கதைகளைப் படித்தபடியே வந்தேன்... அழகியசிங்கர் மயிலாடுதுறையிலிருந்து நான் திரும்பி வரும்போது இரண்டு பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வந்தேன். ஒன்று காமதேனு என்ற பத்திரிகை. முதல் இதழ். இரண்டாவது ஆனந்தவிகடன். இது தவிர விருட்சம் இதழுக்கு அனுப்பிய கதைகள். இவையெல்லாவற்றையும் பகல் வண்டியில் படித்துக்கொண்டு வருவது என்று தீர்மானித்தேன். ஆனந்தவிகடனுக்கும் காமதேனுவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் புகைப்படங்கள்தான். உள்ளே வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது காமதேனு. படிக்கும்போது எனக்கு வீக் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஞாபகம் வந்தது. உள்ளே பெட்டி செய்திகளைப் போல் ஒரு முகம், சர்வதேசம், தேசம் என்று பல செய்திகளைக் கொட்டிக் கொடுக்கிறது காமதேனு. நான் இதை எழுதும் இந்தத் தருணத்தில் 4 இதழ்கள் வந்துவிட்டன. முதலில் நான் கதைகளைத் தேடித்தான் இந்தப் பத்திரிகைக்குள் நுழைந்தேன். என் கண்ணிற்கு எந்தக் கதையும் தென்படவில்லை. ஆனால் புனை என்ற தலைப்பின் கீழ் நர்சிம் அவர்கள் நதி என்ற கதை எழுதியிருக்கிறார். ...