Skip to main content

உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்?



அழகியசிங்கர் 



நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன்.  ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன்.  அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார்.  தமிழில் எழுதவதை நிறுத்தி இருந்தார்.  கடுமையான சண்டை.  அல்லது பத்திரிகையே இல்லை எழுத.  அஞ்ஞானவாசம் மாதிரி தனித்து இருந்தார்.  நான் பிரமிளுடன் பேசிக்கொண்டிருந்தவன், வெங்கட் சாமிநாதன் எப்படி என்று அறிய ஆவல். வெங்கட் சாமிநாதன் எழுத்தில் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்கிற தன்மை இருக்கும்.  ஆனால் கடுமையாக விமர்சனம் செய்வார்.  பிரமாதமான உரைநடை.  அவர் உரைநடையில் நாவலோ சிறுகதையோ எழுதுவதாக இருந்தால் நன்றாக இருந்திருக்கம். அவர் தன்னை விமர்சகராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினார். அவரைப் போலவே கடுமையா க விமர்சனம் செய்பவர் பிரமிள். இவர்கள் இருவரும் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலை கலகலக்க வைத்தவர்கள்.

டில்லியிலிருந்து சென்னைக்கே வந்துவிட்டார் வெங்கட் சாமிநாதன்.  தனியாக வீடு கட்டிக்கொண்டு மடிப்பாக்கத்தில் இருந்தார்.  அடிக்கடி அவரைப் பார்ப்பதோடு அல்லாமல் போனில் பேசவும் செய்வேன்.

ஒவ்வொரு முறையும் வெங்கட் சாமிநாதனைப் பார்க்கும்போதும், தொலைபேசியில் பேசும்போதும், 'உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்?' என்று கேட்பார்.  எனக்கு யாரும் குருநாதர்கள் கிடையாது என்பேன்.  அவர் கடுமையாக, 'ஏன்யா பொய் சொல்றே அசோகமித்திரனும், ஞானக்கூத்தனும்தான் உன் குருநாதகள்தானே' என்பார். உங்களுடன் பேசுவதுபோல்தான் அவர்களுடன் பேசுகிறேன்.  அப்படியென்றால் நீங்களும் என் குருநாதர்தான் என்பேன்.  

என் மீது வெங்கட் சாமிநாதனின் இந்தக் கோபம் அவ்வளவு எளிதில் போகவில்லை. கடைசி வரை நீடித்திருந்தது.  கடைசியாக அவரை எப்படியாவது பார்க்க வேண்டுமென்று பெங்களுக்குச் சென்றபோது அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அப்போது அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன.  அந்தக் கடைசி முறை சந்திப்பிலும் அவர் கோபமாக இருந்தார்.  உங்கள் குருநாதர் என்னய்யா சொல்றாங்க என்று கிண்டலடித்தார்.

அவர்கள் மீத உள்ள இந்த வன்மத்தை கடைசிவரை விடவில்லை.  இத்தனைக்கும் அவர் நல்ல நண்பர்.  பல புத்தகங்களைப் படித்துவிட்டு தன் கருத்துக்களைத் தெரிவித்து கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்.   நான் அவருக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறேன்.  தில்லியிலிருந்து அவர் சென்னை வந்தபோது தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன். 

இதெல்லாம் தெரியப்படுத்துவது கூட ஆணவத்தின் செயல்பாடாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன்.  என்னைப் பார்த்தவுடன் சுர்ரென்று அந்தக் கோபம் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. போன் செய்தால் கூட, üஉன் குருநாதர்கிட்டே பேசு என்னிடம் ஏன் பேசுகிறாய்ý என்று சீறி விழும் அளவிற்குப் போய்விட்டவர்.  போனை வைத்துவிடுவார்.  இதற்குப் பயந்தே அவருடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தேன்.  அவருடைய கோபம் யார் மீது..பிரமிளிடமும் இந்தப் பிரச்சினை இருந்தாலும் வெங்கட்சாமிநாதனைப் போல் தீவிரமாக இல்லை. 

அசோகமித்திரனையும் ஞானக்கூத்தனையும் பார்த்து, உங்களை என் குருநாதர்கள் என்று சொல்லி வெங்கட் சாமிநாதன் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என்று சொல்வேன்.  அவர்கள் அதைக் கேட்டு சிரிப்பார்கள்.  

உண்மையில் நான் அசோகமித்திரனையும் ஞானக்கூத்தனையும் என் குருநாதராக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  ஞானக்கூத்தன் என்னை விட 15 ஆண்டுகள் மூத்தவர்.  அசோகமித்திரனோ 22 வயது பெரியவர்.  நான் வெங்கட் சாமிநாதனை மதிப்பதுபோல் அவர்களையும் மதித்தேன்.  வெங்கட் சாமிநாதனை எப்படி போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேனோ அதேபோல் ஞானக்கூத்தனையும், அசோகமித்திரனையும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  மேலும் சில ஆண்டுகள் நான் சென்னையில் இல்லை.  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அசோகமித்திரனுடனும் ஞானக்கூத்தனிடமும் என் நட்பு இயல்பாக இருந்தது.

நான் ஒவ்வொருவரிடமும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.  அப்படி கற்றுக்கொள்ளும்போது நான்தான் எனக்கு குருவாகவும், சீடனாகவும் இருக்க முடியும் போல் தோன்றுகிறது.

Comments