Skip to main content

KEEP QUITE

அழகியசிங்கர்



நமக்கு சில வார்த்தை ரொம்பவும் யோசனை செய்ய வைக்கும். அதுமாதிரியான வார்த்தைதான் ஓஉஉட ணமஐபஉ.  நம்மால அப்படி அமைதியாய் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா என்பது தெரியவில்லை.  சும்மா அப்படி இருக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.  அப்படி இருந்துவிட்டால் பெரிய சண்டைகளே வராது.  ஆனா முடியுமா?  சமீபத்தில் யு ட்யூப்பில பாபாஜி அவர்கள் இது குறித்துப் பேசுவதைக் கேட்டேன்.  
அவர் குறிப்பிட்டதுபோல அப்படி இருந்து பார்த்தால் என்ன? உண்மையில் ஒருவர் அப்படி இருக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் நாம எதிலாவது மூக்கை நுழைப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது.  யார் நம்மைத் திட்டினாலும், எதாவது சொன்னாலும் காதில வாங்கிக்கொண்டு கீப் கொய்ட்டாக இருக்க முடியுமா? முடியாது..முடியாது.  ஆனால் அப்படி மட்டும் இருந்துவிட்டால் வாழ்க்கை பிரமாதமாக இருக்கும். யோசித்துப் பார்த்தால் நான் பெரும்பாலும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்.  என் அனுபவத்தை இங்கு பட்டியல் இடுகிறேன். ஆனால் இன்னும் இந்த கீப் கொய்ட்டைப் பற்றி யோசிக்க வேண்டும். பக்குவம் அடைய வேண்டுமென்று நினைக்கிறேன்.  கீப் கொயட் என்பது எப்போதும் உள்ள ஒரு நிலை.  அதை அடைய தவம் செய்ய  வேண்டும்.
என் வீட்டில் உள்ளவர்க்கு நான் புத்தகம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவது பிடிக்காது.  கீப் கொய்ட்டாக இருக்க வேண்டுமானால் புத்தகமே வாங்கிக்கொண்டு வரக் கூடாது.  நம்மாள அதுமாதிரி இருக்க முடியுமா?  சமீபத்தில் ஒரு புத்தகக் காட்சியில் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் விதம் பத்துப் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்.  உண்மையில் கீப் கொய்ட்டாக இருக்க வேண்டிய நான் அப்படி இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் யாருக்கும் தெரியாமல் புத்தகங்களை ஒளித்து வைக்க வேண்டும்.  முடியுமா?  கீப் கொய்ட் இங்கே எப்படி கொண்டு வருவது.  அதனால வண்டியிலே புத்தகக் கட்டை வைத்து விட்டு பூனைபோல் வீட்டிற்குள் நுழைந்து விட்டேன்.  பின் ராத்திரி வீடை பூட்ட நான் கிளம்பியபோது, புத்தகக் கட்டை மெதுவாக எடுத்துக்கொண்டு வந்து ஒரு ஓரத்தில் வீட்டில் இருப்பவருக்குத் தெரியாமல் வைத்துவிட்டேன்.  பின் அது குறித்து மூச்சு விடவில்லை.  எப்படி கீப் கொய்ட்டை கண்டுபிடித்தேன் பாருங்கள். உண்மையில் பிரச்சினை தீர்ந்து விட்டதாக நீங்கள் நினைத்து விடாதீர்கள்.  வீட்டில் உள்ளவர் ஒருநாள் நான் புத்தகங்கள் வைத்திருக்கும் இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, üஇந்தப் புத்தகம் எப்படி வந்தது.  முன்னே இல்லையே?ý என்று குரல் கொடுத்துக் கத்தும்போது, பாபாஜியின் அறிவுரை எனக்கு கை கொடுக்கும்.  அதாவது கீப் கொய்ட்.  எதாவது பதில் சொன்னால் மாட்டிக்கொண்டு விடுவோம்.  பதிலே சொல்லாமல் இருந்து விடுங்கள்.  எவ்வளவு அற்புதமாக பிரச்சினை தீர்ந்து விடுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
