலைப் படித்துவிட்டு காந்திஜியின் குருநாதராகிய கோகலே, நீங்கள் இந்தியாவைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  நீங்கள் இந்தியா வரும்போது இதில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி வரும், என்றார்.

காந்திஜி அவர் அறிவுரையின்படி இந்தியாவைச் சுற்றி வந்தார்  மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில். காந்திஜிக்கு அவர் எழுதிய இந்திய சுயராஜ்யம் புத்தகத்தில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை.

பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் காந்தி.  கனு காந்தி குறிப்பிடுகிறார்.  ஒரு சமயம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, மன்னிக்க வேண்டும். மாலை பிரார்த்தனை  நேரம் வந்து விட்டது.  நான் நேரத்திற்குப் போக வேண்டும். என்னைப் போக அனுமதியுங்கள் என்று கூறியபடியே கூட்டத்திஙூருந்து எழுந்து விடுவார்.

பிரார்த்தனை என் உணவு, நான் உணவும், நீரும் இன்றி பல நாட்கள் இருந்து விடுவேன்.  ஆனால் பிரார்த்தனையோ, ராம நாமமோ இன்றி ஒரு கணமும் இருக்க முடியாது என்கிறார் காந்திஜி.

1939 கோடைக்காலம்.  சேவா கிராமத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.  மதிய நேரம்.  காந்திஜி வழக்கம்போல படுத்தபடியே கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தார்.  காந்திஜியின் பக்தையான அம்துஸ்ஸலாம் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தார்.  காந்திஜிக்குத் தூக்கம் வந்து விட்டது.  அவர் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்தார்.  1520 நிமிடங்கள் அந்தப் பெண்மணிக்கும் தூக்கம் வந்துவிட்டது.  அவர் தலையணையின் மீது சாய்ந்த உட்கார்ந்து கொண்டு விசிறியை வீச ஆரம்பித்தார்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டார்.  கையிஙூருந்து விசிறி நழுவி காந்திஜி மீது விழுந்து விட்டது.  காந்திஜி விழித்துக் கொண்டார்.  விசிறியை எடுத்து அந்தப் பெண்மணிக்கு விசிற ஆரம்பித்தார்.  நம் காந்திஜி இப்படிப்பட்ட மனிதர் என்று கனு காந்தி வியக்கிறார்.

ஆகாகான் மாளிகையில் காந்திஜியின் சிறைக் காவலின்போது 1943 இல் அவர் 21 நாள் உண்ணாவிரதம் துவங்கியபோது அவருக்குப் பணிவிடை செய்ய அரசாங்கம் கனு காந்திக்கு அனுமதி கொடுத்து விட்டது.  அவர் காந்திஜியுடன் ஆகாகான் மாளிகையில் இருக்க ஆரம்பித்தார்.  கனு காந்தியிடம் கேமரா இருப்பதைக் கண்ட காவலாளி, இதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.  ஆனால் கண்காணிப்பாளர் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்கக் கூடாது, என்றார். அவர் கனு மீது நம்பிக்கை வைத்து கேமராவை எடுத்துப்போக அனுமதித்தற்குக் காரணம் எப்போதும் சத்தியத்தை வற்புறுத்தும் காந்திஜியே ஆவார்.  கனு கேமரா வைத்திருந்தாலும், அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க காந்திஜி விடமாட்டார் என்று ஆங்கில அதிகாரிகளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. 
(இன்னும் வரும்)

Comments