அழகியசிங்கர்
நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜோல்னாப் பையை சுமந்துகொண்டு இருப்பேன். ஏன்? என் வங்கியில் நான் சேரும்போது (1978ஆம்ஆண்டு) நான்தான் ஜோல்னாப் பையை அறிமுகப்படுத்தினேன். என்னைப் பார்த்துதான் பெவ்வி என்ற யூனியன் அமைப்பில் உள்ள சிலர் ஜோல்னாப் பைகளை சுமந்து செல்வார். மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு ஜோல்னாப் பை வைத்திருப்பார். அதில் பெரும்பாலும் ஸமார்ட்போன், பர்ஸ் போன்றவற்றை வைத்திருப்பார். மறதி காரணமாக பலசமயம் பையோடு எல்லாவற்றையும் தொலைத்தும் விடுவார்.
என் நண்பர் ஒருவருக்கு நான் ஜோல்னாப் பையை சுமந்துகொண்டு வருவது பிடிக்காது. ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும்போதும் என்னை எச்சரிக்கை செய்வார். ஜோல்னாப் பையுடன் உங்களைப் பார்த்தால், பையை கிழித்து எறிந்து விடுவேன் என்று மிரட்டுவார். அவர் மிரட்டலுக்குப் பயந்து ஜோல்னாப் பையை அவர் கண்ணிற்குக் காட்டமாட்டேன். ஒரு ஜோல்னாப் பையைத் தயாரிக்க ரூ100 வரை செலவாகும். நான் துணி வாங்கிக்கூட ஜோல்னாப் பையை தயாரித்திருக்கிறேன். ஆனால் அந்த நண்பரைப் பார்க்க வரும்போது மட்டும் ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போக மாட்டேன். இன்னும் ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். ஜோல்னாப் பையில் நான் வைத்துக்கொள்ளும் பொருள்களும் முக்கியமானதாக கருதுகிறேன். பெரும்பாலும் புத்தகங்கள் இருக்கும். தின்பண்டங்கள் இருக்கும். காய்கறிகள் இருக்கும். காப்பிப் பொடி இருக்கும். தினசரிகள் இருக்கும். சிலசமயம் பர்ûஸக்கூட ஜோல்னாப் பையில் வைத்துவிடுவேன்.
நண்பரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் நான் ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போக மாட்டேன். ஏன் எனக்குக் கூட சிலசமயம் யாராவது ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு எதிர்பட்டால் எனக்கே பிடிக்காது. 28ஆம் தேதி மார்ச்சுமாதம் செவ்வாய்க் கிழமை காலையில் நண்பரைப் பார்க்கும்போது கூட ஜோல்னாப் பையைத் தவிர்த்துவிட்டேன். அதற்கு தண்டனையும் கிடைத்துவிட்டது.
என் டூ வீலரை சர்வீஸ் செய்யும் நாள் நெருங்கி விட்டதாக நினைத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் அங்கு ஒரே கூட்டமாக இருக்கும். காலை 6 மணிக்கே போகவேண்டும். ஆனால் 28ஆம்தேதி நண்பருடன் நடை பயிற்சிக்குச் சென்றுவிட்டு டூவீலர் சர்வீஸ் செய்யும் இடத்திற்கு 8மணிக்கு மேல் சென்றேன். ஆச்சரியம். டூவீலரை சர்வீஸிற்கு எடுத்துக்கொண்டார்கள். என் டூவீலருடன் வால்போல் எப்போதும் ஹெல்மெட் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த ஹெல்மேட்டை கையில் கொடுத்துவிட்டார்கள். அத்துடன் அதை லாக் பண்ணுகிற சங்கிலிப் பூட்டையும் சுமக்க வேண்டி வந்தது. கையில் புளூ நிற டைரி வைத்திருந்தேன். எல்லாவற்றையும் சுமந்துகொண்டு லொங்கு லொஙகென்று நடந்து வந்துகொண்டிருந்தேன்.
