அழகியசிங்கர்
பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது பகல் வண்டியாகப் பார்த்துப் பயணம் செய்வேன். புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன். ஆனால் புத்தகங்கள் மட்டும் படித்துக் கொண்டிருக்க மாட்டேன்.
சுற்றிலும் உள்ள மனிதர்களைக் கவனிப்பேன். ரயிஙலில் பயணம் செய்பவர்கள் விதம் விதமானவர்கள். இளைஞர்கள், வயதானவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் என்று பலர் இருப்பார்கள். ஆண்கள், பெண்கள். தமிழ் நாட்டில் பயணம் செய்யும்போது பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுபவர்கள். வேற மொழியும் சிலர் பேசுவார்கள்.
கல்லூரி படிக்கும் மாணவர்கள், மாணவிகள். காதலர்கள். எல்லா ஜாதியினரும் கூடும் இடம் ரயில் பெட்டியில்தான். ரயிலில் பயணம் செய்வதைப் பற்றி சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். டபுள் டக்கரில் நான் பெங்களூருக்குப் பயணம் செய்தபோது, ஒரு இளம் பெண் பாத்ரூம் போக கனமான கதவைத் திறக்கும்போது அவளுடைய கீழாடை நெகிழ்ந்து அவிழ்ந்து விட்டது. அவசரம் அவசரமாக அதைச் சரி செய்து கொண்டாள். அவளிடம் ஒரு அச்சம் தன்னை யாராவது பார்த்து விட்டார்களோ என்று. “உண்மையாக நடந்த நிகழ்ச்சியை டபுள் டக்கர் என்று கதையாக எழுதியிருக்கிறேன்.
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் புத்தகம் படிப்பதும் நடந்து கொண்டிருக்கும். அடிக்கடி வியாபாரிகள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் எதையாவது வாங்கிச் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். சில்லறைகளை பையில் வைத்துக் கொண்டிருப்பேன். யாராவது பிச்சைக் கேட்டால் எடுத்துக் கொடுப்பேன். புத்தகம் படிப்பது அகம். பார்த்துக் கொண்டிருப்பது புறம்.
Comments