என்ன செய்வது நம்மால் சும்மா இருக்க முடியவில்லை. செலவு செய்து புத்தகங்கள் கொண்டு வருகிறோம்.  வீட்டில் இருப்பவருக்கத் தெரியாமல்தான் வேற இடத்தில் அவற்றை பத்திரப்படுத்த வேண்டி உள்ளது.  அந்தப் புத்தகங்களில் இருந்து இரண்டு இரண்டு புத்தகங்களாக எடுத்து நாலாவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறேன்.  அவர்கள் எதாவது எழுதினால் புத்தகங்களை ஒன்றிரண்டு பேர்கள் வாங்குவார்கள்.  ஆனால் பாருங்கள் அந்தப் பத்திரிகை நடத்துபவருக்கு எப்படி பாபாஜி சொன்னது தெரியும் என்பது தெரியவில்லை.  அவர்கள் கீப் கொய்ட்டாக இருந்து விடுவகிறார்கள்.  நமக்கோ அவதி.  என்ன ஆச்சு நம் புத்தகங்களுக்கு. வரப்பெற்றோம் என்று போட்டால் போதாதா என்றெல்லாம் அவதிப்படுவோம்.  இந்த இடத்தில்தான் நாமும் பத்திரிகைக்காரர்கள் மாதிரி கீப் கொய்ட்டாக இருக்க தெரிந்திருக்க வேண்டும்.  பிரச்சினையே இல்லை பாருங்கள். ஆனால் அச்சடித்தப் புத்தகங்களை வீட்டில் பார்க்கும்போது கீப் கொய்ட்டாக இருக்க தவறி விடுகிறது.
எனக்கு எழுத்தாள நண்பர்கள் பலர்.  இதில் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வது வாடிக்கையான ஒன்று.  'எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மீது விடத்தான் விடுவேன்,' என்று ஆவேசமாக ஒரு கவிஞர் என்னிடம் கத்தி சண்டைக்கு வருவதுபோல் வந்து விட்டார்.  அப்போது நான் கீப் கொய்ட்டாகத்தான் இருந்தேன்.  எழுதிய கவிஞரைப் பார்க்கும்போதும் கீப் கொய்ட்டாகத்தான் இருந்தேன்.  பிரச்சினை தீர்ந்து விட்டது.
ஆர்யக் கவுடர் ரோடில் ஒரு பேப்பர் கடை இருக்கிறது.  பிள்ளையார் கோயில் பக்கத்தில.  அந்தக் கடைக்காரர் சுற்றி பூனைகள் நடமாடிக்கொண்டிருக்கும்.  விருட்சம் என்ற பத்திரிகை தெரியுமா உங்களுக்கு. 29 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறேனே? அந்தக் கடைக்காரரிடம் விற்கக் கொடுத்தேன்.  பின் விற்றதா விற்றதா என்று பலமுறை போய்க் கேட்டேன்.  அவரிடமிருந்து அலட்சியமான பதில்தான் வந்தது.  அவரிடம்போய் விற்காத பத்திரிகையாவது பணமாவது கொடுங்கள் என்றால், அவர் அசையலே இல்லை.  ஆனால் அவரிடமிருந்த பூனைகள்தான் அசைந்து இங்கும் அங்கும் ஓடின.  கீப் கொய்ட் மந்திரம் செம்மையாகப் பயன் பட்டது.  
பல முறை கேட்டும் பலனளிக்காத அவர் கடை முன் நின்றுகொண்டு கீப் கொய்ட் என்ற கண்ணை மூடிக்கொண்டேன்.  பின் அங்கிருந்து வந்து விட்டேன்.  இப்போது நிம்மதியாக இருக்கிறது.  இப்படித்தான் நாம் பிரச்சினையை சரி செய்துகொள்ள வேண்டும்.
கோபலபுரத்தில் என் நண்பர் இருக்கிறார்.  ஒரு கூட்டத்தில் நான் வாங்கிய புத்தகத்தை அவர் நைஸôக படிக்கிறேன் என்று வாங்கிக்கொண்டு விட்டார். ஆனால் அவர் திருப்பியே தரவில்லை.  கீப் கொய்ட்டாக இருக்க வேண்டியிருந்தது.  அவரை எங்காவது பார்த்துவிட்டால் மனம் படபடப்பாக மாறி விடுகிறது.  ஆனாலும் கீப் கொய்ட்டாக இருந்தேன்.  ஒரு முறை ஒரு கூட்டத்தில் அவரைப் பார்த்துவிட்டேன்.  கீப் கொய்ட்டாக அவர் பார்க்காமல் நழுவி விடலாமென்று நினைத்தால் என் பக்கத்திலேயே அவர் உட்கார்ந்து விட்டார். நான் பேசாமல் அங்கும் இங்கும் பார்த்தேன்.  பின் அவர் பேசினார் : "உன் புத்தகம் என்னிடம் இருக்கிறது.  உனக்கு எதற்கு? நானே வைத்துக்கொள்கிறேன்.." என்றார்.  அப்போது நியாயமாக அவர் மீது எழுந்த கோபத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு கீப் கொய்ட்டாக இருந்தேன்.  கீப் கொய்ட்டாக அவர் பார்வையில் படாமல் ஒதுங்கியும் விட்டேன்.  இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களில் அவரைப் பார்த்தால் ஓட்டமாக ஓடி விடுகிறேன். கீப் கொய்ட் என்னை ஓட வைத்துவிட்டது.
 பாபாஜி பயன்படுத்திய கீப் கொய்ட்டை யோசியுங்கள். வாழ்க்கை அற்புதமாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் நடக்கும் எந்த அக்கிரமத்தைக் குறித்தும் நாம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  கீப் கொய்டாக இருப்பதைத் தவிர. உங்கள் வாழ்க்கையிலும் இதுமாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கும்.

Comments