என் மனைவி இட்டிலி அல்லது தோசை செய்தால் சட்னி செய்து தர மாட்டார். மிளகாய்ப்பொடி அல்லது எப்போதும் பயன்படுத்தும் சாம்பார்தான் தட்டில் வைப்பார்கள். அதனால் இட்லியோ தோசையோ தட்டில் போட்டால் வேண்டா வெறுப்பாக சாப்பிடுவேன். அன்று சட்னி தயாரிப்பதற்காக தேங்காய் வாங்கிக்கொண்டு வரச் சொன்னார்கள். நான் வாங்கிக்கொண்டு கையில் எப்படி எல்லாவற்றையும் வைத்துக்கொண்வது தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். இரண்டு கைகளும் கொள்ளவில்லை. இத்தனையும் சுமந்துகொண்டு ஆர்யாகவுடர் தெருவில் உள்ள ஒரு பஸ்ûஸப் பிடித்தேன். படிக்கட்டுகளில் ஏறி நின்றபின் பஸ் திடீரென்று கிளம்ப நான் விழுந்தேன் படிக்கட்டில். பஸ்ஸிற்குள்ளே விழுந்து விட்டேன். காலில் நல்ல சிராய்ப்பு. பஸ்ஸில் தென்பட்ட சில இளம் பெண்கள் என் மீது பச்சாதப்பட்டார்கள். ஒருவர் என்னை கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் நண்பருக்காகப் பயந்து ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு வராத தவறை. முடிவு பண்ணினேன். நண்பருக்குப் பிடிக்காவிட்டாலும் ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போவது என்று. உண்மையில் அன்று ஜோல்னாப் பை மாத்திரம் இருந்திருந்தால் அடிப்பட்டிருக்காது.
ஜோல்னாப் பையை வைத்து நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஞானக்கூத்தனுக்கு இந்தக் கவிதை பிடிக்கும். அவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரிய கவிதையாக இருந்தாலும் இங்கு அளிக்கிறேன்.
ஜோல்னாப் பைகள்
விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை
சுமந்து வருவேன்
பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில்
கூவி விற்பார்கள் ரூபாய் பத்திற்கு
வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன்
வீட்டில் உள்ளவர்களுக்கு
ஏனோ பிடிப்பதில்லை
நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை
பைகளில் ஸ்திரமற்ற தன்மையால்
கொஞ்சம் அதிக கனமுள்ள
புத்தகங்களை சுமக்காது
ஓரம் கிழிந்து தொங்கும்
இன்னொருமுறை தையல் போடலாமென்றால்
மூன்று பைகளை வாங்கும்
விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள்
ஜோல்னாப் பைகள்
மெது மெதுவாய் நிறம் மாறி
வேறு வேறு விதமான
பைகளாய் மாறின
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை
உறவினர் வீட்டிலிருந்து
அளவுக்கதிமாய் தேங்காய்களை
உருட்டி வர
சாக்குப் பைகள் தயாராயின
மைதிலிக்கு மனசே வராது
என்னிடம் பைகளைத் திருப்பித் தர
வீட்டில் புத்தகக் குவியலைப்
பார்க்கும் கடுப்பை
பைகளில் காட்டுவாள்
ஆனால் என்னாலும் பைகளை விடமுடியவில்லை
பைகளில் இன்னது என்றல்லாமல்
எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய்
வீரன் கோயில் பிரசாதம்
மதியம் சாப்பிடப்போகும் பிடிசாதம்
வழுக்கையை மறைக்க
பலவித நிறங்களில் சீப்புகள்
உலக விசாரங்களை அளக்க
ஆங்கில தமிழ் பத்திரிகைகள்
சில க.நா.சு கவிதைகள். புத்தகங்கள்
எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்
போன ஆண்டு டைரி.
பின்
பின்
உடைந்த சில
கண்ணாடி வளையல் துண்டுகள்
பேப்பர் வெயிட்டுகள்
எல்லாம் எப்படி வந்தன பைக்குள்....
(08.03.11)
Comments