அழகியசிங்கர்
இந்த இதழ் மணல் வீடு பார்க்கும்போது ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 'சிறுபத்திரிக்கைகளின் சிறு என்னும் சாராம்சம்' என்ற தலைப்பில் பிரவீன் பஃறுளியின் கட்டுரைதான் காரணம்.
ஈரோட்டில் 03.08.2019 அன்று நடைபெற்ற சிற்றிதழ்களுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற 'நவீன விருட்சம்' சிறு சஞ்சிகை குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை.
அக்கட்டுரையில் காணப்பட்ட வைர வரிகளை இங்கே அளிக்கிறேன்.
....இந்த நவீன எழுத்தியக்கதின் ஊடும் பாவுமாக வெட்டிச் செல்லும் பல்வேறு போக்குகளும் மொழித்தடங்களும், இன்றைய குழப்படிகளுக்கும் இடையேயான ஒரு நெடிய பாதையில் “விருட்சம் இதழ் தனது அசாதாரணமான நிதானத்துடனும், பற்றிக்கொள்ளலின் பிடிவாதத்துடனும் தன் தொடர்ந்த பயணத்துடன் முப்பது ஆண்டுகள் என்ற பெரும் பரப்பைக் கடந்தும் நீண்டு வருகிறது.....
...விருட்சம் தன்னூடாகக் குறிப்பாகக் கவிதைகளின் வழி சாட்சிப் படுத்தியுள்ளது ஒரு முக்கிய இடம்.....
.....இன்று சிறுபத்திரிக்கைத் தளங்களை ஊடுருவிக்கும் கேளிக்கைகள், வெகுசனச் சீரழிவுகள், பொதுவெளி அதிகாரங்கள் நோக்கிய பிறழ்வுகள், இடைநிலை எழுத்து பாவனையிலான சமரச சமன்பாடுகள் என்பவற்றிற்குச் சிறிதும் உட்படாது, விலகி நின்று நவீன விருட்சம் தன் தார்மீகம் சிதையாது துணிந்தும் தனித்தும் சிற்றிதழ் காலப் பிடிவாதத்தையும் செருக்கையும், தன் இருப்பை உரத்து வைக்கும் இடமே அதன் தனித்துவமும் அழகும் ஆகிறது...
\
..ஒருவித அசௌகரியமும் பதற்றமும் கொள்ளும் மனம் ஒரு தலையங்கத்தில் வெளிப்படுகிறது...
இக் கட்டுரையை எழுதிய பிரவீன் பஃறுளியைப் பாராட்டுகிறேன். மணல் வீடு ஹரிகிருஷ்ணனுக்கும் என் நன்றி.
Comments