Skip to main content

பீச் முதல் தாம்பரம் வரை...

அழகியசிங்கர்





இந்த முறை நானும் மனைவியும் தஞ்சாவூர் சென்றோம்.  வழக்கம் போல் மயிலாடுதுறையில் தங்கினோம்.  நான் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும்போது, பகல் நேரத்துத் தொடர் வண்டியில் (டிரெயின்) செல்வேன்.  சோழன் வண்டியில் சென்றேன்.  கையில் புத்தகங்கள்.  தொடர்ந்து படித்துக்கொண்டு வந்தேன். சிலசமயம் தூங்கிக்கொண்டு வந்தேன்.  ஆனால் திருப்தியாக இருந்தது.
அடுத்த நாள் தஞ்சாவூர் செல்லும்போதும் பிரயாணிகள் வண்டியில் சென்றேன்.  காலையில் 7 மணிக்குச் சென்றேன்.  திரும்பவும் புத்தகங்கள்.  லேசாக தூக்கம்.  பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தஞ்சாவூரில் ஆரியாஸ் என்ற ஓட்டலில் சாப்பிட்டோம். சிறப்பாக இருந்தது சாப்பாடு.  திரும்பவும் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்தோம்.  மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டுத்தான் வந்தோம். ஒரு மணி நேரத்திற்கு மேல்  ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். திரும்பவும் புத்தகங்கள்.  இந்தச் சமயத்தில் ஒரு சிறுகதைத் தொகுப்பு முழுவதும் படித்துக் கொண்டிருந்தேன்.
சென்னை திரும்பும்போதும் படித்துக்கொண்டு வந்தேன்.  தூக்கம் வரும்போது தூங்கிக்கொண்டிருந்தேன்.  இந்த முறை புத்தகங்கள் படித்தது திருப்தியாக இருந்தது.  மேலும் ஒரு பத்திரிகையும், தினசரி தாள்களில் வெளிவந்த தலையங்கம் முதற்கொண்டு படித்துக்கொண்டு வந்தேன்.
சென்னை வந்தாயிற்று.  நான் படிப்பதும் நின்று விட்டது.  சென்னையில் மட்டும் என் கவனம் பலவாறு சிதறிக்கொண்டிருக்கிறது.  ஒருநாள் பொழுதில்  நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.  ஆனால் திடீரென்று தோன்றிக்கொண்டே இருக்கிறது.  கடற்கரையிலிருந்து பீச் வரை சீசன் டிக்கெட் வாங்கினால் என்ன என்று.  
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி வண்டியை எதாவது ஒரு கடை முன் நிறுத்தி விட்டு, மின்சார வண்டியில் ஏறி அமர்ந்து, எதாவது புத்தகமொன்றை படித்தால் என்ன? 
வீட்டில் இருந்தால் படிக்கவே போறதில்லை.  மின்சார வண்டியில் போனால் படிக்கத் தோன்றும்.  முதலில் மாம்பலத்திலிருந்து கிளம்பி பீச் சென்று விடுவது.  எந்த மின்சார வண்டியில் ஏறினேனோ அதிலேயே ஜன்னல் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து ஒரு புத்தகத்தைத் திறந்நு படிப்பது.   தாம்பரம் வரை அதில் போய் திரும்பவும் மாம்பலம் வந்து இறங்கி வீட்டிற்குப் போக வேண்டியது.  கிட்டத்தட்ட 2 மணி நேரம் கிடைக்கும். எல்லார் முன் புத்தகம் படிப்பது.  நான் சென்ற பல இடங்களில் பலரும் ùஸல் போன்களைத் திருகிக் கொண்டிருந்தார்கள்.  யாரும் சும்மாயில்லை.  அதைப் பார்ப்பதற்கு புத்தகம் திறந்து படிப்பது நல்ல விஷயமல்லவா?
இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?  பல தகவல்கள் கொண்ட தஞ்சை பெரிய கோயில் தல வரலாறை வாங்கினேன்.    



Comments