அழகியசிங்கர்
நா முத்துக்குமார் மரணம் அடைந்த செய்தி மதியம்தான் எனக்குத் தெரிந்தது. சினிமா பாடலாசிரியராக பிரபலமடைந்தாலும் நல்ல நண்பர். காஞ்சிபுரத்தில் உள்ள வெ நாராயணன் இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு போனபோது முத்துக்குமார் அப்பாவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் வீட்டில் ஒரு லைப்பரரி வைத்திருப்பதாக சொல்வார்கள்.
அவருடைய புதல்வர். என்று நா முத்துக்குமார் சென்னையில் ஒரு முறை அறிமுகப்படுத்திக்கொண்டார். தான் கவிதைகள் எழுதுவதாகவும் அதையெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர என் அறிவுரையைக் கேட்டார். அப்போது அவர் சினிமாப் பாடலாசிரியராக பிரபலமாகவில்லை. கவிதைப் புத்தகம் கொண்டு வந்தாலும் அதிகப் பிரதிகள் அச்சடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறினேன்.
அவருடைய திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். சென்றிருந்தேன். குறுகிய காலத்தில் பிரபலமானவர். அவரை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*******
ஞானக்கூத்தனின் அஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. கிட்டத்தட்ட 100 பேர்கள் கலந்து கொண்டார்கள். ஒரு மூத்த எழுத்தாளர் பேசும்போது அவரைவிட மூத்த படைப்பாளியை அவமரியாதையாகப் பேசினார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எப்போதோ ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது. அதைக் குறித்து இப்போது கோபப் படுவதோ வருந்துவதோ தவிர்த்திருக்கலாம். மேலும் அஞ்சலி கூட்டம் என்று சொல்வதை விட ஞானக்கூத்தனை ஞாபகப்படுத்தும் கூட்டம் என்று மாற்றி அமைத்திருக்கலாம். அஞ்சலி கூட்டம் என்று சொல்லும்போது தேவையில்லாத சோகம் சூழ்ந்து விடுகிறது. ஞானக்கூத்தனே அதை விரும்பியிருக்க மாட்டார்.
********
நேற்று காலை ஐந்தரை மணிக்கு பெஸன்ட் நகர் பீச்சில் உள்ள கடற்கரைக்கு ஒரு கதை வாசிக்கும் கூட்டத்திற்குச் சென்றேன். எல்லோரும் இளைஞர்கள். 30 பேர்கள் வநதிருப்பார்கள். பெரும்பாலோர் ஆங்கிலத்தில் கதை வாசித்தார்கள். எப்படி ஒரு கதையை திரும்பவும் எழுத வேண்டுமென்று அதை நடத்துபவர் சொன்னதாக சொன்னார். அதெல்லாம் சரி. ஆனால் சொன்னவருக்கு இதில் எந்த அளவிற்கு திறமை இருக்கும் என்பதும் சந்தேகம்தான். அவர்கள் வாசித்த கதைகளை உள்வாங்கிக் கொள்வதில் சிரமமாக இருந்தது.
Comments