Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 5

அழகியசிங்கர் 

 அக்டோபர் முதல் நாளில....

ந பெரியசாமி



நேற்று சிற்றுண்டி முடித்து
வாசலில் அமர்ந்திருந்தேன்
கொஞ்சம் ஆட்டுப்பால் வேண்டுமென
காந்தி வந்தார்
பட்டியே இல்லை
ஆட்டிற்கு எங்கே போகவென்றேன்
பரிதாபமாக எனைப் பார்க்க
இருவரும் பயணித்தோம்
பட்டிகளைத் தேடி
பெரும் யாத்திரையாகிட
களைத்துத் திரும்பினோம்
கசாப்புக் கûடையொன்றில்
தொங்கும் ஆடு பார்த்து
அழுது புரண்டார்
பெரும்பாடாகிவிட்டது
தேற்றி இடம் கடந்து வர
சிறு தொலைவுக்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்
வேண்டாம் போகலாம் என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து
மது அருந்துகிறார்கள் என்றேன்
ஹேராமென தலையிலடித்து
அரசு என்ன செய்கிறது
பார்வையைக் கேள்வியாக்கினார்
சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசென்றேன்
ஐயோவென மயங்கிச் சரிந்தார்
இதுதான் சமயமென
பாக்கெட் பாலில் நீர் கலந்து
முகம் தெளித்தேன்
அரை மயக்கத்தில் ஆட்டுப் பாலாவென்றார்
ஆம் என பொய்யுரைக்க
சுவை இல்லை என்றார்
எல்லாவற்றிலும் கலப்படமென்றேன்
எங்கு எப்படி கிடைத்ததென
கேட்கத் துவங்கும் முன்னே
இனி உங்கள் ஜனன நாளில் மட்டும்
வாருங்கள் என்றேன்

போதுமடா சாமி
என்றார் காந்தி

நன்றி : தோட்டாக்கள் பாயும் வெளி - ந பெரியசாமி - கவிதைகள் - விலை : ரூ.70 - வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 98426 47101



;;













     

Comments