அழகியசிங்கர்
படிப்பு
கால சுப்ரமணியம்
படிப்பதென்பது சிரமமான காரியம்தான்.
படித்தால் அறிவு வருகிறது
எதையும் யோசிக்க வைக்கிறது.
மற்றவர்களுடன்
எரிச்சலடைய வேண்டியிருக்கிறது
பிழைக்கத்தெரியாதவனாகிறான்
வெளியில் பெருமைப்படுத்தப்பட்டு
உள்ளுக்குள் சிரிக்கப்படுகிறான்.
கண்களில் தீட்சண்யம் மங்கி
கண்ணாடி போடுகிறான்.
வேலைகளைத் தட்டிக் கழித்து
அவசரமாய் மேய்ந்து
தூக்கமில்லாமல் அசைபோடுகிறான்.
மற்றவர்களுக்குப் பிரமிப்பூட்டும்
கனத்த புத்தகங்கள்
மந்திர எழுத்துகள்
இவனுக்குச் சாதாரணமாகின்றன.
முகம் கடுத்து தலை நரைக்கும்
வழுக்கையும் விழும் ,
நெற்றியில் கோடிழுக்கும்.
போதைவஸ்து வேறு தேவையில்லை
விளக்கு வெளிச்சங்களில் சிறைப்படுகிறான்
மற்றவர்களின் அர்த்தமற்ற வாழ்க்கையை
எண்ணிச் சிரிக்கிறான்.
படித்த விஷயங்களை ஞாபகப்படுத்தப்
படாதபாடு படுவான்
அவர்கள் சொல்வதைத்
தனதாகப் பாவித்துக் கொள்வான்
சுயமிழப்பான்
வெறும் வார்த்தை லட்சியங்களுக்கு
உயிரையும் விடுவான்.
படிப்பதைவிட ஆறறிவுக்கு
வேறு முக்கிய வேலை உள்ளதா என்ன?
நன்றி : மேலே சில பறவைகள் - கால சுப்ரமணியம் லயம் வெளியீடு - பக். 88 - விலை : 70 - தொலைபேசி : 9442680619
Comments